Published : 16 Dec 2013 12:07 PM
Last Updated : 16 Dec 2013 12:07 PM

மாற்று மருத்துவங்களில் மகத்தான எதிர்காலம்

எம்.பி.பி.எஸ். தவிர்த்த இதர மருத்துவப் பட்டப்படிப்புகள் குறித்து நேற்று பார்த்தோம். அந்த படிப்புகளின் தன்மை, மேற்படிப்புகள், வேலைவாய்ப்பு குறித்து பார்க்கலாம்.

#பேச்சுலர் ஆஃப் சித்தா மெடிசன் அண்ட் சர்ஜரி. சங்க இலக்கியம் தொடங்கி சித்தர் பாடல்கள் வரை இதில் பாடங்கள் உண்டு. தமிழ்ப் புலமை அவசியம். இதன் பூர்வீகம் தமிழகம். இதில் எம்.டி. இன் சித்தா மூன்று ஆண்டு மேற்படிப்பு உண்டு. தவிர, ‘சென்டர் ஃபார் அட்வான்ஸ்டு ரிசர்ச் இன் இண்டியன் சிஸ்டம் ஆஃப் மெடிசன்’-ல் ஆராய்ச்சிப் படிப்புகளையும் மேற்கொள்ளலாம்.

#பேச்சுலர் ஆஃப் ஆயுர்வேதா மெடிசன் அண்ட் சர்ஜரி. இது பழமையான இந்திய மருத்துவம். வருமுன் காப்பது இதன் அடிப்படை. மூலிகைகள், கனிமங்களை வைத்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. மசாஜ், தியானம் உண்டு. மூன்றாண்டு மேற்படிப்பான எம்.டி இன் ஆயுர்வேதாவில் இன்டர்னல் மெடிசன், சைக்கியாட்ரி அண்ட் சைக்காலஜி உள்பட ஒன்பது பாடப் பிரிவுகளைப் படிக்கலாம்.

#பேச்சுலர் ஆஃப் ஹோமியோபதி அண்ட் சர்ஜரி. இந்த மருத்துவத்தின் பூர்வீகம் ஜெர்மனி. பின்பு இந்தியாவில் காலூன்றியது. மெதுவாக ஆனால், முழுமையாக குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் பார்மஸி, பிராக்டிஸ் ஆஃப் மெடிசன். பீடியாட்ரிக்ஸ், பிலாஸபி ஆகிய மூன்றாண்டு மேற்படிப்புகள் இருக்கின்றன.

#பேச்சுலர் ஆஃப் நேச்சுரோபதி அண்ட் யோகிக் சயின்ஸ். இந்த மருத்துவமும் ஜெர்மனியில் தோன்றி இந்தியாவில் காலூன்றியது. இதில் தண்ணீர் தெரபி, காற்று தெரபி, மண் தெரபி, உணவு தெரபி, மசாஜ் தெரபி மற்றும் அக்கு பிரஷர் மூலம் சிகிச்சை அளிப்பார்கள். யோகாவும் உண்டு.

#பேச்சுலர் ஆஃப் யுனானி மெடிசன் அண்ட் சர்ஜன். இது உருது, அரபி மொழிவழிக் கல்வி. இதில் அனாடமி, பெத்தாலஜி, பொது மருத்துவம் உள்பட ஒன்பது மேற்படிப்புகள் உள்ளன. மூலிகைகள், கனிமங்கள், சில விலங்குகளின் உடல்கூறுகளை வைத்து மருந்து தயாரித்து சிகிச்சை அளிப்பார்கள்.

மருத்துவத்திலும் மக்கள் மாற்றம் தேடுகிறார்கள். மேற்கண்ட இந்திய மருத்துவ முறைகளை இன்று உலகம் முழுவதும் மக்கள் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர். யோகா மற்றும் தியானத்தில் மட்டும் கோடிக்கணக்கான டாலர்கள் புரள்கின்றன. இப்படிப்புகளை முடித்தவர்கள் சொந்தமாக மருத்துவமனைகள், மசாஜ் நிலையங்கள், பாடி ஃபிட்னஸ் மையங்கள் நடத்தலாம்.

அரசு, தனியார் துறையிலும் மருந்து நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ஜெர்மன், ஃபிரெஞ்ச், உருது, அரபி மற்றும் ஆங்கில அறிவு இருந்தால் உலகம் முழுவதும் கோலோச்சலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x