Published : 04 Mar 2017 11:33 AM
Last Updated : 04 Mar 2017 11:33 AM

நெடுவாசல்: சரியாகத்தான் போராடுகிறோமா?

தமிழக ஊடகங்களின் பார்வை இப்போது நெடுவாசல் மீது! ஜல்லிக்கட்டு, எண்ணூர் எண்ணெய்க் கசிவு என அடுத்தடுத்து வரும் ‘பிரேக்கிங் நியூஸ்' வரிசையில், இப்போது இடம்பிடித்திருப்பது ‘ஹைட்ரோகார்பன் திட்டம்'.

இந்தத் திட்டம் யாருக்கு வேண்டுமானாலும் லாபம் தருவதாக அமையட்டும். ஆனால், பாதிப்புகள் நிச்சயம் மக்களுக்குத்தான். இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டால் விளைநிலங்கள் பாதிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு எனப் பல விதமான பாதிப்புகள் ஏற்படும் என்று சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் கவனப்படுத்தி வருகிறார்கள்.

இந்தத் திட்டத்தைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் அரசு பரிசீலித்து வருகிறது. சமீபத்தில் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முதற்கட்டப் பணிகளில் அரசு இறங்கியிருக்கிறது. அதன் முதல் படியாக நெடுவாசலும் காரைக்காலும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன என்று சொல்லப்பட்டிருக்கிறது.

‘தேர்வு செய்யப்பட்டுள்ளது' என்று சொன்னதுதான் தாமதம். மெரினாவில் கூடிய கூட்டத்தில் கவனப்படுத்தக்கூடிய அளவு இப்போது நெடுவாசலில் முகாமிட்டிருக்கிறது. ‘தேர்வு செய்யப்பட்டுள்ளது' என்று சொல்லப்பட்டதே பாதிப்புகளைக் கொண்டுவந்துவிடுமா? அல்லது, தேர்வு செய்யப்பட்டவுடனே, ஒப்பந்தத்தைப் பெற்ற நிறுவனங்கள் கிணறுகள் தோண்ட ஆரம்பித்துவிடுமா? நிச்சயமாக இல்லை.

வெளிப்படைத்தன்மை எங்கே?

இந்தத் திட்டத்துக்கான இடம் தேர்வு செய்யப்பட்டவுடன், விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதன் பிறகு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்பதற்கான நிறுவனம் கண்டறியப்பட வேண்டும். பிறகு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதன் பிறகு மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற வேண்டும். அதற்குப் பிறகு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த அறிக்கையைச் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு பரிசீலித்து, தனது முடிவைத் தெரிவிக்க வேண்டும். அதற்குப் பிறகு மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தர வேண்டும். அதன் பிறகே, ஒரு நிறுவனம் தனது பணிகளைத் தொடங்க முடியும்.

ஒரு திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்பது மேற்கண்ட வரிசையில், இறுதியாக இடம்பெறும் ஒரு கண்ணி. பாதிப்புகள் உண்டு, இல்லை, எப்படிப்பட்ட பாதிப்பு என்பதெல்லாம், இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கிச் சில ஆண்டுகள் கழித்துத் தெரியவரும். அந்தப் பாதிப்புகள் என்ன என்பதையும், அவற்றை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்பதையும் ‘சுற்றுச்சூழல் மேலாண்மைக் கொள்கை'யில் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அந்த இறுதிக் கண்ணியை மட்டும் மனதில் கொண்டே விவசாயிகள், இளைஞர்கள், அரசியல் கட்சிகள் நெடுவாசலில் இன்றைக்குப் போராடி வருகின்றன.

ஒரு திட்டம் இறுதிக் கட்டத்தை அடையும்வரை எதிர்ப்பைக் காட்டாமல் காத்திருக்கத் தேவையில்லை. ஒரு திட்டத்தின் ஆரம்ப நிலையிலேயே, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனங்கள், அந்த நிறுவனங்களை முறைப்படுத்தும் அரசு அமைப்புகள் போன்றவை என்ன வகையான குறுக்கு வழிகளைக் கையாள்கின்றன என்பதையும், அவற்றிடம் வெளிப்படைத்தன்மை இல்லாதிருப்பதையும் கேள்வி கேட்க முடியும். எப்படி?

முகமூடிப் பெயரா?

தற்போதைய திட்டத்தில் துரப்பணம் செய்யப்பட இருப்பது மீத்தேனா, ஹைட்ரோகார்பனா?

இந்தத் திட்டத்தின் பெயரே மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, ஏமாற்றுவதற்கான அம்சத்தைக் கொண்டிருக்கிறது. முதலில் ஹைட்ரோகார்பன் என்றால் என்ன?

ஹைட்ரஜன் மற்றும் கார்பன் எனும் இரண்டு வேதிப்பொருட்களைக் கொண்ட கலவையே ஹைட்ரோகார்பன் என்று அழைக்கப்படுகிறது. இந்த வேதிக்கலவை பூமிக்கு அடியில் மீத்தேன், ஈதேன், பியூட்டேன் உள்ளிட்ட இயற்கை வாயுக்களாகவும் கச்சா எண்ணெய், வாயு மற்றும் நீர் சேர்ந்த கலவையாகவும் கிடைக்கிறது.

இவற்றைத் துரப்பணம் செய்வதற்கான முழு அதிகாரத்தையும் ‘டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் ஹைட்ரோகார்பன்' எனும் அமைப்பு கொண்டிருக்கிறது. இது மத்திய பெட்ரோலியம், இயற்கை வாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. அந்த வாயுக்களைத் துரப்பணம் செய்யும் நிறுவனமான ஓ.என்.ஜி.சி. எனப்படும் ‘எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழக'மும் பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ்தான் வருகிறது. தமிழகத்தில் பல வருடங்களாகச் செயல்பாட்டில் உள்ள கிணறுகளை இந்த அமைப்புகள் கொண்டிருக்கின்றன.

பூமிக்கு அடியிலிருந்து மீத்தேன் எடுப்பதற்கான கொள்கையை, மத்திய அரசு 1997-ம் ஆண்டு ஹைட்ரோகார்பன் இயக்குநரகத்தின் கீழ் கொண்டுவந்தது. அதன் பிறகு கொஞ்ச காலம் கழித்து, மத்திய நிலக்கரி அமைச்சகத்துடன் இந்த இயக்குநரகம் இணைந்து, 2007-ம் ஆண்டு முதல் வர்த்தக ரீதியில் மீத்தேன் எடுக்கும் பணியை மேற்கொண்டுவருகிறது. தற்சமயம், மேற்கு வங்கத்தில் உள்ள ராணிகஞ்ச் (கிழக்கு, தெற்கு) பகுதியில் மட்டுமே தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கிழக்கில் எஸ்ஸார் எண்ணெய் நிறுவனமும் தெற்கில் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனமும் துரப்பணம் செய்துவருகின்றன.

இவற்றில், கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம்தான், தமிழகத்தில் தஞ்சை டெல்டா பகுதியில் மீத்தேன் எடுப்பதற்கு முன்பு திட்டமிட்டிருந்தது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர், கடந்த ஆண்டு இந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஏன் ஒரே லைசென்ஸ்?

நிற்க, 2016-ம் ஆண்டு ‘டிஸ்கவர்டு ஸ்மால் ஃபீல்ட்ஸ்' எனும் கொள்கை ஹைட்ரோகார்பன் இயக்குநரகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதன்படி, ஹைட்ரோகார்பன் எனும் வேதிக்கலவை நிரம்பியுள்ள நிலப்பகுதிகள் நாட்டில் எங்கெல்லாம் இருக்கின்றன என்று தேடப்பட்டது. அந்தத் தேடுதலில் 31 இடங்கள் கண்டறியப்பட்டன. முன்பு, ‘நியூ எக்ஸ்புளோரேஷன் லைசென்சிங் பாலிசி' எனும் கொள்கை 18 ஆண்டுகளாக இருந்தது. அதன் கீழ், மீத்தேன் உள்ளிட்ட ஒவ்வொரு வகை ஹைட்ரோகார்பனை துரப்பணம் செய்யவும் தனித்தனியாக லைசன்ஸ் வழங்கப்பட்டது.

ஆனால் இப்போது, புதிதாக ‘ஹைட்ரோகார்பன் எக்ஸ்புளோரேஷன் லைசென்சிங் பாலிசி' கொண்டு வரப்பட்டு, அனைத்து வகையான ஹைட்ரோகார்பன்களையும் துரப்பணம் செய்ய ஒரே லைசன்ஸ் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம், பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ்நேரடியாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

நிலக்கரி அமைச்சகத்துடன் இணைந்து செயல்படும்போது, மீத்தேன் திட்டம் எனவும், பெட்ரோலிய அமைச்சகம் மட்டும் தனித்து இயங்கும்போது ஹைட்ரோகார்பன் திட்டம் எனவும் பூசி மெழுகப்படுகிறதோ என்று சந்தேகம் எழுகிறது. ஒருவேளை அது உண்மை என்றால், தற்போது நெடுவாசலில் கொண்டு வரப்படும் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் எடுக்கும் திட்டமாகவே இருக்கும். அந்தத் திட்டத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம், ஜெம் லாபரட்டரீஸ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

தகவல் இல்லாத இடைவெளிகள்

ஜெம் நிறுவனம் என்ன வகையான ஹைட்ரோகார்பனை துரப்பணம் செய்யப்போகிறது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. காரணம், ஒவ்வொரு ஹைட்ரோகார்பனுக்கும் ஒரு வேதியியல் பெயர் உண்டு. உதாரணத்துக்கு, C1 (மீத்தேன்), C2 (ஈதேன்), C3 (புரொபேன்)... இப்படி. மேலும், வெறும் மீத்தேனா அல்லது நீருடன் கலந்த மீத்தேன் வாயுவா என்பது தெளிவாக்கப்படவில்லை. ஒருவேளை, நீருடன் கலந்த மீத்தேன் வாயு என்றால், நீரிலிருந்து மீத்தேனைப் பிரிப்பதற்கு என்ன வகையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது தெளிவாக்கப்படவில்லை. இது ஒரு முக்கியமான கேள்வி.

“ஆனால் இதைவிட அடிப்படையான பல விஷயங்கள் மூடி மறைக்கப்படுகின்றன” என்கிறார் என்.கே. குட்டியப்பன். அடிப்படையில் சுற்றுச்சூழல் பொறியாளரான இவர், பல்வேறு நிறுவனங்களின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைகளைக் கடந்த பல ஆண்டுகளாகத் தணிக்கை செய்து வருபவர். இந்தத் திட்டம் குறித்து நமக்கு மேலும் பல தகவல்களைத் தருகிறார் அவர்.

விடையில்லாக் கேள்விகள்

“ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எவ்வளவு ஆழம் தோண்டப்பட வேண்டும் என்ற ‘டார்கெட் டெப்த்' அளவு குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அந்த அளவு எவ்வளவு என்று இந்த விவகாரத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை. இது முதல் கேள்வி. ஒருவேளை அந்த அளவு 750 மீட்டர் முதல் 2 ஆயிரத்து 500 மீட்டருக்கும் மேலாகச் சென்றால், நிச்சயம் அது மீத்தேன் எடுப்பதற்கான அளவுதான். நிலக்கரி படிமங்களிலிருந்து மீத்தேனை எடுப்பது, அதாவது, சுத்தமில்லாத நிலக்கரியிலிருந்து தூய்மையான மீத்தேன் வாயுவைப் பிரித்தெடுப்பது என்ற வகையில்தான் இந்தத் திட்டமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் கொள்கையும் அதுதான்.

இரண்டாவதாக, ஒரே ஒரு இடத்தில் கிணறு தோண்டி ஹைட்ரோகார்பனை எடுக்க முடியாது. குறைந்தபட்சம் 10 அல்லது அதற்கும் அதிகமான கிணறுகள் தோண்டப்பட வேண்டும். அப்படி எத்தனை கிணறுகள் தோண்டப்படும் என்பது 'டெக்னோ எகனாமிக் ஃபீசிபிளிட்டி' எனும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும். அந்த அறிக்கையைச் சம்பந்தப்பட்ட நிறுவனம்தான் தயாரித்திருக்கும். அப்படி எத்தனை கிணறுகள், என்ன விவரம் என்பது இதுவரை சொல்லப்படவில்லை.

பிறகு அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து நீரிலிருந்து வாயுவைப் பிரிப்பதற்கான வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான நேரம் ஒரே ஒரு கிணற்றுக்கு மட்டும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை அந்த நிறுவனம் சமர்ப்பிக்கலாம். அப்படிச் செய்தால் அது தவறு. ஏனெனில், ஒரு கிணறு தோண்டினால் அந்தப் பகுதியில் மட்டுமல்லாது, அந்தக் கிணற்றிலிருந்து குறிப்பிட்ட கி.மீ. விட்டத்துக்கு ‘பேசின் ஈ.ஐ.ஏ.' எனப்படும் ‘படுகை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை' மேற்கொள்ள வேண்டும். அது குறித்த தகவல்கள் இந்நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் தெளிவுபடுத்தப்படவில்லை.

மூன்றாவதாக, ஹைட்ரோகார்பனை எடுக்க வேண்டுமானால் கிணறு தோண்டப்பட்டு, அதன் கீழே நீரைச் செலுத்த வேண்டும். அப்போதுதான் பாறைகள் பிளவுபட்டு, அதிலிருக்கும் வாயுக்கள் வெளியேறும். இதை ‘ஹைட்ராலிக் ஃபிராக்சர்' என்கிறார்கள். இதற்கான நீர் எங்கிருந்து எடுக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் இல்லை. ஒருவேளை அவ்வாறு நீர் செலுத்தப்பட்டாலும், வெளியேறும் வாயுக்கள் நீருடன் கலந்த வாயுக்களாகவோ (புரொட்யூஸ்டு வாட்டர்) அல்லது வாயுக்கள் மட்டும் தனியாகவோ பிரியும். நீருடன் கலந்து வெளியேறும் வாயுவைத் தனியாகப் பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரித்தவுடன், எஞ்சியிருக்கும் நீரை என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்படவில்லை.

இறுதியாக, இந்தப் பணிகளை மேற்கொள்ளவிருக்கும் ஜெம் நிறுவனம், இந்தத் துறையில் ஒரு புதிய நிறுவனம். அதனால், அதனிடம் போதிய அனுபவம் இருக்காது. இந்நிலையில் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கு இதுபோன்ற பணிகளில் நான்கு வருட அனுபவம் உள்ளது. அந்த அனுபவங்கள் ஏன் பகிர்ந்துகொள்ளப்படவில்லை?

சீரழிவுக்கு என்ன பதில்?

இவையெல்லாம் இருக்கட்டும். நெடுவாசல் சுற்றுவட்டாரத்தில் 2009-ம் ஆண்டு ஹைட்ரோகார்பன் இருப்பதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட்டன. இந்தப் பகுதியில் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் கிணறுகள், கைவிடப்பட்ட கிணறுகள் பல வருடங்களாக இருக்கின்றன. அங்குள்ள 'டோட்டல் டிஸ்ஸால்வ்டு சாலிட்ஸ்' (டீ.டி.எஸ்) எனப்படும், நீரில் முழுமையாகக் கரையக்கூடிய திடப்பொருட்களின் அளவு என்ன என்பது கண்டறியப்பட்டிருக்கும்.

அந்த அளவுகள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் இரண்டாம் தரவுகளாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. ஏன்? அந்த அளவை, நம் நாட்டில் மீத்தேன் எடுப்பதில் அனுபவம் உள்ள நிறுவனங்களின் டீ.டி.எஸ். அளவுகளோடு ஏன் ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. ஏன் அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் அளவுகளோடு ஒப்பிடுகின்றனர்?

இந்தப் பகுதிகளில் செயல்பட்டுவரும் பல்வேறு எண்ணெய் நிறுவனங்களால், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கைகள், ஏன் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை? அந்த நிறுவனங்களின் கிணறுகளால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும்பட்சத்தில், தமிழ்நாடு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் தெரிந்திருக்குமல்லவா? அது குறித்த தகவல்கள் ஏன் இதுவரை பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளப்படவில்லை?

எனவே, முதலில் இதுவரை மேற்கண்ட நிறுவனங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, அதாவது, எத்தனைக் கிணறுகள் செயல்படுகின்றன, எத்தனை கைவிடப்பட்டன, நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்பட்ட மாசுபாடு, விளைநிலங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு போன்றவை குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும். அதற்குப் பிறகு மீண்டும் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

அப்போது தாங்கள் முன்பு பங்கேற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சொல்லப்பட்ட கருத்துகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு இறுதி அறிக்கையில் சேர்க்கப்பட்டுக் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரலாம். அப்போதுதான் இந்த நிறுவனங்களும், இவற்றை ஒழுங்குபடுத்த வேண்டிய அரசு அமைப்புகளும் சட்ட முறைப்படி இயங்கும்!” என்று வலியுறுத்துகிறார் குட்டியப்பன்.

மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் திட்டங்களுக்கு எதிராகப் போராடுவது அவசியம்தான். ஆனால், அறிவியலின் துணைகொண்டு போராட வேண்டும் என்பதே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி. வெற்று முழக்கங்கள் தீர்வுகளைத் தராது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x