

யூ.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற முதலில் தேவை தன்னம்பிக்கை” என்கிறார் இந்திய ராணுவக் கணக்குப் பணிக்குத் (Indian Defence Accounts Service-IDAS) தேர்ந்தெடுக்கப்பட்ட கே.புருஷோத்தமன். 2012-ம் வருட பேட்ச்சை சேர்ந்த இவர் திருச்சியின் ராணுவ கனஉலோக ஊடுருவி தொழிற்சாலை மற்றும் ராணுவப் படைக்கலன் (துப்பாக்கி) தொழிற்சாலை ஆகியவற்றின் துணை நிதி ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
எப்போதும் நாளிதழ் வாசிப்பேன்
குடியாத்தம் தாலுக்காவின் அக்ராவரம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது தந்தை ஜி.குமாரசுவாமி அரசு மேல்நிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற உடற்பயிற்சிக் கல்வி இயக்குநர். சிறுவயதிலிருந்தே வீட்டில் தமிழ் நாளிதழ் வாசிக்கும் வழக்கம் புருஷோத்தமனுக்கு இருந்தது. இதன் மூலமாகப் பொது அறிவை வளர்த்துக்கொண்டு குவிஸ் போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்.
நாளிதழில் யூ.பி.எஸ்.சி. வென்றவர்களைப் பற்றிய செய்திகளை வாசித்த பிரமிப்பில்தான் அதை எழுதும் ஆர்வமும் முதன்முதலில் புருஷோத்தமனுக்கு வந்தது. அதே நேரத்தில் திருச்சி தேசிய பொறியியல் கல்லூரியில் பி.டெக். எலக்ட்ரிக்கல்ஸ் படித்தவர் புனேவில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலையில் சேர்ந்தார். ஆனால், யூ.பி.எஸ்.சி.யில் வெற்றி பெறும் கனவு வளரவே வேலையை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்வு எழுதினார். மூன்றாவது முயற்சியில் ஐ.டி.ஏ.எஸ். ஆனார்.
“புவியியலையும் பொது நிர்வாகத்தையும் விருப்பப்பட்டுத் தேர்ந்தெடுத்தேன். 2010 வரை முதல்நிலைத் தேர்வுக்கே தனியாக ஒரு விருப்பப்பாடம் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. ஆனால், 2011-க்குப் பிறகு சிசாட் தேர்வு முறையில் முதல் நிலையின் விருப்பப் பாடம் அகற்றப்பட்டு எளிதாக மாறியது.
இதனால் முதல் நிலையிலும் புவியியலைத் தேர்ந்தெடுத்தேன். அதில் இரண்டாம்நிலை தேர்வில் 600-க்கு 367 மதிப்பெண்கள் பெற்றேன். நேர்முகத் தேர்வில் வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தது ‘எப்படியும் ஒரு வேலை கைவசம் இருக்குது, இழப்பதற்கு ஒன்றுமில்லை!’ என்கிற தைரியம்தான்” என்கிறார் புருஷோத்தமன்.
டெல்லி ராவ்ஸ் யூ.பி.எஸ்.சி. பயிற்சி நிலையத்தில் ஒரு வருடம் பயின்றார் புருஷேத்தமன். உடல்நிலை சரியில்லாததால் ஆரம்பத்தில் முதல்நிலையில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதற்கிடையே, 2009-ல் மத்திய உளவுத்துறையின் தேர்வு எழுதி துணை மத்திய உளவு அதிகாரி பணி கிடைத்தது. அந்த வேலையைச் செய்துகொண்டே பயிற்சி பெற்று மூன்றாவது முறையில் யூ.பி.எஸ்.சி.யில் வென்றார்.
ஐ.டி.ஏ.எஸ். பணியின் தன்மை
ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். பணிக்குக் குறி வைத்தாலும் புருஷோத்தமன் ஏழாவது விருப்பமாகக் குறிப்பிட்ட ஐ.டி.ஏ.எஸ். கிடைத்துள்ளது. ஆங்கிலேயரால் தொடங்கப்பட்ட இத்துறையில் குறிப்பிட்ட மாநிலப் பிரிவு என்பது கிடையாது. நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணி செய்ய வேண்டியிருக்கும்.
இவர்கள், தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, கடலோரக் காவல் படை, படைக்கலன் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். இதில், ராணுவத்துக்கு வருடந்தோறும் ஒதுக்கப்படும் கிட்டத்தட்ட மூன்று லட்சம் கோடி ரூபாய் நிதியை நிர்வகிப்பதும், ஆலோசனை அளிப்பதும், அது சரியாகச் செலவு செய்யப்படுகிறதா என்பதை கண்காணிப்பதும்தான் முக்கியப் பணி.
இறுதியில், அவ்வாறு செலவிடப்பட்டது முறையானதா என ஆடிட்டிங் செய்ய வேண்டும். இதில் ஆகும் செலவு குறித்த கணக்கு வழக்குகளைக் கணக்கிட ஐ.டி.ஏ.எஸ். அதிகாரிகளின் கீழ் பலரும் உண்டு. இப்பணியில், ராணுவ உடைகள் அணிய வேண்டியதில்லை.
அன்றாடம் ஓடுதல் உட்பட உடற்பயிற்சிகள் மற்றும் ஆயுதம் ஏந்துதலும் தேவை இல்லை. இவர்களுக்கு ராணுவத்துடன் அன்றி தனியாகவும் அலுவலகங்கள் இயங்குகின்றன. இதில், மற்ற அரசு அலுவலகங்களின் அதிகாரிகளைப் போல் பணியாற்றலாம். சிறப்பான ஊதியமும் உண்டு.
“நிதி தொடர்பானது என்பதால் அதிகப் பொறுப்பான பணி இது. இதில், நிதி வீணாகாமல் தேவைக்கு ஏற்றபடி செலவு செய்ய வைப்பதுதான் முக்கியக் கடமை. என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன் அனைவராலும் யூ.பி.எஸ்.சி. வெல்ல முடியும். ஓரிரு முயற்சிகளில் வெல்ல முடியாமல் தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. தொடர்ந்து நம்பிக்கையுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்” என்கிறார் புருஷோத்தமன்.
வெற்றி வழிகள்
சிறுவயது முதல் யூ.பி.எஸ்.சி. ஆர்வம் இருந்தாலும் பயந்துகொண்டே இருந்தேன். அப்படி தன்னம்பிக்கை குறைவாக இருந்ததால்தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். கிடைக்கவில்லை என நினைக்கிறேன். எனவே, பயிற்சியுடன் தன்னம்பிக்கையும் அவசியம். அதற்காக பயிற்சி நிலையத்தில் சேர்ந்துவிட்டால் போதும் என்றில்லை. சொல்லப்போனால் பயிற்சி நிலையத்தில் அடிப்படைப் பாடங்கள் மட்டுமே சொல்லித்தரப்படும். ஆக, ஆறாவது முதல் பிளஸ் டூ வரையிலான என்.சி.இ.ஆர்.டி நூல்களின் அறிவுடன், நாளிதழ்களில் அன்றாடம் செய்திகளைப் படித்த பின்னர் அவற்றைக் குறித்து ஆழமாக அறிவும் புரிதலும் பெற இணையதளங்களில் தேடிப் படிப்பேன்.
குறிப்பாக, தேசிய செய்திகள், பொருளாதார- சமூகச் செய்திகள், அடிப்படை உரிமைகள், இந்திய அரசியல் சட்டம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றை விரிவாகவும் தெளிவாகவும் படித்தேன்.