Last Updated : 02 Jun, 2017 09:57 AM

 

Published : 02 Jun 2017 09:57 AM
Last Updated : 02 Jun 2017 09:57 AM

வர்ணனையாளரான ரசிகர்!

கபடி, கிரிக்கெட், கால்பந்து, என உள்ளூர் ஆட்டம் முதல் உலக விளையாட்டுகள்வரை எல்லாவற்றையும் தமிழ் மணத்தோடு தர வந்துவிட்டது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல். “சொல்லி அடி…மச்சி ஆர் யூ ரெடி” என்கிற டீசரைப் பார்க்கும்போதே குதூகலம் தொற்றிக்கொள்கிறது. முதன்முறையாக முழுநேர விளையாட்டு சேனல் ஒன்று தமிழில் வந்திருப்பது விளையாட்டு ரசிகர்களுக்கு ஆட்டம்போடவைக்கும் செய்திதான். அதைச் செய்யத் தொடங்கிவிட்டார் தொகுப்பாளர் பிரதீப் முத்து. மும்பையில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் அலுவலகத்தில் தற்போது பரபரப்பான ஷூட்டிங்கில் ஈடுபட்டுவரும் இவர், யூடியூப் சேனலான ‘மெட்ராஸ் சென்ட்ரல்’-ன் இயக்குநர்.

தமிழில் பேசிய கபில் தேவ்

“இதுவரைக்கும் ஆங்கிலம், இந்தியில் மட்டும்தான் விளையாட்டு வர்ணனை கேட்டிருக்கிறோம். அதனால் பெருநகரவாசிகள் மட்டுமே ஒவ்வொரு விளையாட்டின் நுணுக்கங்களையும் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. அதை மாற்றும் விதமாக, இனி தமிழிலேயே நேரடியாக வர்ணனைக் கேட்டு ரசிக்கலாம். அதுவும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், லக்ஷ்மணன் சிவராமகிருஷ்ணன், பத்ரிநாத், ஹேமங்க் பதானி, சடகோபன் ரமேஷ் போன்ற அற்புதமான முன்னாள் கிரிக்கெட் வீரர்களோடு சேர்ந்து தமிழில் கிரிக்கெட் கமெண்ட்ரி சொல்வதை நினைத்தாலே உற்சாகமாக இருக்கிறது” என்கிறார் முத்து.

சில தினங்களுக்கு முன்னால் ஸ்ரீகாந்துடன் படப்பிடிப்பில் இருந்தபோது தளத்துக்கு வந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் தன்னிடம் ஒரு சில வார்த்தைகள் தமிழில் பேசியதை நினைத்துப் பூரிக்கிறார் இவர்.

யூடியூப் சேனல் இயக்குநர் - நடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், ‘ஆர்.ஜெ.’ என ஏற்கெனவே பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார் முத்து. இருந்தாலும் முதல்முறையாக விளையாட்டு ஜாம்பவான்களோடு இணைந்து வர்ணனைசெய்வது என்பது சவால்தானே எனக் கேட்டால், “நான் கிரிக்கெட் எக்ஸ்பெர்ட் இல்லை. ஆனால் பக்கா கிரிக்கெட் ரசிகன். அதனால் சாதாரண கிரிக்கெட் ரசிகரின் மனநிலையை நான் அச்சு அசலாகப் பிரதிபலிப்பேன். அதுவே என்னுடைய பலமும்கூட” என்கிறார்.

கேலி கிண்டலோடு தீவிரம்

இவருடைய தலைமையில் இயங்கிவரும் ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ நான்கு லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை எட்டியதன் மூலமாக ‘தமிழில் நம்பர் ஒன் யூடியூப் சேனல்’ என்கிற இடத்தைச் சமீபத்தில் பிடித்தது. கலகலப்பான உரையாடல் மூலம் வெகுஜன நம்பிக்கைகள் குறித்து இளைஞர்களிடம் கேள்வி எழுப்புவது ‘லவுட் ஸ்பீக்கர்’ நிகழ்ச்சி. ‘முத்தம்’, ‘பிரேக் அப்’, ‘ஒன் நைட் ஸ்டாண்ட்’ இப்படி இதில் பேசப்படாத விஷயமே இல்லை. அதே நேரத்தில் சிகப்புதான் அழகு என்பதற்குப் பின்னால் இழையோடும் நிற வெறி, சாதியப் பாகுபாட்டைக் கேள்விக்குள்ளாக்குதல் போன்ற தீவிரமான முயற்சிகளையும் லேசான கண்ணோட்டத்தில் இவர்கள் கொண்டுசெல்கிறார்கள்.

‘கவுன்சிலிங் பரிதாபங்கள் / ரஜினி டிரோல்’, ‘தியேட்டர் பரிதாபங்கள் / செல்லூர் ராஜூ தெர்மகோல் டிரோல்’ ஆகிய இவர்களுடைய சமீபத்திய வீடியோக்கள் அரசியல் நையாண்டியில் வைரல் ஆகின. “சினிமா, அரசியலுக்கெனப் பல டிவி சேனல்கள் இருந்தாலும் மாற்றுக் கருத்துக்கு அங்கு இடமில்லை. அதனால், நாங்கள் வழக்கத்தை உடைக்கும் விதமாகச் செயல்படுகிறோம். அதேநேரத்தில் இணையம் என்றாலே யாரையாவது திட்டுவது என்றாகிவிட்டது. அப்படி இல்லாமல் கேலி, கிண்டல்செய்யும் பாணியிலேயே நாங்கள் நடுநிலையாகவும் எல்லாவற்றையும் அணுக முயற்சிக்கிறோம்” என்கிறார் முத்து.

ஹிப் ஹாப் தமிழா நாயகனாக நடித்து இயக்கி இருக்கும், ‘மீசைய முறுக்கு’ படத்தின் வில்லனாக வெள்ளித்திரையிலும் விரைவில் கால்பதிக்கக் காத்திருக்கிறார் முத்து. எல்லாவற்றுக்கும் மேலாக ஐசிசி சாம்பியன்ஷிப் டிராஃபி 2017-ன் மூலம் தமிழில் கமெண்ட்ரிக் களத்தைப் பிடித்த களிப்பில் இப்போது துள்ளிக் குதிக்கிறார் இந்த யூடியூப் யூத்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x