Last Updated : 11 Mar, 2014 03:47 PM

 

Published : 11 Mar 2014 03:47 PM
Last Updated : 11 Mar 2014 03:47 PM

எது நோய்?

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நோய் எது என்று சரியாகத் தெரிவதில்லை. லட்சக்கணக்கான ஆண்டுகளாக உருவான உயிரியக்கத்தின் பரிணாம வளர்ச்சியில் நமது உடலுக்குள்ளேயே ஒரு மருத்துவர் உருவாகியிருக்கிறார். அவர் எப்போதும், அதாவது இருபத்தி நாலு மணி நேரமும் நமது உடலியக்கத்தைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறார். நாம் நமது உடலுக்குச் செய்யும் நல்லது பொல்லாததுகளை உற்றுக் கவனிக்கிறார்.

எங்கே கோளாறு ஏற்பட்டாலும் அடுத்த கணமே, அப்படிக்கூடச் சொல்லமுடியாது ஒரு கணத்தின் பின்னநேரத்தில் அந்த இடத்துக்குத் தன் படைபட்டாளத்தோடு கிளம்பி விடுகிறார். உடனடியாக அந்தக் கோளாறைச் சரி செய்வதற்காக என்ன விதமான நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அந்த நடவடிக்கையை எடுத்து விடுகிறார்.

இது எதையும் நாம் சொல்லிச் செய்வதில்லை அல்லது நம்மிடம் கேட்டுச் செய்வதில்லை. இதற்காக அவர் நம்மிடம் எந்த ஃபீஸும் கேட்பதில்லை. எந்தச் சோதனைச்சாலை பரிசோதனைகளையும் செய்யச் சொல்வதில்லை. ஆனால், தானாகவே நம்முடைய உடலியக்கம் இடையறாது நடப்பதற்கு, அவரால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கிறார். அவர் நம்மிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர் செய்துகொண்டிருக்கும் நலமாக்கல் முயற்சிகள் எதையும் தடுக்காதீர்கள், குழப்பாதீர்கள். வெளியிலிருந்து அந்நியப் பாதுகாவலர்களை (MEDICINES) உள்ளே அனுப்பி, அவருடைய நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்காதீர்கள்.

சரி. அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?

முடிந்தவரை உடலின் மருத்துவர் செய்யும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய வேண்டும். ஒத்துழைப்பு தர வேண்டும். அதற்கு முதலாவதாக எது நோய் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். நம்முடைய உடல் நோயிலிருந்து விடுபட்டு நலமடைவதற்குச் செய்யும் முயற்சிகள் எவை என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

தீதும் நன்றும்

நம்முடைய சமூகப் பழக்கவழக்கம், வேலை, ஆர்வக்கோளாறு, நம் உடல் மீதுள்ள அதீத நம்பிக்கை போன்றவற்றால் உடலுக்கு ஒவ்வாத பல செயல்களைப் பல நேரம் நாம் செய்கிறோம். நாம் மனம் உவந்து செய்கிற காரியங்களை, உடலால் தடுக்க முடியாது. சில நேரம் தடுக்க முயற்சிக்கும்.

புகைபிடிக்கப் பழக ஆரம்பிக்கும்போது இருமல், நெஞ்செரிச்சல், சளி கட்டுதல் போன்றவை வரும். மது அருந்தப் பழகும்போது உமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, உணவுப் பாதையில் எரிச்சல், தலைவலி, உடல்சூடு, நீர்ச்சத்து குறைவதால் உடல் உலர்தல் என்று பல வழிகளில் நம்முடன் உடல் பேசிப் பார்க்கிறது, மன்றாடுகிறது.

ஆனால், நாம் அப்படியெல்லாம் விட்டு விடுவோமா? விடாமல் பழகி உடலியக்கத்தின் ஆதாரங்களான கல்லீரல், சிறுநீரகம், சிறுகுடல், நரம்பு மண்டலம், எல்லாவற்றையும் பல நேரம் பாழ்படுத்தி விடுகிறோம். இது ஒரு பக்கம் என்றால், இரவு பன்னிரெண்டு மணிக்கு ரோட்டோரக் கடையில் புரோட்டாச் சால்னாவை வளைத்துப் பிடிப்போம். கெட்டுப்போன சால்னா உடலுக்குள் விஷமாக மாறி உடல்நலத்துக்கு நிரந்தரமாகத் தீமை செய்துவிடக் கூடாதென்று உடலின் மருத்துவர் உடனடியாக நடவடிக்கையில் இறங்குவார்.

அதிகமான நீர்ச்சத்தைச் சிறுகுடல், பெருங்குடலுக்கு அனுப்புகிறார். கெட்டுப்போன அந்த விஷத்தைக் குடல் உறிஞ்சி விடும் முன்பு எச்சரிக்கை செய்கிறார். வயிற்றில் வலியை ஏற்படுத்துகிறார். வயிறு கடமுடா என்று இரைகிறது. காலையிலேயே எழுப்பி விடுகிறது. நீராய்ப் பீச்சியடிக்கிறது.

வயிற்றுப்போக்கு உபாதையால் உடலின் நீர்ச்சத்து குறைகிறது. தாகம் எடுக்கிறது. உடல் சோர்வாய் இருக்கிறது. ஓய்வெடுக்கச் சொல்கிறது. மிகமிக எளிய உணவைச் சாப்பிடச் சொல்கிறது. உடலுக்கு முழு விஷத்தையும் வெளியேற்றிய திருப்தி வரும்வரை வயிற்றுப்போக்கு போகிறது. ஆக வயிற்றுப்போக்கு நோயல்ல. உடல் தன்னைத் தற்காத்துக் கொள்ள எடுக்கும் முயற்சி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

என்ன செய்கிறோம்?

ஆனால், நம்மில் பெரும்பாலோர் உடனே மருத்துவரைப் பார்க்கிறோம். மலச்சிக்கலை உருவாக்கும் மருந்துகளைப் பலரும் கொடுக்கிறார்கள். அதைச் சாப்பிட்டதும் வயிற்றுப்போக்கு நின்று விடுகிறது. நமக்குத் திருப்தி. ஆனால் அதற்கடுத்த இரண்டு நாளைக்கு மலம் போக மாட்டேன் என்கிறது. வயிறு கனமாக, பசியின்றி மந்தமாக இருக்கிறது. மறுபடியும் மருத்துவரிடம் சென்று மலச்சிக்கலுக்கு மருந்து வாங்கிச் சாப்பிட்டு மலம் கழிக்கிறோம்.

இதற்குள் உணவு விஷத்தை வெளியேற்றுவதற்கு உடலின் மருத்துவர் செய்த அத்தனை முயற்சிகளையும், நாம் சாப்பிட்ட மருந்துகள் முறியடித்துவிட விஷம் உடலில் தங்கிவிடுகிறது. சரி, இரைப்பைக்குப் போகும்போதே உடலுக்கு ஒவ்வாதது என்று தெரிந்துவிட்டால் வயிற்றுத் தசைகளை முறுக்கி, வாந்தியை ஏற்படுத்துகிறது. இப்படி எல்லா வழிகளிலும் நம் நலத்தைப் பாதுகாக்க உடல் முயற்சிக்கிறது.

அடிபட்ட இடத்தில் ரத்தக் கசிவைத் தடுத்து உறையவைக்கும் பிளேட்லெட்டுகளுக்கு முதலில் கட்டளையைக் கொடுத்து உறைய வைக்கிறது. சிதைந்த செல்களைச் சுற்றி வீக்கம், வலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது. உடல் சூட்டை அதிகப்படுத்துகிறது. அதிகமான உடல் சூட்டில் வெளியிலிருந்து உடலுக்குள் அந்நியப் பாக்டீரியாக்கள், வைரஸ், இன்ன பிறவெல்லாம் நுழையாது. அதற்குப் பொருத்தமான தட்பவெப்பநிலையில்தான், நம் உடலில் நுழையும்.

உடனடியாகத் தன் படைவீரர்களுடன் வந்து, அந்த இடத்தில் சிதைந்த செல்களை வெளியேற்றச் சீழை உருவாக்கி, வெளியேற்றுகிறது. காயத்தின் தன்மையைப் பொறுத்துப் புதிய செல்களால் அந்தக் காயத்தைப் பாவு போல நெய்து மூடிவிடுகிறது. இந்தக் காரியங்களைச் செய்வதற்கு நம்முடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அதற்காகவே நெறிகட்டுதல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

தேவை புரிதல்

எனவே, நமக்கு எது நோய் என்பது பற்றி முதலில் புரிந்துகொள்ள வேண்டும். புறவயமான காரணிகளால் உணவு, காற்று, நீர், குளிர், வெப்பம், மழை, பூச்சிகள், உயிரினங்கள் ஆகியவற்றின் கடிகள், காயங்கள் போன்றவற்றால் உடலில் ஏற்படும் மாறுபாடுகளுக்கு, உடல் உடனடியாக எதிர்வினை புரிந்துவிடும். இதில் சிக்கலற்ற பெரும்பாலான மாறுபாடுகளை, நம்முடைய உடல் மருத்துவரே நலமாக்கிவிடுவார்.

சிலவற்றுக்கு மட்டும் வெளியி லிருந்து மருந்துப் பொருட்களின் அவசியத்தைக் கோருகிறது நம் உடல். ஆனால், நம்மில் பெரும்பாலோர் உடலின் மருத்துவர் செய்யும் நலமாக்கும் முயற்சிகளின்போதே, தலையிட்டு விடுகிறோம். நமது உடலை ஒரு எந்திரமாக நினைத்து, அலட்சியப்படுத்தி விடுகிறோம். ஆனால் நமது உடலும் அதன் இயக்கமும் கோடிக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து உயிரூட்டப்பட்ட அற்புத இயங்கியல் வளர்ச்சி. அதை நாம் மதிக்காமல் இருக்கலாமா?

- உதயசங்கர், எழுத்தாளர், udhayasankar.k62@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x