Published : 24 Jan 2017 10:33 AM
Last Updated : 24 Jan 2017 10:33 AM

நேர்முகத் தேர்வு: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்!

வேலை கொடுக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய தகுதியுள்ள நபர்களையே பணியில் அமர்த்த விரும்புவர். வந்திருக்கும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து அதில் நல்ல திறமையுள்ள, தகுதியுள்ள நபர்களை முதல் கட்டமாகத் தேர்வு செய்து அவர்களுக்குத்தான் நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை அனுப்புவார்கள். ஆக, தேர்வாளர்களுக்கு நம்மை முதலில் அறிமுகப்படுத்துவது நம்மைப் பற்றிய விவரங்கள் அடங்கிய ரெஸ்யூம்தான். அத்தகைய ரெஸ்யூமை எப்படி, எத்தகைய கண்ணோட்டத்தில் தயாரித்தால் நாம் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவோம் என்பதைப் பார்ப்போம்.

ரெஸ்யூம் என்பது

பணி சார்ந்த குறிப்புகள் நிறைய இடம்பெறுமாறு தயாரிப்பதுதான் ரெஸ்யூம். அத்தகைய ரெஸ்யூம்:

# பணி தொடர்பான பாட அறிவு பெற்றிருத்தல் அவசியம். அது ரெஸ்யூமிலும் பிரதிபலிக்க வேண்டும்.

# புரிந்துகொள்ளும் வண்ணம் சுருக்கமாகத் தயாரிக்க வேண்டும். இரண்டு பக்கங்களில் தயாரிக்க முடியுமென்றால், அதை நான்கு பக்கங்களாக இழுக்க வேண்டாம்.

# ஆங்கிலத்தில் எழுத்துப் பிழைகளின்றி எழுத வேண்டும்.

# பணி அனுபவம் இருப்பின் முந்தைய நிறுவனத்தில் நமது திறமை பற்றிய குறிப்புகளைக் குறிப்பிட்டு, அதற்கான சான்றுகளையும் இணைத்திடலாம்.

# பணி தருபவர் நிலையில் நம்மைப் பொருத்திப் பார்த்து, அதற்கு ஏற்ற மாதிரித் தகவல்களை முன்வைத்து எழுதுவது அவசியம். உதாரணமாக, மார்க்கெட்டிங் சம்பந்தப்பட்ட வேலையாக இருந்தால் பல இடங்களுக்குப் பயணிப்பதில் விருப்பம் உள்ளவராக இருப்பது ஒரு தகுதியாகும்.

# எல்லாக் குறிப்புகளையும் தயாரித்த பிறகு அனுபவம் கொண்டவர்கள் மூன்று, நான்கு பேரிடமாவது அதைக் காண்பித்துச் சரி செய்துகொள்ளலாம்.

நேரில் கேட்பார்களே!

நேர்முகத் தேர்வு அறைக்குள் நீங்கள் நுழையும்போதே தேர்வாளர்கள் உங்களுடைய ரெஸ்யூமை கையில் வைத்திருப்பார்கள். இருந்தாலும் பொதுவாகச் சில கேள்விகளைத் தவறாமல் கேட்பார்கள். அவற்றுக்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்வது அவசியம். அவற்றில் சில :

# உங்களைப் பற்றிக் கூறுங்களேன் அல்லது உங்களின் ரெஸ்யூமில் உள்ளவாறு உங்களை அறிமுகப்படுத்துங்களேன்.

# தற்போதைய உங்கள் பணி பற்றி, அதில் உங்கள் பங்கு பற்றிக் கூறுங்கள்.

# படிப்பில் இடைவெளி ஏன் ஏற்பட்டது? (ஒரு வேளை ஏற்பட்டிருந்தால்)

# பணியில் ஏன் இடைவெளியாயிற்று? (ஒரு வேளை ஏற்பட்டிருந்தால்)

# இப்போதைய பணியை விட்டுச் செல்ல ஏன் முயல்கிறீர்கள்?

# உங்களுடைய பலம் என்ன, பலவீனம் என்ன?

# இந்தக் கம்பெனியில் சேர விரும்புவது ஏன்?

# இதுவரையிலான உங்களின் மிகப் பெரிய வெற்றி எது?

# இந்தச் சிறப்பியல்பைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

# குறிப்பிட்ட தேர்வில் உங்கள் மதிப்பெண் இவ்வளவு குறைவாக இருப்பது ஏன்?

# உங்களை நாங்கள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

# நீங்கள் எங்களைக் கேட்க வேண்டிய கேள்வி ஏதேனும் இருக்கிறதா?

இவையன்றியும் சில கேள்விகள் இருக்கலாம். நிறுவனம் பற்றி, சில பொது அறிவுத் தொடர்பான கேள்விகள் என அவற்றுக்கும் நீங்கள் தயாராக வேண்டும்.

இவற்றுக்கான பதில்களை உங்கள் பாணியில் முதலிலேயே மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். மனதில் நேர்முகத் தேர்வு நடப்பு ஓடிக் கொண்டேயிருக்கவேண்டும்.

தேர்வர்கள் உங்களைப் பார்க்கும்போதே இந்த நபர் இந்தப் பணியில் விருப்பமுள்ளவர் என உடலசைவு, உரையாடும் விதம் ஆகியவற்றை வைத்தே கணித்துவிடுவார்கள். முன்னுக்குப் பின் முரணாக எதையும் சொல்லக்கூடாது. குறிப்பாக ரெஸ்யூமில் குறிப்பிடும் விஷயங்கள் அனைத்தையும் பற்றி நன்கு தெரிந்துவைத்திருக்க வேண்டும். உதாரணமாக, “என்னுடைய பொழுதுபோக்கு கிரிக்கெட் விளையாடுவது” எனக் குறிப்பிட்டிருந்தால், கிரிக்கெட் தொடர்பான குறைந்தபட்சத் தகவல்களை நீங்கள் தெரிந்துவைத்திருக்கிறீர்களா எனச் சோதிப்பார்கள். அதேபோல நேர்முகத் தேர்வின்போது, சம்பந்தமே இல்லாமல் “என்னுடைய பொழுதுபோக்கு செஸ் விளையாடுவது” எனச் சொன்னீர் களேயானால் குளறுபடிதான்.

ஆக, உங்களுடைய உண்மையான விவரங்களைத் தன்னம்பிக்கையோடு முன்வைப்பதுதான் சரி. எல்லாவற்றுக்கும் மேலாக நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றால் நல்லது. பெறாவிட்டால் இதைக் காட்டிலும் நல்ல வாய்ப்பு வரும் என்கிற மனநிலை அவசியம்.

- க.நா. இராமகிருஷ்ணன், பி.காம்., பி.லிட்.(தமிழ்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x