தொழில் தொடங்கலாம் வாங்க! - 21: வெற்றி பெறத் தொழிலை நம்புங்கள்!

தொழில் தொடங்கலாம் வாங்க! - 21: வெற்றி பெறத் தொழிலை நம்புங்கள்!
Updated on
2 min read

விஸ்வரூபம் எடுத்து வளர்ந்த கம்பெனிகளில் என்னை மிகவும் கவர்ந்தது அலிபாபா.

அரசாங்கம் எல்லாவற்றையும் இரும்புக் கரங்களில் வைத்திருக்கும் சீனாவிலிருந்து ஒருவர் தனியாகத் தொழில் நடத்தவே ஏகக் கெடுபிடிகள் இருக்கும். இணையதளத்தை முடக்கி வைத்திருந்த நாடு சீனா. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இணைய வசதி கொண்டிருந்தோர் 1 சதவீதத்துக்கும் குறைவு. எல்லாவற்றையும் திறந்த வெளியில் கொட்டி யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது அமெரிக்காவுக்கு உவப்பாக இருக்கலாம்.

உலக நடுகள் அதைப் பின்பற்றலாம். ஆனால், சீனாவில் அதற்கெல்லாம் அனுமதிகூடக் கிடையாது. ஒவ்வொரு சீனக் குடிமகனும் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமையை அரசு வைத்திருக்க, இணையதளத்தில் வியாபாரம் செய்வதெல்லாம் நம்ப முடியாத காலத்தில் பிறந்தது அலிபாபா.

சிறு தொழிலை வளர்க்கலாம்

பள்ளி ஆசிரியராகச் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையைத் தொடங்கியவர் ஜாக் மா. ஆங்கிலம் படித்ததால் அயல் நாட்டு மக்களிடம் பேசும் அனுபவம் கிடைத்தது. சீனாவுக்கு வெளியே உலகம் எப்படிச் செயல்படுகிறது என்பதைக் கவனிக்க ஆரம்பித்தார். எந்தவொரு தொழில்நுட்பப் பயிற்சியோ அனுபவமோ இல்லாமல்தான் இணையதளச் சேவை நிறுவனத்தை ஆரம்பித்தார். தொழிற்சாலைக்குப் பொருள் வாங்குபவரும் விற்பவரும் சந்திக்கும் இணையதளமாகத்தான் அதை ஆரம்பித்தார்.

தன் பிஸினஸ் மாடல் எது, எப்படி, எப்போது பணம் வரும், நிறுவனத்தை எப்படி நடத்துவது என எதையும் தீர்மானிக்காமல்தான் தொழில் தொடங்கினார். ஆனால், சிறு தொழில்களை வளப்பதிலும், அவர்களின் வளர்ச்சி மூலம் அலிபாபா வளர முடியும் என்பதிலும் தெளிவாய் இருந்தார். சிறு விளம்பரதாரர்களின் விளம்பரத்தில் மட்டும்தான் கொஞ்சம் பணம் வந்தது. ஆனால், கம்பெனியை மிகவும் நம்பிக்கையுடன் நடத்தினார்.

வேலையோடு நம்பிக்கை அளித்தார்

ஒரு குடும்பம் போன்ற கம்பெனி கலாசாரத்தை வளர்த்தெடுத்தார். நலிந்த பிரிவினரின் பிள்ளைகளை மிகச் சொற்பச் சம்பளத்தில் வேலைக்கு எடுத்தார். எல்லோரும் தங்கி வேலை செய்யும் கலாசாரத்தை வளர்த்தார். மற்ற பன்னாட்டு நிறுவனங்கள் பெரிய பிசினஸ் ஸ்கூல்களிலிருந்து நல்ல சம்பளத்துக்கு ஆட்களை அமர்த்திக்கொண்டிருந்தனர். ஆனால், ஜாக் மா வேலையை மட்டும் தரவில்லை. நம்பிக்கையை அளித்தார். தன் கம்பெனி பங்குகளைப் பணியாளர்களுக்கு அளித்தார். அலிபாபா மிகப் பெரிய நிறுவனமாக மாறும் என்ற நம்பிக்கையை வேரூன்றினார்.

கூகுள், அமேசான், ஈ பே போன்ற ராட்சதப் போட்டியாளர்களை அடுத்துவந்த வருடங்களில் அநாயாசமாக எதிர்கொண்டார் ஜாக் மா. அலிபாபா கதையைப் பிறகு பார்க்கலாம்.

நான் சொல்லவரும் விஷயம் இதுதான். மிகப் பெரிய அளவில் நிறுவனத்தை வளர்க்கும் ஆவல் ஜாக் மாவுக்கு முதலிலேயே இருந்தது. எப்போது? சொற்ப வருமானத்தில் கம்பெனி நடத்திய காலத்திலேயே. பல தோல்விகளுக்குப் பின்தான் அவருக்கு வியாபாரம் பிடிபடுகிறது. எல்லா வகை எதிர்ப்புகளும் அவருக்கு இருந்தன. ஆங்கிலம் பேசாத வலைத்தளம் உலக அளவில் விஸ்வரூபமெடுக்க முடியாது என்றார்கள். சீன அரசு இப்படி ஒரு கம்பெனியை வளரவிடாது என்றார்கள். அமெரிக்கப் போட்டியாளர்கள் சீனா வந்தால் அலிபாபா காலி என்றார்கள். ஒரு நல்ல விலைக்குக் கம்பெனியை ஒரு பன்னாட்டு போட்டியாளரிடம் விற்றுவிடுவதுதான் சிறந்த வழி என்று ஆருடம் சொன்னார்கள்.

பார்வைக்கு ஏற்ப வீச்சு

அலிபாபாவும் அமெரிக்காவில் கால் பதித்து ஆங்கில இணையதளம் அமைத்து வர்த்தகம் வளர்க்கப் பார்த்தது. ஆனால் தன் களம் எது, வலிமை எது எனப் புரிந்துகொண்டது அலிபாபா. இன்று சீன மக்களின் வாழ்வில் ஒன்றோடு ஒன்றாகக் கலந்துவிட்டது அலிபாபா. எந்தப் பணப் பரிமாற்றம் என்றாலும் அலிபாபாதான். அன்றாட வாழ்க்கையின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்திசெய்கிறது அலிபாபா. இன்று நிறுவன மதிப்பிலும் வாடிக்கையாளர் சேர்க்கையிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

உங்கள் தொழிலை எவ்வளவு நம்புகிறீர்கள் என்பதில்தான் உங்கள் விஸ்வரூப வளர்ச்சி அடங்கியுள்ளது. தொழில் நடத்துபவரின் பார்வை எவ்வளவு விசாலமாகப் பரந்து விரிந்து இருக்கிறதோ, அதற்கேற்பதான் தொழிலின் வீச்சு இருக்கும்.

இந்தத் தொழிலில் இவ்வளவுதான் முடியும் என்ற எண்ணம்தான் நம்மை முடக்கிப்போடுகிறது. நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் எண்ணங்கள், நம் போட்டியாளர் அடைந்த வெற்றிகள் போன்றவை நம்மை அதிகமாகப் பாதிக்கலாம். நிதர்சனம் தரும் புள்ளிவிவரங்கள் நம் வேகத்தைக் கட்டிப்போடலாம். ஆனால், கட்டற்ற கற்பனைக்கும் நம்பிக்கைக்கும் தடைகளே இல்லை.

இருபது வருடங்களுக்கு முன் இந்தியாவிலேயே அதிகச் சம்பளம் வாங்கும் நடிகர் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்று யாராவது நினைத்தார்களா? சிக்கனத்துக்குப் பெயர்போன மலையாளத் திரையுலகம்தான் இன்று இந்தியாவிலேயே அதிகபட்ச பட்ஜெட்டில் படம் தொடங்கியுள்ளது. ‘தங்கல்’ சீனாவில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. ஆங்கிலம் இல்லாத திரைப்படங்களில் அதிகம் சம்பாதித்த முதல் 10 படங்களின் வரிசைக்குள் நுழைந்துள்ளது இந்த இந்திப்படம்!

திரைப்படத் துறை முறைசாரா தொழில் அமைப்பைச் சேர்ந்ததுதான். எவ்வளவு திறமையாக வியாபாரம் செய்தாலும் பெரும்பாலும் தோல்வியைத் தழுவும் துறை இது. அப்படியுள்ள ஒரு துறையே தொடர்ந்து தன் எல்லைகளை விரிவாக்கி விஸ்வரூபம் எடுக்கையில், முறை சார்ந்த மற்ற தொழில்களால் முடியாதா என்ன? முதலாளியின் நம்பிக்கைதான் வளர்ச்சிக்கு வித்து.

தொடர்புக்கு:gemba.karthikeyan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in