Last Updated : 14 Jan, 2014 06:43 PM

 

Published : 14 Jan 2014 06:43 PM
Last Updated : 14 Jan 2014 06:43 PM

விலங்குகளின் காவலன்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வடலூர் வள்ளலாரின் வரிகளுக்கு ஏற்ப, நெய்வேலி நகரில் தெருவில் திரியும் விலங்குகளின் நலனுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார் மோகன்.

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஏ.எஸ்.நாதனின் இளைய மகனான என்.மோகன், தற்போது தாய் ரங்கமணியுடன் நெய்வேலி வட்டம் 5இல் வசித்துவருகிறார். என்.எல்.சி. தீயணைப்புத் துறையில் பணிபுரிந்துவருகிறார். நெய்வேலி ஜவகர் பள்ளி அருகே ஒரு முறை சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த கன்றுக்குட்டி மீது, பள்ளி வேன் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றிருக்கிறது. இதில் சாலை அருகேயிருந்த வாய்க்காலில் கன்றுக்குட்டி விழுந்துவிட்டது.

அப்போது அந்த வழியே வந்த மோகன் பார்த்தபோது, கன்றுக்குட்டியின் வயிற்றுப் பகுதியில் ரத்தம் வடிந்து கொண்டிருந்திருக்கிறது. உடனடியாகத் தனது பைக் பெட்டியில் வைத்திருந்த முதலுதவிப் பெட்டியில் இருந்து கன்றுக்குட்டிக்கு மருந்து போட்டிருக்கிறார். கால்நடை மருத்துவர் உதவியுடன், சில வாரங்கள் தனது கண்காணிப்பில் கன்றைப் பராமரித்த பின்னர், அதை வெளியே விட்டிருக்கிறார். விலங்குகளின் மீது இப்படி நேசம் கொண்டிருக்கும் மோகனைச் சந்தித்தேன்:

நெய்வேலி வட்டம் 29இல் தெருநாய்கள் தொல்லை தாங்காமல் அப்பகுதியில் இருந்த சிலர் நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டனர். தெருவோரம் இறந்து கிடந்த நாய்களின் சடலங்களைக் கொத்தித் தின்ற காகங்களும் இறந்துள்ளன. ஒரு வேளை நாய்களின் விஷம் கலந்த மாமிசத் துண்டுகளை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் காக்கைகள் போட்டிருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும்? பல நேரம் மனிதர்கள், மிகவும் கேவலமாக நடந்து கொள்கின்றனர். அவர்களுக்கிடையேதான் நாமும் வாழ்கிறோம்.

விலங்குகளின் நலனுக்காகவே 2009ஆம் ஆண்டு நேயம் எனும் அமைப்பை உருவாக்கினேன். இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து பலர் உறுப்பினர்களாகி வருகின்றனர். இதன்மூலம் விபத்தில் சிக்கும் நாய், கோழி, மாடு, குதிரை, பூனை உள்ளிட்டவை குறித்து தகவல் கிடைக்கும். அவற்றுக்குச் சிகிச்சை அளிக்கிறேன்.எனது சேவையை அறிந்த மாவட்டக் கால்நடைத் துறையினரும் உதவிவருகின்றனர். நெய்வேலி நகரில் கோமாரி நோய் தாக்குதலுக்குள்ளான பசுக்களுக்குத் தொடர் சிகிச்சை அளித்துவருகிறேன்" என்கிறார்.

கடந்த 13 வருடங்களாக விலங்குகளுக்குச் சேவை செய்வதில் தனிக் கவனம் செலுத்திவரும் மோகன், இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. வருமானத்தின் பெரும் பகுதியை விலங்குகளுக்காக செலவு செய்கிறீர்களே, உங்கள் எதிர்காலம் குறித்துக் கவலையில்லையா என்று கேட்டபோது, “என்னைத் திருமணம் செய்துகொள்ளும் பெண் என்னுடைய எண்ணத்தைப் புரிந்துகொள்ளும் பக்குவமுடையவராக இருந்தால்தான், இது போன்று விலங்குகள் நலனில் நான் தொடர்ந்து ஈடுபட முடியும். அப்படி யாரும் கிடைக்காததால் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்த விலங்குகள் யாரை நம்பி வாழ்கின்றன? நான் அவற்றை நேசித்து, அவற்றுக்காக வாழ்கிறேன்.

என்னைப் பொறுத்தமட்டில் எல்லா உயிர்களும் இந்த உலகில் வாழ உரிமையுண்டு. எனவே, அனைத்து உயிரினங்களையும் ஒவ்வொருவரும் நேசிக்க வேண்டும். குழந்தைகளிடமும் அந்தப் பக்குவத்தை ஏற்படுத்தவேண்டும்.மற்ற உயிர்கள் வாழ்ந்தால்தான் மனிதன் வாழமுடியும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். மனிதநேயம் மட்டும் போதாது, மற்ற உயிர்களையும் நேசிக்கக் கற்றுக்கொண்டால் மனமும், உடலும் ஆரோக்கியத்துடன் இருப்பதை உணர முடியும்” என்கிறார் மோகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x