Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM

பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள்களை தனி வாகனத்தில் கொண்டு செல்ல முடிவு

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பொதுத்தேர்வுகளில் பின்பற்றப்படும்

அரசுப் பொதுத் தேர்வுகளான பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும். ஒவ்வொரு தேர்வும் முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்கள் சீல் வைக்கப்பட்டு தபால்துறை மூலம் மதிப்பீட்டு மையங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். தபால்துறையின் பல்வேறு விதமான பார்சல்களுடன் விடைத்தாள் கட்டுகளும் பயணம் செய்யும்.

மாயமான கட்டுகள்

இவ்வாறு தபாலில் அனுப்பும்போது விடைத்தாள் கட்டுகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. கடந்த ஆண்டு நடந்த 2 சம்பவங்கள் விடைத்தாள் கட்டுகளின் பாதுகாப்பின்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் தபாலில் அனுப்பப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகள் சில மாயமாகிவிட்டன. இதேபோல், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆர்.எம்.எஸ். மூலம் அனுப்பிய விடைத்தாள் கட்டுகள், ரயிலில் இருந்து கீழே விழுந்து சேதமடைந்தன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான விடைத்தாள் கட்டுகள் தேர்வுத்துறையைப் போல் இல்லாமல் தனி வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் மதிப்பீட்டு மையத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நிகழ்ந்த சம்பவங்களை மனதில் கொண்டும், எதிர்காலத்தில் இதுபோன்று தவறுகள் நடந்துவிடக் கூடாது என்பதாலும் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்களை தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு எடுத்துச் செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி, விடைத்தாள் கட்டுகளை ஒவ்வொரு மையத்துக்கும் சென்று சேகரித்து பாதுகாப்புடன் வாகனங்களில் கொண்டுவர மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சார்பில் ஒரு காப்பாளரும் (கஸ்டோடியன்), தேர்வுத்துறை சார்பில் பொறுப்பு அதிகாரியும் நியமிக்கப்படுவர். பல்வேறு தேர்வு மையங்களில் விடைத்தாள்களை சேகரித்து ஒரு குறிப்பிட்ட மையத்துக்கு கொண்டு வந்துவிடுவார்கள். அங்கிருந்து தனி வாகனங்களில் சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு மையங்களுக்கு அனுப்பப்படும்.

மார்ச்சில் அமல்

பழைய முறையில், விடைத்தாள் கட்டுகளை தபால் அலுவலகத்தில் புக்கிங் செய்வதை வைத்து அந்தக் கட்டுகள் எந்த மதிப்பீட்டு மையத்துக்கு செல்கின்றன என்பது தெரிந்துவிடும்.

ஆனால், புதிய முறையில் விடைத்தாள் கட்டுகள் அனுப்பப்படும் மதிப்பீட்டு மையம் எளிதில் வெளியே தெரியாது. விடைத்தாள் கட்டுகளின் பாதுகாப்புக்கான இந்த புதிய நடைமுறையை அடுத்த ஆண்டு மார்ச் பொதுத்தேர்வு முதல் அமல்படுத்த தேர்வுத்து றை முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x