Published : 20 May 2017 11:22 AM
Last Updated : 20 May 2017 11:22 AM

குழப்பம் விளைவிக்கும் ‘கூகுள் டாக்டர்’

என் நண்பர் ஒருவருக்கு வயிற்று வலி. மூன்று நாளுக்கு மேல் வலி தொடர்ந்தது. ஆனாலும் அவர் மருத்துவரிடம் போகவில்லை. அலுவலகத்தில் இருக்கும்போதே இணையத்தில் வயிற்று வலி பற்றிய குறிப்புகளைத் தேடிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அப்படித் தேடிய ஒரு தளத்தில், வயிற்றுவலி தொடர்பான மேலும் சில அறிகுறிகளைப் பட்டியல் இட்டிருந் தார்கள். நண்பருக்கு அனைத்தும் இருப்பதுபோல் ஒரு பிரமை சூழ்ந்தது. இறுதியில் அவருடைய வயிற்றில் கேன்சர் இருப்பதாக, அவரே உறுதி செய்துகொண்டு நேராகப் புற்றுநோய் நிபுணரிடம் சென்றுவிட்டார்.

பல பரிசோதனைகள், பல மருத்துவர் களைக் கண்ட பின் அவருக்கு இருந்தது வாயுத் தொல்லை என்றும், அத்துடன் லேசாக வயிற்றுப் புண்ணும் இருந்தது கண்டறியப்பட்டது. உரிய மருந்துகளைச் சாப்பிட்ட சில வாரங்களில் அவருக்குச் சரியாகிவிட்டது. ஆனால், அவருடைய அதீதப் பயத்தைப் போக்கத்தான் இப்பொழுது மனநல மருத்துவரிடம் போய்க்கொண்டிருக்கிறார். இந்த அவலம் தேவையா?

மாறாத வதந்திகள்

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்று உலகையே சிறு கிராமமாக்கி விட்டது. சமூக வலைத்தளங்கள், ஸ்மார்ட் போன், வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் வருகையால், விரல் நுனியில் தகவல்கள் குவிந்துவிடுகின்றன. விஞ்ஞானத்தின் வளர்ச்சி நன்மைகளைக் கொண்டுவந்தாலும், அதை முறைகேடாகப் பயன்படுத்த நினைப்பவர்களால் சமூகத்தில் பல குழப்பங்களும் உருவாகின்றன. அதில் முக்கியமான ஒன்று மருத்துவர்களைச் சமீப காலமாகப் பாடாய்ப்படுத்தும் தவறான மருத்துவத் தகவல்கள், வதந்திகள்.

நம்பிக்கை சார்ந்த மருத்துவக் குறிப்புகள், வதந்திகள், மூடநம்பிக்கை கள் போன்றவை எல்லாம் திடீரெனப் பிறந்தவை அல்ல. காலம் காலமாக இருப்பவைதான். ஆனால் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் முன்னைவிட அவை அதிவேகமாகப் பரவி விடுகின்றன. புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் வருவதால் பலர் அதை நம்பவும் செய்கிறார்கள் என்பதுதான் இதில் அவலம். “வாட்ஸ்அப்பில் வந்தால் சரியாகத்தான் இருக்கும்” எனப் பலரும் தீவிரமாக நம்புகிறார்கள். அத்துடன் இணையத்தில் இருக்கும் மருத்துவக் குறிப்புகளைப் படித்துவிட்டு மருத்துவர்களிடம் சந்தேகத்துக்கு மேல் சந்தேகங்களைக் கேட்டுத் துளைத்தெடுக்கிறார்கள்.

அரைகுறை அறிவு

என்னுடைய நண்பர் ஒருவர் தன் மகனின் வலிப்பு பிரச்சினைக்காக மனநல மருத்துவர் ஒருவரிடம் சென்றிருந்தார். மருத்துவர் பரிசோதித்துவிட்டுச் சில மருந்துகளைப் பரிந்துரைத்தார். அதற்கு முன்பே என் நண்பர் தன் ஸ்மார்ட்ஃபோனில், இணையம் வழியாகச் சில தகவல்களைப் படித்துவிட்டு, “டாக்டர் இந்த மருந்தை உட்கொண்டால், லிவர் கெட்டுபோய்டுமாமே? சாப்பிடலாமா?” என்று கேட்டிருக்கிறார்.

கோபமடைந்த மருத்துவர் “மருந்தைச் சாப்பிடவில்லை என்றால், மூளை கெட்டுப்போய்டும் பரவாயில்லையா?” என்று பதிலுக்குக் கேட்டாராம்.

மருத்துவர்களிடம் சந்தேகம் கேட்கக் கூடாது என்பதல்ல. ஒவ்வொரு நோயாளிக்கும் தனக்குக் கொடுக்கப்படும் சிகிச்சை பற்றித் தெரிந்துகொள்ள முழு உரிமை இருக்கிறது. அரைகுறை அறிவுடன் மருத்துவக் குறிப்புகளைப் படித்துவிட்டு எழுப்பப்படும் சந்தேகங்கள்தான் இங்கே பிரச்சினை.

என்ன செய்வது?

முதலில் டிஜிட்டல் வழியாகப் பார்க்கும் மருத்துவத் தகவல்கள் எதுவாக இருந்தாலும், அவற்றை அப்படியே நம்ப வேண்டாம். அந்தத் தகவல்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களால், மருத்துவ இணையதளங்களிலோ அல்லது அரசிடமிருந்தோ வந்திருக்கின்றனவா என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அல்லது நம்மிடம் நல்ல உறவைப் பேணும் மருத்துவரிடம் அது பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மாறாக, நச்சரிப்பது நல்ல விளைவைத் தராது.

அடுத்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் அல்லது வலைத்தளத்தில் ஒரு தகவல் கூறப்பட்டிருந்தாலும் அது பொதுவான தகவலாக இருக்கலாம். எல்லோருக்கும் அதே அறிகுறிகள், அதே பக்கவிளைவுகள் ஏற்பட வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.

இணையதளங்களில் ஒரு நோய் குறித்து அனைத்து விதமான சாத்தியங்களிலும் பட்டியலிட்டிருப்பார்கள். இப்படிப்பட்ட இணையதளங்களின் நோக்கம் வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுத்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளச் செய்வது மட்டும்தான். சுய மருத்துவம் பார்த்துக்கொள்வதற்கு அல்ல. இணையத்தைப் பார்த்து நோயைச் சுயநிர்ணயம் செய்துகொள்வதும், அதற்கு நாமே மருத்துவம் பார்த்துக்கொள்வதும் பேராபத்தை விளைவிக்கக்கூடும். முறையான சிகிச்சைக்கான காலதாமதமும், தவறான சுயசிகிச்சையும் மீள வழியில்லாத நிலைக்கு நம் உடலைக் கொண்டுபோகும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை.

இணையப் போலி மருத்துவர்கள்

மற்றொரு முக்கியப் பிரச்சினை வாட்ஸ்அப்பிலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ பரவும் தகவல்கள் அனைத்தும் அப்படியே உண்மை என்று நம்புவதுதான்.

மாற்று மருந்துகள், பாரம்பரிய மருந்துகள், எய்ட்ஸுக்கு மருந்து, புற்றுநோய்க்கு மருந்து என்று போலி மருத்துவர்களும், அவர்களுடைய மருத்துவக் குறிப்புகளும் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன. அவை வாட்ஸ்அப்பிலும் வலம் வருகின்றன. புற்றுநோய்க்கு அகத்தியர் கூறிய சித்த மருத்துவக் குறிப்பு என்றொரு தகவல் வாட்ஸ்அப்பில் வருவதாகவும், பல புற்றுநோயாளிகள் அதை நம்பி மருத்துவம் பார்த்துக்கொள்ள மறுப்பதாகவும் எனக்குத் தெரிந்த சித்த மருத்துவர் ஒரு முறை வருத்தப்பட்டார். ‘மாற்று மருத்துவர்கள்’ என்ற பெயரில் சில போலிகள் முன்பு பிட் நோட்டீஸ் வழியாகவே கணிசமாகப் பரவினார்கள். வாட்ஸ்அப் அவர்களுடைய வளர்ச்சியை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்க வைத்துவிட்டது.

மருத்துவத் தெளிவு

அதேநேரம், இணையத்தில் கூறப்படும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் குறிப்புகள்கூடப் பொதுவானவைதான். அதைப் படித்து அஞ்சத் தேவையில்லை. அது பெரும்பாலும் மருத்துவர்களுக்கான குறிப்புகள்தான். சில மருந்துகளின் பக்க விளைவுகள் அல்லது ஒவ்வாமை பற்றிய தகவல்களும் இணையத்தில் இருக்கும்.

பொதுவாக ஒருவருடைய ஒவ்வாமைகளை உறுதி செய்த பின்னரே மருத்துவர்கள் மருந்தைப் பரிந்துரைப் பார்கள். நாமும் சில சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம். மருந்தை உட்கொண்ட பின் உடலில் மாற்றங்கள் நிகழ்ந்தால், மருத்துவருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

தேவை உடனடி மருந்து

ஒரு விஷயம் மக்களின் பெரும்பான்மை பயன் பாட்டுக்கு வந்துவிட்டாலே அதைப் பற்றிய ஒரு கொள்கை, சட்டம், வழிகாட்டிகளை அரசு உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இப்பொழுது டிஜிட்டல் மருத்துவ வதந்திகள் பரவலுக்கு எதிராக அரசுடன் இணைந்து மருத்துவர்கள் மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்ட தகவல் தளங்கள், உதவிகள் மூலம் தவறான தகவல்கள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவ மாணவர்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் உதவியுடன் இதை மேற்கொள்ளலாம். போலியான மருத்துவத் தகவல்கள், மருத்துவ வதந்திகள் ஏற்படுத்தும் மன உளைச்சலும், பயமும், தகவல் தொழில் நுட்பம் கொண்டு வந்திருக்கும் புது வகை நோய்க் கிருமி. அதைத் தகவல் தொழில்நுட்பத்தை வைத்தே எதிர்க்க வேண்டிய அவசரத்தில் இருக்கிறோம்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: write2vinod11@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x