Last Updated : 04 Jun, 2017 11:46 AM

 

Published : 04 Jun 2017 11:46 AM
Last Updated : 04 Jun 2017 11:46 AM

வான் மண் பெண் 08: வன்னி மரம் காத்த வீராங்கனை!

இந்தியக் கலாச்சாரத்தில் மரம் என்பது ஓர் உயிர் மட்டுமல்ல. அது தெய்வம்; வாழ்வாதாரம். இயற்கையில் எத்தனையோ உயிரினங்கள் வாழும்போதும் இறந்த பிறகும் மனிதர்களுக்குப் பல நன்மைகளைத் தருகின்றன. அவற்றில் ஒன்று மரம். மனிதன் பிறந்த பின் அவனைத் தாலாட்டத் தொட்டிலாகவும், அவன் இறந்த பின் அவனைச் சுட்டெரிக்கும் சிதையாகவும் இருக்கிறது.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் மனிதர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிடுகிற மரங்களை வெட்டுவதற்குப் பலர் முன்வந்தால், அவற்றைக் காப்பதற்கும் பலர் முன்வந்த வரலாறு உண்டு. மரங்களைக் கட்டிப்பிடித்து அவை வெட்டப்படாமல் தடுத்த சிப்கோ இயக்கத்துக்கு முன்பே மரங்களைக் காப்பதற்காக ராஜஸ்தானில் மாபெரும் போராட்டத்தை நடத்தியரும் ஒரு பெண்தான்.

வன்னியின் பெருமை

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது ஜோத்பூர். இங்கு கேஜ்ரி எனப்படும் வன்னி மரம் அதிகளவில் உண்டு. புரோஸோபிஸ் சினெரரியா என்ற அறிவியல் பெயரால் அழைக்கப்படும் இது, இன்று நீதிமன்ற உத்தரவால் வெட்டப்பட்டுவரும் சீமைக் கருவேலத்தின் பேரின வகைகளில் ஒன்று. ஆண்டுக்கு 100 மில்லி மீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவு கொண்ட மாநிலத்தில், தண்ணீருக்காக வெட்டுக் குத்துகூட நிகழும். பல தாவரங்கள் தாக்குப் பிடிக்கச் சக்தியில்லாமல் துவண்டுவிடும். ஆனால், வன்னி மரம் வளரக் குறைந்த அளவு நீரே போதும்.

சுமார் 30 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் தனது வேர்களைப் பரப்பும் இந்த மரம், நிழல் மட்டும் தருவதில்லை. பழங்கள், கால்நடைத் தீவனம், மணல் குன்றுகளைக் காப்பது, மருத்துவம், விறகு, காற்று மாசைக் கட்டுக்குள் வைப்பது போன்ற பல நன்மைகளைக் கொண்டிருக்கிறது.

இந்த மரத்தின் நன்மைகளை அறிந்த குரு ஜாம்பேஷ்வர் என்ற சாது, 1485-ம் ஆண்டு வாக்கில் வன்னி மரங்களை எக்காரணம் கொண்டும் வெட்டக் கூடாது என்று தனது சீடர்களைக் கேட்டுக்கொண்டார். அவர்தான் ‘விஷ்னோய்’ என்ற வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தினார். அவரது வழிவந்த மக்கள் விஷ்னோய்கள் என்றழைக்கப்பட்டனர். அவரது வேண்டுகோளுக்கிணங்க, விஷ்னோய்கள் அந்த மரத்தைக் காத்துவந்தனர்.

இயற்கையே இறைமை

விஷ்னோய்களின் மத நம்பிக்கை 29 விதிகளை அடிப்படையாகக் கொண்டது. அந்த விதிகளில் பெரும்பானாலவை சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் கண்ணோட்டத்தில் அமைந்திருப்பவை. எனவே இயல்பிலேயே விஷ்னோய்களுக்கு மரங்கள், காட்டுயிர்கள் ஆகியவற்றின் மீது அன்பும், அவற்றைப் பாதுகாக்கும் கடமையும் உண்டு. இயற்கையே அவர்களுக்கு இறைமை.

இந்நிலையில் 1730-ம் ஆண்டு ஜோத்பூர் மகாராஜா அபய் சிங், ஒரு புதிய அரண்மனையைக் கட்டுவதற்காக, வன்னி மரங்களை வெட்டிக்கொண்டு வரும்படி ஆணையிட்டார். அதையேற்று கிரிதர் பண்டாரி என்ற அமைச்சரின் தலைமையில் ஒரு கூட்டம் வன்னி மரங்களை வெட்டுவதற்காக கேஜர்லி கிராமத்தை நோக்கிப் புறப்பட்டது.

மகாராஜாவின் வீரர்கள் அந்தக் கிராமத்துக்கு வந்து சேர்ந்தவுடன் அங்கிருந்த வன்னி மரங்களை வெட்டத் தொடங்கினர். அதை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த‌ விஷ்னோய் மக்கள் எதிர்த்தார்கள். ஆனால், ஆயுதம் தாங்கிய அந்த வீரர்கள் முன் அந்த மக்களால் ஏதும் செய்ய முடியவில்லை.

உயிரினும் மரமே பெரிது

அப்போது அமிர்தா தேவி விஷ்னோய் என்ற பெண் அந்த இடத்துக்கு வந்தார். சற்றும் தாமதிக்காமல் ஓடிச்சென்று அங்கிருந்த வன்னி மரம் ஒன்றைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். அந்த மரத்தை வெட்டவந்த வீரர்கள் திகைத்து நின்றனர். அமிர்தா தேவியைப் பார்த்து, அசு, ரத்னி, பாகு என்ற அவருடைய மூன்று மகள்களும் மரங்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டனர்.

“வன்னி மரங்களை வெட்டுவது, எங்கள் விஷ்னோய் மதத்தை அவமதிப்பு செய்வது போல. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஒரு மரத்தைக் காப்பதற்காக எங்கள் தலை வெட்டப்படும் என்றால், அது எங்களுக்குப் பெருமையே. மரத்தைவிடவும் எங்களுக்கு உயிர் பெரிதல்ல” என்று சொல்லி மரத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டார் அமிர்தா தேவி.

அவரது வார்த்தைகளைத் துச்சமாக மதித்து, அவரை மரத்துடன் சேர்த்து வெட்டினார்கள் வீரர்கள். அமிர்தா தேவியின் மூன்று மகள்களும் வெட்டுப்பட்டு இறந்தார்கள். இந்தச் செய்தி சுற்றியிருந்த 83 விஷ்னோய் கிராமங்களுக்கும் பரவியது. உடனே விஷ்னோய் மக்கள் அதிக அளவில் கேஜ்ர்லி கிராமத்தில் திரண்டனர்.

வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் விஷ்னோய் ஒருவர் தானே தனது கழுத்தை அறுத்துக்கொண்டு சாவார் என்று அந்த மக்கள், மரங்களை வெட்டிக்கொண்டிருந்த வீரர்களை எச்சரித்தனர். தொடக்கத்தில் அதைக் கண்டுகொள்ளாத வீரர்கள் நேரம் ஆக ஆகப் பெரும் பதற்றத்துக்கு ஆளாகினர். இறுதியில் மரங்களை வெட்டும் அவர்களின் பணி தடுக்கப்பட்டது. ஆனால், அதற்குள் 363 விஷ்னோய் உயிர்கள் மரித்துவிட்டிருந்தன! இந்த விஷயத்தை அறிந்து மனம் கலங்கிய‌ மகாராஜா, மரங்களை வெட்டுவதை நிறுத்த உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவத்திலிருந்துதான் பிற்காலத்தில் சிப்கோ இயக்கத்தினர் தங்களுக்கான போராட்ட முறையைக் கண்டறிந்தனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதாரமாக இருந்த அமிர்தா தேவியின் பெயரால், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் பாடுபட்டுவருகிறவர்களுக்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்கள் ‘அமிர்தா தேவி விஷ்னோய் ஸ்மிருதி விருது’ வழங்கிவருகின்றன. மத்திய அளவில் ஒவ்வோர் ஆண்டும் ‘அமிர்தா தேவி விஷ்னோய் காட்டுயிர் பாதுகாப்பு விருது’ வழங்கப்பட்டுவருகிறது. இந்தப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக, கேஜர்லி கிராமத்தில் ஒரு நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x