Published : 13 May 2017 11:09 AM
Last Updated : 13 May 2017 11:09 AM

சினிமா வீடு: பத்மநாபபுரம் அரண்மனை - எளிமையின் கம்பீரம்

வீடு என்றால் முகப்பு அறை, படுக்கையறை, சமையலறை என மூன்று அறைகள் இருக்கும். சில வீடுகளில் கூடுதலாக ஓர் அறை இருக்கும். இப்படித்தான் வீடுகள் இருக்கும். ஆனால் நமது இந்த எண்ணத்தைத் தாண்டிய விரிவு கொண்டது ‘சினிமா வீடு’. பெரும்பாலும் கதாநாயகன், கதாநாயகி அல்லது வில்லன்களின் வீடாகக் காண்பிக்கப்படும் இந்த சினிமா வீடு நம் கற்பனைகளை மிஞ்சிவிடும் அளவுக்குப் பிரம்மாண்டமானது.

இந்த மாதிரியான வீடுகளைப் பார்க்கும்போது இவ்வளவு பிரம்மாண்டமான வீடுகள் எங்கு இருக்கும், அவற்றில் யார் வசிப்பார்கள்? என்ற கேள்விகள் நமக்கு எழும். அந்த மாதிரியான சினிமா வீடுகளில் ஒன்றுதான் ‘பத்மநாபபுரம் அரண்மனை’.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலுக்கு அருகில் பத்மநாபபுரம் என்னும் சிறுநகரத்தில் வெள்ளி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அரண்மனை. 17 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த அரண்மனை கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ரவிவர்மா குலசேகரப் பெருமாள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த அரண்மனை தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அரண்மனை கேரளக் கட்டிடக் கலையின் நிகழ்காலச் சாட்சியாக இருக்கிறது. தாய்க் கொட்டாரம், மந்திர சாலை, நாடக சாலை, உப்பரிகை மாளிகை,தெற்குக் கொட்டாரம் ஆகிய முக்கியப் பகுதிகளைக் கொண்டது இந்த அரண்மனை திருவிதாங்கூர் ராஜ வம்சத்தின் தலைமையகமாக விளங்கியது. ஆரம்பத்தில் இந்த அரண்மனை ஓலைக் கூரையால் வேயப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மார்த்தாண்ட வர்மா காலத்தில்தான் ஓடு வேயப்பட்டிருக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.

ஓடுகளாலும் தேக்கினாலும் தேங்காய் சாம்பல் கரியினாலும் உருவாக்கப்பட்ட இந்த அரண்மனை எளிமையின் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. அரசவை கூடாரத்தில் தொடங்கும் மாளிகை நெடுந்தூரம் நீண்டுகொண்டே போகும். அரண்மனையின் தரைப்பகுதி முழுவதும் இயற்கையான பொருள்களைக் கொண்டு செய்யப்பட்டது. நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் பளபளப்புடன் உள்ளது.

மாளிகையின் எந்தத் திசையில் திரும்பினாலும் தேக்கில் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் உள்ள ஜன்னல்களும் கதவுகளும் தூண்களும் வியப்பூட்டும். மட்டுமல்ல உத்திரமும் மரத்தால் நுட்பாமான வேலைப்பாடுகள் கொண்டதாக இருக்கிறது. இந்த மரச் சட்டகத்தில் செதுக்கப்பட்டுள்ள தெய்வங்களும் பிற உருவங்களும் துள்ளியமாகப் பிசிரின்றிச் செதுக்கப்பட்டுள்ளன. இவை அக்கால கலைஞர்களின் திறனைப் பறைசாற்றுகின்றன. வளைந்த மர வேலைப்பாடுகள் மாளிகையின் சுற்றுப் பிரகாரத்தில் உள்ளன. இவை சாருபடிகள் என அழைக்கப்படுகின்றன. கேரளத்தின் தனிச்சிறப்பு இந்தக் கட்டுமானம் நல்ல காற்றோட்டத்தையும் ஒளியையும் அளிப்பதுடன் உள்ளிருப்பவர்கள் யார் என வெளியே தெரியாத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆயிரம்பேர் அமர்ந்து உண்ணக்கூடிய வகையிலான பிரம்மாண்டமான அன்னதானக் கூடமும் இதற்குள் உள்ளது. மேலும் அந்த அறையில் உணவு பரிமாறுவதற்காக வைக்கப்பட்டுள்ள குவளைகள் ஒரு மனிதனின் உயரத்தில் பாதி அளவில் இருப்பது பார்போரை வியப்பில் ஆழ்த்தும். வெவ்வேறு அளவில் அம்மியும் ஆட்டு உரலும் மண் அடுப்புகளும் தண்ணீர் தொட்டிகளும் ஆள் உயர குவளைகளும் இட்லிக் கொப்பறைகளும் கொண்ட சமையலறையும் உண்டு.

தாய்க் கூடாரம் 1550 ல் கட்டப்பட்ட மிகவும் பழைய மாளிகை. அரசியின் அறை மற்ற அறைகளைக் காட்டிலும் கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கலைநயம் மிக்க கதவுகள், ஜன்னல்கள், அலமாரிகள், வீணை, கண்ணாடிகள், தொட்டில் போன்றவை கொண்டதாக உள்ளது அந்த அறை.

64 வகை மூலிகைகளால் செய்யப்பட்ட கட்டில் மன்னரின் அறையில் உள்ளது. டச்சு அரச வம்சத்தினரிடமிருந்து இந்தக் கட்டில் பரிசாகப் பெறப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மன்னரின் கூடாரம் நான்கு அடுக்கு மாடிகளை கொண்டதாகும். கீழ் தளத்தில் கருவூலம் அமைக்கப்பட்டுள்ளது. போர்காலத்தில் அரச குடும்பத்தினர் தப்பித்துச் செல்ல தனிச் சுரங்கம் உருவாக்கப்பட்டிருந்தாலும் அதன் கதவுகள் மூடப்பட்டுப் பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.

அரசப் பெண்களுக்கென்று தனி அறைகள் உள்ளன. அழகிய ஊஞ்சலும் பெல்ஜியத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கண்ணாடியும் அவர்களுக்கென அமைக்கப்பட்ட தனிக் குளமும் அரண்மனையின் பின்பகுதியில் உள்ளன. பிரத்யேகமாக நாட்டிய சாலையும் அரண்மனையில் உள்ளது. இந்த நாட்டிய சாலை தமிழகக் கோயில் கட்டிடக் கலையைப் போன்று தூண்கள் வைத்துக் காணப்படுகிறது. இந்த நாட்டிய சாலையில் அரச பெண்கள் பார்ப்பதற்காக தனி அறைகள் உள்ளன. அவர்களை சபையில் உள்ளவர்கள் காண முடியாதபடி அறைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர்களுக்கென்று தனி மாளிகை பிற்காலத்தில் கட்டப்படுள்ளது. போர் கருவிகள் வைக்கப்பட்ட கூடாரத்தில் பல விதமான வால்களும் கேடயங்களும் வில்லும் அம்பும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.



கார்த்திக்-குஷ்பு நடிப்பில் வெளி வந்த ‘வருஷம்-16’ படத்தில் கார்த்திக்கின் வீடாக வருவது பத்மநாபபுரம் அரண்மனைதான். இந்த அரண்மனை அரவிந்தசாமி-அனுஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘இந்திரா’வில் அவர்களது வீடாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

- பாரதி வி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x