ஜெயமுண்டு பயமில்லை - 21/03/14

ஜெயமுண்டு பயமில்லை - 21/03/14
Updated on
1 min read

சமீபத்தில் என்னை அழைத்த நண்பர் சற்று கோபத்துடன், “டாக்டர்! பரீட்சை அன்று காலை நன்றாகச் சாப்பிடணும் என்று நீங்கதானே எழுதினீங்க?” என்றார். சற்று பயத்துடன் “ஆமாம். என்னாச்சு?” என்றேன். “நீங்க சொன்னீங்களேன்னு என் மகனுக்கு நாலு பூரி, சாக்லேட், ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தேன்.பையன் பரீட்சை ஹால்ல நல்லா குறட்டை விட்டுத் தூங்கிட்டான்” என்று போனை வைத்துவிட்டார்.

தேர்வு அன்று நன்கு உணவு உண்ண வேண்டியது அவசியம்தான். ஆனால் என்ன உண்கிறோம், எவ்வளவு உண்கிறோம் என்பது அதைவிட முக்கியம். தேர்வு எழுதும் மூளைக்கு விமானம் போல எரிபொருள் முக்கியம். அதுவும் மாவுச்சத்து (CARBOHYDRATE) அவசியம். ஆனால் அது ஒரே சீராகக் கிடைக்க வேண்டும். மாவுச்சத்து மட்டும் அதிகம் இருக்கும் உணவுகள் நம் ரத்தத்தின் சர்க்கரை அளவை திடீரென்று அதிகரித்து, ஓரிரு மணி நேரத்துக்குப் பின் வெகுவாகக் குறைத்துவிடும்.

நூறு மீட்டர் பந்தயம் ஓடுபவருக்கு உடனடியாகச் சக்தி கொடுக்கக்கூடிய உணவுகள் தேவை. அரிசி, மைதா மாவினால் ஆன பூரி,பரோட்டா, சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவை அதிக மாவுச்சத்து நிறைந்தவை. ஆனால் தேர்வு எழுதுவது என்பது நிதானமாக ஓடவேண்டிய மாரத்தான் ஓட்டம் மாதிரி. ஆகவே ரத்தத்தின் சர்க்கரை அளவை மெதுவாக, சீராக ஏற்றக்கூடிய உணவுகள் மட்டுமே தேவை.

இவை மருத்துவ ரீதியாக க்ளைசீமிக் இண்டெக்ஸ் (Glycemic index) குறைவாக உள்ள உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன. நார்ச்சத்து மிக்க கோதுமை, ஓட்ஸ், பார்லி, ராகி, கம்பு போன்ற உணவுகள் இந்த வகையைச் சேர்ந்தவை. இவற்றையும் கஞ்சியாக அல்லாமல் களி, உப்புமா போல திட வடிவில் எடுத்துக்கொள்வது இன்னும் சிறந்தது.

காய்கறிகள் மூளைக்குத் தேவையான வைட்டமின்களை அளிப்பவை. பால், பழங்கள் போன்றவை உடனடியான சக்திக்கு அவசியம். வேகவைத்த பட்டாணி, கடலை போன்றவற்றையும் சாப்பிடலாம்.தேர்வுக்கு ஏற்ற உணவுகளில் முட்டையும் ஒன்று. முட்டையில் உள்ள கோலின் (choline) என்ற பொருள் மூளையிலுள்ள நரம்புகளின் செயல்பாடுகளுக்கும் நல்ல நினைவுத் திறனுக்கும் இன்றியமையாதது.

சிலர் பரீட்சை நடுவில் கொறிப்பதற்கு பிஸ்கட், சாக்லேட் போன்றவற்றை எடுத்துச் செல்வார்கள். இதற்குப் பதிலாக பழங்கள், சுண்டல் மட்டுமின்றி கடலைமிட்டாயைக்கூட எடுத்துச் செல்லலாம். பரீட்சை அன்று ‘பரோட்டா சூரி’யாக மாறி பரோட்டாக்களாக வெளுத்துக் கட்டினால் பந்தயத்தில் வேண்டுமானால் ஜெயிக்கலாம். பரீட்சையில் குறட்டைதான் வரும்.

- மீண்டும் நாளை...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in