Published : 27 Oct 2014 06:41 PM
Last Updated : 27 Oct 2014 06:41 PM

பெண் சக்தி: வாடாத பூச்சரம்

பெண்களுக்கான வாய்ப்புகளும் வசதிகளும் குறைந்திருந்த காலத்தில் எழுத்தையே தன் சுவாசமாகக் கொண்டவர் கோமகள்.

தஞ்சை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள அளக்குடி கிராமத்தில் மே 22, 1933-ம் ஆண்டு பிறந்த கோமகளின் இயற்பெயர் ராஜலட்சுமி. கோமகளின் இலக்கிய வாழ்வு இளம் வயதிலேயே தொடங்கிவிட்டது. தொடக்கப்பள்ளி நாட்களிலேயே தன்னுடன் படித்த மாணவர்களுக்குக் கதை சொல்வதும், நாடகங்கள் எழுதி நடிக்கச் சொல்லி மகிழ்வதும் இவருக்குப் பிடித்த பொழுதுபோக்கு. இந்த ஆர்வமே பின்னாட்களில் இவரை கற்பனை நிறைந்த கதாசிரியராகவும், கைதேர்ந்த சிறுகதையாளராகவும், நல்லதொரு நாவலாசிரியராகவும், நவீன தமிழ் இலக்கியத்துக்கு வித்திட்ட பெண் எழுத்தாளர்களில் ஒருவராகவும் நிலைக்க வைத்தது.

பாரம்பரியக் கொள்கை

தன் எழுத்து எந்த வகையிலும் பாரம்பரிய கருத்துக்கு முரண்பாடாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தன் படைப்பாற்றலைத் தான் சார்ந்திருந்த நாட்டின் பண்பாட்டைப் போற்றும் பாங்குடையதாக அமைத்துக்கொண்ட கோமகள், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், ஐம்பது நாவல்களும், முப்பது குறுநாவல்களும் எழுதியுள்ளார். இவரது படைப்புகள், அனைத்து தமிழ் இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது கதைகளும் நாடகங்களும் வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றின் மூலம் மக்களைச் சென்றடைந்தன. அதோடு இவரது நூல்கள் கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் தன் கதையுலகத்தை குடும்ப எல்லையைத் தாண்டாமல் அமைத்துக்கொண்ட கோமகள் எழுதிய ‘பால்மணம் ' என்ற சிறுகதை மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. எழுத்தானது விரசமில்லாமல், அதே சமயத்தில் உள்ளத்தை உயர்த்தும் வகையில் நயத்தோடும், நாகரிகத்தோடும் படைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து கோமகள் எழுதிய கதைகள் ஏராளம். அவரது ‘கானல் நீர்' சிறுகதையில் இந்தக் கருத்தோட்டத்தைக் காணலாம்.

யதார்த்தப் பதிவு

வாழ்க்கையின் யதார்த்த நிலைகளைக் கருவாகக் கொண்டு கதைகள் புனைந்தவர் கோமகள். இதய நோயால் அவதிப்பட்ட ஒரு பெண்ணை, ஸ்டெதஸ்கோப் இல்லாமல் அவள் நெஞ்சில் காது வைத்துக் கேட்டு, இதயக்குழாயில் பிரச்சினை என்று கண்டுபிடித்த சம்பவத்தை கோமகளிடம் அவருடைய மைத்துனர் டாக்டர் குருமூர்த்தி சொல்லியிருக்கிறார். அந்தச் சம்பவத்தைக் கேட்ட அரைமணி நேரத்தில் அவர் சொன்ன சம்பவங்களை அடிப்படையாக வைத்து, ‘துடிப்பு' என்ற சிறுகதையை எழுதி தன் மைத்துனரிடம் தந்திருக்கிறார் கோமகள்.

கோமகள் எழுதிய நூல்களில் மனச்சந்ததி, பனிமலர், சந்தன மலர்கள், நிலாக்கால நட்சத்திரங்கள், சில நீதிகள் மாறுவதில்லை, உயிரின் அமுதாய், மாய வாழ்வு, அன்பின் சிதறல், இந்தியா மீண்டும் விழித்தெழும், முதல் சந்திப்பு, ஒரு மெட்ரோபாலிட்டன் நகரில் காஸ்மோபாலிட்டன் மனிதர்கள், இருவரில் ஒருவர், சுடர் விளக்கு, மேக சித்திரங்கள் ஆகியவை சிறந்தவையாகப் பேசப்பட்டன.

மகுடம் சூட்டிய விருதுகள்

1987-ம் ஆண்டு சிறந்த எழுத்தாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, வி.ஜி.பி சகோதரர்களின் சந்தனம்மாள் டிரஸ்ட் வழங்கிய விருதையும், தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கிய தமிழன்னை விருதையும், படைப்பாற்றலுக்காக எஸ்.வி.ஆர் விருதையும் பெற்ற பெருமை கோமகளுக்கு உண்டு.

கோமகள் எழுதிய ‘அன்னை பூமி' என்ற நாவல், 1982-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசைப் பெற்றது. ‘கல்கி' நடத்திய வெள்ளிவிழா சிறுகதைப் போட்டியிலும், கல்கி - பெர்க்லி (U.S.A) தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியிலும் இவர் பரிசுகள் பெற்றுள்ளார்.

குடும்பக் கட்டுப்பாடு, மதுவிலக்கு மற்றும் தீண்டாமை குறித்த நாடகங்கள், கட்டுரைகள் ஆகியவற்றைத் தேர்வு செய்வதற்காகத் தமிழக அரசு நியமித்த குழுவின் நடுவராகச் செயல்பட்டதோடு, ஆதர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா மற்றும் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் ஆயுட்கால உறுப்பினராகவும் விளங்கியவர் கோமகள். எழுத்து தவிர்த்து சென்னையில் சாகித்ய அகாடமி நடத்திய கருத்தரங்கிலும், மதுரையில் நடந்த 5-வது உலகத் தமிழ் மாநாட்டிலும் பங்கேற்ற பெருமையையும் பெற்றவர்.

தொலைந்துபோன நினைவுகள்

சுமார் 21 ஆண்டுகளுக்கு முன், ஒரு பிரபல இதழுக்குக் கதை எழுதப் போகிறேன் என்று சொல்லி அறைக்குள் போய் அமர்ந்து எழுத ஆரம்பித்துவிட்டார் கோமகள். இரண்டு மணி நேரம் கழித்து அவர் எழுதியதை அவரது குடும்பத்தார் வாசித்துப் பார்த்தபோது அதிர்ந்துவிட்டனர். ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வார்த்தைகளையும் வரிகளையும் எழுதியிருந்தார் கோமகள். ஒரு இடத்தையே வெறித்துப் பார்த்தல், ரூபாய் நோட்டுகளைத் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்துக்கொண்டே இருத்தல், சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ பேசுவது, சிரிப்பது போன்ற கோமகளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் வித்தியாசப்பட, பயந்து போய் டாக்டரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர். பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு, டிமென்ஷியா (Demensia) என்ற நோய் கோமகளைத் தாக்கியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ‘அல்சைமர்ஸ்' என்று மருத்துவ மொழியில் அழைக்கப்படுகிற இந்நோய் வந்தால், நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக அழிந்து, நடக்க மற்றும் பேச மறந்து இறுதியில் மூளையைச் செயலிழக்கச் செய்துவிடும்.

பல வருடங்களாக தன்னை மறந்து நினைவு தப்பிய நிலையிலேயே இருந்து, 21-10-2004 அன்று தன் 71-வது வயதில் மரணத்தைத் தழுவினார் கோமகள். கோமகளின் இத்தகைய நிலைக்கு என்ன காரணம்? அதீத சிந்தனை ஒன்று மட்டுமே. இரவு தூங்கும் போதுகூட நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் தலைமாட்டில் வைத்துக்கொள்கிற பழக்கமுடைய கோமகளுக்கு எப்போதுமே எழுத்து குறித்த ஒரே சிந்தனைதான். கால நேரம் இல்லாமல் எப்போதும் எழுதிக்கொண்டிருப்பது, எழுதுவது குறித்து சதா சிந்தித்துக்கொண்டிருப்பது என்றே வாழ்ந்த கோமகளின் மரணம், அவரது வாழ்க்கையில் தர்க்கப்பூர்வமான ஒரு முடிவாகவே தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x