Published : 10 Dec 2013 00:00 am

Updated : 06 Jun 2017 15:59 pm

 

Published : 10 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Jun 2017 03:59 PM

மின்னணுக் கழிவால் மூச்சுத் திணறும் பூமி

இப்போ வால் மவுண்ட் டிவியே ரொம்ப மலிவா கிடைக்குது. இன்னுமா 21 இன்ச் டிவியை மாத்தாம இருக்கீங்க?"

"எல்லார் வீட்லயும் ஸ்லிம் மானிட்டர் கம்ப்யூட்டர்தான் இருக்கு. நாமளும் பழைய கம்ப்யூட்டரைக் கொடுத்துட்டு புதுசு வாங்கிடலாமா?"


"இந்தச் செல்போன் அவுட் ஆஃப் ஃபேஷன். இப்போ எவ்வளவோ லேட்டஸ்ட் மாடல் வந்தாச்சு."

இந்த உரையாடல் சாதாரணமாக நடப்பதுதான். பெருகிவரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் பழையன கழிந்து, புதியன வாங்குவதில் தவறில்லை. ஆனால், நாம் வேண்டாம் என வீட்டுக்கு வெளியே அனுப்பும் மின்னணுக் கருவிகள் என்னவாகின்றன? அவற்றில் மிகக் குறைவான சதவீதம் மட்டுமே மறு பயன்பாட்டுக்கும் மறுசுழற்சிக்கும் செல்கின்றன. மீதியிருக்கும் மின்னணுக் கழிவு தவறான முறை களில் அழிக்கப்படுகின்றன. அவற் றால் உருவாகும் சூழல் மாசுபாடு, அச்சுறுத்தலாக மாறிவருகிறது.

சூழல் மாசுபாடு

இன்று வீட்டுக்கொரு மரம் இருக்கிறதோ இல்லையோ, ஆளுக்கு இரண்டுக்கு மேற்பட்ட செல்போன் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் அதன் ஒரு பகுதியாக இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பும் கிடைத்திருந்தாலும், மென்பொருள் நிறுவனங்களில் இருந்தும், தயாரிப்பு நிறுவனங்களில் இருந்தும் வெளியேற்றப்படும் மின்னணுக் கருவிகளின் அளவும் பெருகியுள்ளன. 2005ஆம் ஆண்டைப் போல ஆறு மடங்கு அதிக மின்னணுக் கழிவு 2012ஆம் ஆண்டில் வெளி யேற்றப்பட்டிருக்கிறது என்கிறது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.

என்ன செய்யப் போகிறோம்?

எனவே, நம்மால் முடிந்த அளவுக்கு மின்னணுக் கழிவை வெளியேற்றாமல் இருக்கலாம். நமக்குத் தேவையில்லாத பொருள் (செல்போன், கம்ப்யூட்டர்), அடுத்தவருக்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கலாம். அதனால் நமக்குப் பயன்படாத மின்னணு பொருட்களைத் தேவைப்படு கிறவர்களுக்குத் தந்து உதவலாம்.

அலட்சியம் ஆபத்து

அப்படியில்லாதபட்சத்தில், நாம் வெளியேற்றும் மின்னணுக் கழிவு, அவற்றைச் சேகரிக்கும் சிறு வியாபாரிகளைச் சென்றடைகிறது. அங்கே அவை பிளாஸ்டிக், உலோகம் என வகைப்படுத்தப்பட்டு மீதியிருக்கும் கழிவு எரிக்கப்படும். சில வகைக் கழிவுகளை அப்படியே மண்ணில் போட்டுவிடுவார்கள்.

மின்னணுக் கழிவிலிருந்து வெளியேறும் காட்மியம், குரோமியம், பாதரசம், காரீயம் போன்ற நச்சுகள் மண்ணை மாசுபடுத்துவதுடன் நீரையும் மாசுபடுத்தும். மின்னணுக் கழிவை எரிப்பதால் உருவாகும் நச்சுப்புகை புற்றுநோய், நரம்பு மண்டலம், சுவாசக் கோளாறுகள், பிறவிக் குறைபாடுகள் போன்றவற்றை உருவாக்கக்கூடும்.

அங்கீகரிக்கப்பட்ட சுழற்சி முறை

இப்போது சில நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்கின்றன. இதைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. இல்லையென்றால் அரசு அங்கீகாரம் பெற்ற மறுசுழற்சி நிறுவனங்களின் உதவியை நாடலாம். இவர்கள், சரியான முறையில் மின்னணுக் கழிவைக் கையாள்வார்கள்.

சென்னையில் கடந்த ஆறு ஆண்டுகளாக மின்னணுக் கழிவு மறுசுழற்சியில் ஈடுபட்டுவரும் ஜெம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி மன்னர் மன்னனும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார்.

"இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்கத் தொழில் நிறுவனங்களைவிட வீடுகளில்தான் மின்னணுக் கருவிகளின் பயன்பாடு அதிகம். ஆனால் வீடுகளைவிட நிறுவனங்களில் இருந்துதான் மின்னணுக் கழிவு அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது.

"பொதுவாக கம்ப்யூட்டர், செல்போன் சார்ந்த மின்னணுக் கழிவுகள் அதிக அளவில் வெளியேற்றப்படுகின்றன. அதற்கு அடுத்ததாக டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் இருக்கின்றன. இவற்றை முறைப்படி கையாளவில்லை என்றால் இந்தப் பொருட்களைத் தரம் பிரிக்கும் பணியாளர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு நேரலாம்" என்று சொல்லும் மன்னர் மன்னன், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற்ற மறுசுழற்சி நிறுவனங்களின் பங்கு குறித்தும் சொல்கிறார்.

சுற்றுச்சூழல் காப்போம்

"மின்னணுக் கழிவை மத்திய அரசின் அனுமதி பெற்று இயங்கும் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது, சுற்றுச்சூழல் சீர்கேட்டைப் பெருமளவில் குறைக்கும். உதிரி பாகங்களைச் சேகரிக்கும் சிறு வியாபாரிகளிடம் அவற்றைக் கையாள்வதற்கான உபகரணங்கள் எதுவும் இருக்காது. உதாரணமாக பயன்படாத தொலைக்காட்சிப் பெட்டியின் கண்ணாடியை உடைக்கும்போது, உள்ளே இருக்கும் வாயு வெளியேறும். அது அங்கிருக்கும் பணியாளர்களையும், அந்தச் சுற்றுப்புறத்தையும் பாதிக்கும். ஆனால் பெரிய நிறுவனங்களில் இதற்கெனத் தனிக் கட்டுமானம் இருக்கும். இவை பணியாளர்கள் உதவியின்றி, அங்கிருக்கும் குறைந்த காற்றழுத்த அறையில் தான் உடைக்கப்படும். இதனால் சூழல் மாசுபாடு குறைக்கப்பட்டு, பணியாளர்களும் பாதுகாப்புடன் இருக்கலாம்" என்கிறார்.

மறுசுழற்சியைவிட மறுபயன்பாடு சிறந்தது. ஒரு மின்னணுக் கருவியை வாங்கும் முன்னரோ, மாற்றும் முன்னரோ அதனால் சுற்றுச்சூழலுக்கும் நமக்கும் ஏதாவது பயன் விளை கிறதா என்று யோசித்துப் பார்த் தால் போதும். மின்னணுக் கழிவால் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து கொண்டிருக்கும் பூமிக்கு ஓரளவுக் காவது ஆசுவாசம் தர முடியும்.


மறுசுழற்சிமின்னணுக் கழிவுகம்ப்யூட்டர்செல்போன்காட்மியம்குரோமியம்பாதரசம்காரீயம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-updates

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x