சேதி தெரியுமா?- பிரான்ஸ் தேசிய தினத்தில் தாக்குதல்

சேதி தெரியுமா?- பிரான்ஸ் தேசிய தினத்தில் தாக்குதல்
Updated on
3 min read

பிரான்ஸின் தேசிய தினமான பஸ்டீல் தினக் கொண்டாட்டத்தின்போது நீஸ் நகரில் குழந்தைகள் உள்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். ஜூலை 14 அன்று, பஸ்டீல் தினத்துக்காக நடத்தப்பட்ட வாணவேடிக்கை நிகழ்ச்சிகளைக் காண மக்கள் கூடியிருந்த சாலையில், லாரி ஒன்றை ஓட்டிவந்த ஓட்டுனர் கூட்டத்தின் மீது மோதி இத்தாக்குதலை நிகழ்த்தினார்.

இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு மக்களைக் கொன்று குவித்த அந்த ஓட்டுநரை போலீசார் சுட்டுக்கொன்ற பிறகே வண்டியை நிறுத்த முடிந்தது. அந்த லாரியில் துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் இருந்ததைக் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பிரான்ஸின் அதிபர் ஃபிரான்ஸ்வா ஒல்லாந் இதை தீவிரவாதத் தாக்குதல் என்று கூறினார். இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் மூன்று தினங்கள் விடுமுறை விடப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸின் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டதையடுத்து நடந்த பெரிய தாக்குதல் இது.

சூடுபறக்கப்போகும் தமிழக பட்ஜெட்

தமிழக சட்டப் பேரவையில் 2016-17-ம் நிதியாண்டுக்கான முழுமையான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை வரும் ஜூலை 21-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், வருவாய்ப் பற்றாக்குறை 9 ஆயிரத்து 154 கோடியாக இருந்தது. நிதிப் பற்றாக்குறை 36 ஆயிரத்து 740 கோடி ரூபாயாக இருந்தது.

தமிழக அரசுக்கு இருக்கும் நிதிப் பற்றாக்குறை மற்றும் ஒட்டுமொத்த கடன் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள், பாலாறு நதி நீர் தாவா, ஏழாவது நிதி அறிக்கை மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் புதுப்பிப்பது குறித்து விவாதங்கள் இதில் இடம்பெறும்.

அரிய வகை வண்ணத்துப்பூச்சி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே காணப்படும் அரிய வகை வண்ணத்துப்பூச்சியான ‘பளிங்குச் சிறகு வண்ணத்துப்பூச்சி’யை (Marbled Map Butterfly) ஆந்திரப் பிரதேச அரசு அதிகாரியான என்.சந்திரமோகன் ரெட்டி கண்டுபிடித்துள்ளார். சிக்கிம், அருணாசலப் பிரதேசம், ஜார்க்கண்ட், பூட்டான் மற்றும் மியான்மர் பகுதிகளில் உள்ள மலைக்காடுகளில் மட்டுமே காணப்படக்கூடிய வண்ணத்துப்பூச்சி இது.

இதன் உயிரியல் பெயர் சிரஸ்டிஸ் கோக்லஸ். இளம் பச்சை நிறத்தில் மங்கலான குறுக்குக் கோடுகளைக் கொண்ட வட்ட வடிவ சிறகுகள் கொண்டவை இந்த வண்ணத்துப்பூச்சிகள். இந்தியாவில் இதுவரை ஆயிரத்து 318 வண்ணத்துப் பூச்சி வகையினங்கள் பதிவாகியுள்ளன.

பயிர் காப்பீட்டுத் திட்டம் அமல்

தமிழக விவசாயிகளுக்குப் பயனளிக்கும் விதமாக, பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா திட்டத்தை ஜூலை 15 அன்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா அமல்படுத்தினார். இந்தப் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக அரசு செலுத்தும் பிரீமியம் பங்குத் தொகை 40 கோடியிலிருந்து 500 கோடியாக உயருமென்றும் அதனால் நிதிச்சுமை அதிகரிக்குமென்றும் கூறியுள்ளார். ஆனாலும் தமிழக விவசாயிகளுக்கு இதனால் கூடுதல் பயன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில், பிர்கா அளவில் சேதம் கணக்கிடப்படாமல் கிராம அளவில் விவசாயிகளுக்கான நஷ்டம் கணக்கிடப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தைக் கணக்கிடும் முறை துல்லியமாவதால், அதற்கேற்ற நியாயமான இழப்பீடு விவசாயிகளுக்குக் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தென்னை மரக் காப்பீடு திட்டமும் தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

யூ.பி.எஸ்.சி.யில் ஆங்கிலமே பிரதானம்

கடந்த ஐந்தாண்டுகளாக யூ.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. 2009-ல் ஆங்கிலத்தில் எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 62 சதவீதம். 2011-ல் அந்த எண்ணிக்கை 83 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் வேகமாகக் குறைந்துவருகிறது.

2010-ல் 36 சதவீதமாக இருந்தது. 2011-ல் 15 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் யூ.பி.எஸ்.சி.யின் இணையதளத் தகவல் தெரிவிக்கிறது. அதே வேளையில் மராத்தியைத் தேர்வு மொழியாகத் தேர்ந்தெடுப்பவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. 2009-ல் மராத்தியில் 5 சதவீதத்தினர் தேர்வு எழுதினார்கள்.

2014-ல் 9 சதவீதத்தினர். இந்தியைத் தவிர மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கைத் தேர்வு மொழியாக ஐந்து சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். தேர்வு எழுதிய மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் 20 சதவீதம் பேர் ஐ.ஐ.டி. மற்றும் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள்.

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ராஜஸ்தான் பல்கலைக்கழகம் போன்றவற்றில் படித்தவர்கள் அதிகம் தேர்வாகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in