

அறுபது வயசு ஆறுமுகத்தின் வேலை, முடங்கிக் கிடக்கும் தன் கடையை வெறித்துப் பார்ப்பதுதான்.பொறியியல் படித்த மகனின் சம்பளம் வெளியே சொல்லக் கூடியதாக இல்லை. இன்னொரு மகன் அந்தச் சிரமம் எதற்கு என்று வேலைக்கே போகவில்லை. மனைவிக்கு ஒவ்வொரு வேளையும் நான்கு நிறங்களில் மாத்திரைகள். இந்த ஒட்டுமொத்தச் சித்திரத்தால் கடன் கொடுத்த சிலர்கூட ஆடிப் போயிருக்கிறார்கள்.
இந்நிலையில் பக்கத்து வீட்டிலிருந்து உணவு மணம் பீறிட்டுக் கிளம்புவதை நுகர்ந்து மனைவியிடம், “நீயும் சாயங்காலம் உளுந்த வடை சுட்டு, சட்னியும் அரைச்சிரேன்” என்றார் ஆறுமுகம்.
பூட்டி வைத்தாலும் கவலை இல்லை
இந்த விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள்: ஒரு பெண்ணும்,மேஜிக் நிபுணரும் ஒத்திகை பார்ப்பார்கள். ஒரு பெட்டிக்குள்ளே அவள் படுத்திருக்க, அவள் எழுந்திருக்க முடியாதபடி அவளை மூடி, பூட்டுகளால் பூட்டியதும் நிபுணர் பின்னாலேயே வந்து மேடை முடிவது தெரியாமல் கீழே விழுந்து மயங்கி விடுவார். அவளால் எழவும் முடியாது; ஆளற்ற அரங்கில் யாரும் உதவிக்கும் இல்லை.
வேறு வழியின்றி அவள் ஃபோனை எடுப்பாள். அதில் இத்தருணங்களுக்கு என்றே ஆயிரக்கணக்கில் பாடல்கள் ஒளிந்திருக்கின்றன. பின்னணியில், “வாழ்க்கை போரடிக்கும்போது பாடல் கேட்டுப் பொழுது போக்குங்கள்.”
துன்பத்துக்கு இடையில் இன்பம்
எல்லாருக்கும் தெரிந்த விதுர நீதிக்கதையை நவீனப்படுத்துகிறேன்.
அச்சுறுத்தும் பெருங்காடு. நம் நாயகன் அங்குச் செல்கிறான். சிங்கம், புலி, ஓரிரு டைனோசர்களையும் கிராஃபிக்ஸில் அலைய விடுவோம். அவற்றின் உறுமல்கள் அவனை அச்சுறுத்தக் கண், மண் தெரியாமல் ஓட, திடீரென யார் மீதோ மோதுகிறான். நிமிர்ந்து பார்த்தால் கோரமான ஒரு உருவம் கூர் நகங்கள் + விரித்த கூந்தல் + பல கைகளுடன் அவனை நெருங்குவதைப் பார்த்து மீண்டும் ஓடுகிறான்.
மூச்சு வாங்க நிற்கையில் அடுத்த துன்பம். ஐந்து தலை பாம்பு ஒன்று அவனை விழுங்கப் பார்க்கிறது. மீண்டும் ஓட்டம். ஓரிடத்தில் பொத்தென்று கீழே கால்கள் சரிய, மேலும் விழாதிருக்கக் கைக்குக் கிடைத்த கொடி ஒன்றைப் பிடித்து அந்தரத்தில் தொங்கியவாறு கீழே பார்க்க, அது முடிவற்ற பாதாளம். பயத்துடன் கொடியைப் பிடித்துக்கொண்டு மேலே ஏற முயற்சிக்கையில் உச்சியில் ஆறுமுகங்களையும், பன்னிரெண்டு கால்களையும் கொண்ட யானை ஆவேசமாகப் பிளிறுகிறது.
இப்போது ஓரிரு பாம்புகள் வேறு அவனை நெருங்க,மேலே கொடூர யானை; கோரமான உருவம்; கீழே அதலபாதாளம். எவ்வளவு நேரம்தான் கொடியைப் பிடித்திருப்பான்? கை வேறு வலிக்கத் தொடங்கியது. இப்போது அவன் பற்றியிருக்கும் கொடியை ஒரு எலி வேறு கடிக்க, அவன் எந்த நேரத்திலும் கீழே விழலாம்.
அவன் தமிழ் சினிமா நாயகன் இல்லை என்பதால் இவற்றைக் கொன்றோ, வசனம் பேசியோ தப்பிக்கவும் தெரியாது.
இந்த நேரத்தில் பக்கத்திலிருக்கும் மரத்திலிருந்த தேன் கூட்டிலிருந்து தேன் சொட்டுகிறது. தேனீக்களின் தொந்தரவை மீறி ஆர்வத்துடன் குடிக்கிறான்.
அவனைப் பார்த்து வேதாந்திகள் “ஏ, மனிதனே! காடு என்பது பூமி. உள்ளே நுழைவது என்பது வாழ்க்கையைக் குறிக்கும். கொடிய மிருகங்கள் உன்னைப் பீடிக்கிற வியாதிகள்; கோரமான அந்த உருவம் உன் அழகையும், இளமையையும் குலைக்கும் வயோதிகம்...”
இப்படிப் பாம்பு, யானை, எலி... இவற்றைக் காலன், மனித ஆயுள், ஆசை என உருவகப்படுத்திக் கொண்டே போய் “இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் நீ அற்பப் புலனின்பங்களுக்கு ஆளாகாமல், முக்தி கிடைக்கும் ஊருக்கு ரயில் ஒன்று கிளம்பத் தயாராக இருக்கிறது. அதில் தட்கலில் டிக்கெட் வாங்கியாவது கடைத்தேறும் வழியைப் பார்ப்பாயாக!” என்றால், அது உண்மையாகக்கூட இருக்கட்டும்.
ஆனால், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் நம் ஹீரோ “டைனோசர்களும், அனகோண்டாக்களும், வாம்ப் பயர்களும் சூழ்ந்திருக்கும் இந்நேரத்தில் தன்னால் இப்போது செய்யக்கூடிய ஒரே உருப்படியான வேலை தேனைச் சுவைப்பது மட்டுமே” என்றால், அந்த உண்மையையும் மறுக்க முடியாது.
இந்த ‘செக்மேட்’ நிலையிலும்கூட இன்புற்று இருக்க, தேனைக் கிடைக்கச் செய்த இறைவனின் அல்லது இயற்கையின் கருணைக்கு நன்றி கூறி, அந்த நிமிடத்தை அனுபவிப்பதே புத்திசாலித்தனமானது.
அக்கம் பக்கம் பாருங்கள்
எதிர்வீட்டு பையன் ஹரேஷ். நான்கு வயசாகிறது. இரவு தூங்கச் செல்லும்போதே “நாளைக்கு ஸ்கூல் போக மாத்தேன்” என்று அடுத்தநாள் கவலையோடுதான் போவான். மறுநாள் அழுது கொண்டேதான் எழுவான்; வேண்டுமென்றே வாந்தி எடுப்பான்; யூனிஃபார்ம் போட மாட்டான்; ஸ்நாக்ஸை ஃப்ரெண்ட்ஸ் பிடுங்குகிறார்கள்; மிஸ், ஆயா மிரட்டுகிறார்கள்; வேறு வழியின்றி உலகிலேயே பெருங்கவலை படிந்த முகத்தோடு போவான். இத்தனை இம்சைகளுக்கு மத்தியில் நண்பர்களிடம் காட்டப் பையில் பொம்மை வைத்திருப்பான். “எங்கிட்ட புது பொம்மை இருக்கே!” என்பான் பெருமையாக.
ஆக, தேனைச் சுவைக்க என்று தனியாக நேரம் எதுவும் வரப்போவதில்லை;
அல்லது இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில்தான் தேன் கிடைக்கும்;
இத்தனை இம்சைகள், அலைக்கழிப்புகளுக்கு மத்தியில்தான் தேனுக்கு லைக் போடுவது, ஸ்டேட்டஸ், தொங்கியபடி செல்ஃபி எல்லாம்! புது பொம்மை என்று பெருமை அடிப்பது எல்லாம்..!
அலைகள் விடுமுறை எடுத்த பின் குளிக்க நினைத்தவர்களின் அங்கங்கள் நனையவே போவதில்லை! காடுகள் உங்கள் பாதையில் தோன்றிக் கொண்டுதான் இருக்கும். மிரளாமல் கொஞ்சம் கவனித்தால் ஒரு ஒற்றையடி பாதை உங்கள் பாதங்களுக்கெனக் காத்திருக்கும்.
எல்லாமே எதிராகத் திரும்பிவிட்ட நிலையிலும்கூட, நம்பிக்கைப் பார்வை கூட வேண்டாம் கொஞ்சம் கழுத்தைத் திருப்பி அக்கம்பக்கம் பார்த்தீர்கள் என்றால் உளுந்தவடை - சட்னி, சம்பள உயர்வு, பொம்மை எல்லாமே உங்களைச் சுவாரஸ்யமாக்கக் காத்திருப்பதை உணர்வீர்கள்!
- நிறைவடைந்தது
தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com