Last Updated : 09 May, 2017 10:43 AM

 

Published : 09 May 2017 10:43 AM
Last Updated : 09 May 2017 10:43 AM

துறை அறிமுகம்: சூழலியல் நண்பனாகலாம்!

தேசத்துக்கு வளர்ச்சியும் மேம்பாடும் கொண்டுவருவதற்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. நதிகள், வனங்கள் போன்ற இயற்கை வளங்களை நீண்டகால அளவில் பாதிக்காததாக வளர்ச்சித் திட்டங்கள் இருக்கவேண்டும். இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தி நிலைகுன்றாத வளர்ச்சிக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட முதன்மையான நிர்வாகக் கருவிதான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment). இந்தியாவில் உள்ள நதிப்படுகைகளில் உருவான திட்டங்களின் சுற்றுச்சூழல்ரீதியான தாக்கங்களை ஆராயும் வகையில் 1979-ல் இந்திய அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வுகளைச் செய்யத் தொடங்கியது.

பெருந்திட்டங்களுக்கு அவசியம்

1986-ல் அமலான சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் 1994 ஜனவரி 27-ல், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை சட்டரீதியாகக் கட்டாயமாக்கப்பட்டது. அதன்பின்னர் மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் எந்தத் திட்டத்துக்கும் அனுமதி வழங்கும். அதற்கு ஐம்பது கோடி ரூபாய்க்கும் மேலான முதலீட்டைக் கொண்ட எந்தவொரு திட்டத்துக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை அவசியம்.

சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறைகளும் ஆய்வுகளும் கடந்த இருபது ஆண்டுகளாகத்தான் வளர்ந்துள்ளன. இந்நிலையில் புதிய தலைமுறை சுற்றுச்சூழல் நிபுணர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்பது கல்வித்துறை, அரசு, சுற்றுச்சூழல் ஆலோசகத் துறைகளில் வேலைவாய்ப்புகளைக் கொண்ட துறையாகவும் மாற்றம் பெற்றுள்ளது.

நிபுணர்களின் பணி என்ன?

திட்ட இடங்களை ஆராய்வது, செயல்முறைகளைப் பரிசீலிப்பது, கொடுக்கப்பட்ட திட்டத்தின் பாதகமான தாக்கங்களைத் தவிர்க்கப் பிரச்சினைகளை ஊகித்து நிவாரணங்களை வழங்குவது ஆகியவை சுற்றுச்சூழல் நிபுணர்களின் பணி. காற்று மாசுபாடு மற்றும் கட்டுப்பாடு, நீர் மாசுபாடு மற்றும் கட்டுப்பாடு, ஏர் மாடலிங், நீரியல், மணல் அறிவியல், வானிலையியல், நிலவியல், அபாயகரமான கழிவுகள் மேலாண்மை, சத்தம் மற்றும் அதிர்வு ஆய்வுகள், மழைநீர் சேமிப்பு, சூழலியல் மற்றும் பல்லுயிரியம், சமூக-பொருளாதார ஆய்வு, ரிஸ்க் அசஸ்மெண்ட் போன்றவற்றில் சுற்றுச்சூழச் சூழல் நிபுணர்கள் சிறப்புத் தகுதி பெற்றிருந்தால் மேலும் வாய்ப்புகள் உள்ளன.

உயர்கல்வியும் ஆய்வுப்பட்டமும் இருந்தால் இமாலய ஆய்வுகள், சவுத் ஏசியன் டிரில்லிங் ப்ரோகிராம், ஆர்ட்டிக் மிஷன், அண்டார்ட்டிக் மிஷன் போன்றவற்றிலும் பணியாற்றுவதற்கான சாத்தியங்கள் உண்டு.

வாய்ப்பும் நம்பிக்கையும்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு துறையில் அறிவியல், சமூக அறிவியல் பட்டதாரிகள் பணியாற்றலாம். கல்வி நிலையங்கள், தனியார் ஆலோசக நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தனியாகவே ஆலோசக நிறுவனங்களையும் தொடங்கலாம். பன்னாட்டு திட்டங்களும் பெரும் முதலீடுகளும் இந்தியாவில் குவிந்து வரும் இக்காலத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டைப் பணியாகச் செய்பவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளையும் நம்பிக்கையையும் தரும் துறை இது.

அறிக்கையின் அடிப்படை

ஒரு புதிய திட்டம் அல்லது தொழிற்சாலையின் வாயிலாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்கனவே இருக்கும் மாசுபாட்டின் அளவை ஆராய்ந்து இந்த அறிக்கை தயாரிக்கப்படும். ஒரு திட்டத்தின் அளவையும் முக்கியத்துவத்தையும் பொறுத்து இது தீர்மானிக்கப்படும். அந்தப் பகுதியின் வானிலையியலும் காற்றின் தரமும் ஆய்வு செய்யப்படும்.

மேலும், இதில் ஆராயப்படுபவை:

# நீரியல் மற்றும் நீர் தரம்

# இடமும் அதன் சூழலும்

# பணிரீதியான பாதுகாப்பு மற்றும் பணியாளர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம்.

# தொழிற்சாலை வெளியிடும் கழிவுகள் மற்றும் கழிவுநீர் செறிவேற்றம் மற்றும் மறுபயன்பாடு.

# தொழிற்சாலைக்கு வரும் கச்சாப்பொருட்கள் போக்குவரத்து மற்றும் கையாள்தல்

# கட்டுப்பாட்டு கருவி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

பணிக்குத் தேவையான கல்வி

பி.எஸ்சி., எம்.எஸ்சி. (சுற்றுச்சூழல், வேதியியல், நிலவியல் போன்ற துறைகள்), எம்.டெக். (சுற்றுச்சூழல் பொறியியல், ரிமோட் சென்சிங் & ஜி.ஐ.எஸ்., ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ் போன்ற துறைகள்), முதுநிலை பட்டயம் (ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ், பொல்யூஷன் கண்ட்ரோல், ரிமோட் சென்சிங் & ஜி.ஐ.எஸ்.) மற்றும் பி.எச்டி. ஆய்வுப்பட்டம் (அறிவியல், சுற்றுச்சூழல் பொறியியல், வேதியியல் போன்ற துறைகள்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x