Last Updated : 06 Dec, 2013 12:00 AM

 

Published : 06 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Dec 2013 12:00 AM

சீர்திருத்த சினிமாவின் பொற்காலம்

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு ஊடகமாகத் திரைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன (குறிப்பிடும்படி, முதல் பேசும் படம் காளி தாஸ்(1931) தொடங்கி, மேனகா(1935), தியாகபூமி(1939), உத்தமபுத்திரன்(1940), நாம் இருவர்(1947) என நிறையப் படங்கள்.)

போலி சாமியார்களைப் பற்றியும் அவர்கள் மக்களை எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதையும் உணர்த்தும் படமாகச் சந்திரகாந்தா, 1936-ல் வெளிவந்து வெற்றி கண்டு ஒரு சமுதாயத் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தீண்டாமை, கைம்பெண்களின் வாழ்க்கை, பிராமணர்களின் ஆதிக்கத்தினால் சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் எனப் பல சமூக மாற்றங்களின் தேவையைக் கே.சுப்ரமணியத்தின் பாலயோகினி, 1937-ல் ஏற்படுத்தியது. 1938-ல் கே. சுப்ரமணியத்தின் சேவாசதனம் இன்னும் ஒரு படி மேலே போய், பெண்கள் விடுதலை, பாலியல் தொழில், சமூகத்தில் தேவைப்படும் மாற்றம் எனப் பல விஷயங்களை முன் வைத்தது.

மண வாழ்க்கையில் சந்தோஷமில்லாத பெண், மண முறிவு கேட்டு, நீதிமன்றத்தில் கணவனுக்கே ஜீவனாம்சம் தர முற்படும் எண்ணம் கே. சுப்ரமணியத்தின் தியாக பூமியில் (1939) காண்பிக்கப்பட்டது. நாட்டுக்குத் துரோகம் செய்த கணவனுடன் வாழ விருப்பம் இல்லாமல், அவன் அணிவித்த தாலியைத் தூக்கி வீசும் காட்சி 1939-ல், மாத்ருபூமியில் காண்பிக்கப்பட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது.

பணம் படைத்தவன் ஏழைக்குத் தன் பணத்தைப் பகிர்ந்து கொடுத்து ஏற்றத்தாழ்வு களைச் சமூகத்தில் குறைக்கப் பாடுபட வேண்டும் என்ற குறிக்கோளை நல்ல தம்பி, 1949இல் முன்வைத்தது. கடவுள் நம்பிக்கை பற்றியும், சமூக மாற்றங்களின் அவசியம் பற்றியும் அண்ணாதுரையின் வேலைக்காரி, 1949இல் வாதிட்டது.

விவாகரத்து மற்றும் பெண் மறுமணம் பற்றிய முக்கியமான கருத்துகளை முன் வைத்து 1951இல் வெளியான மு.கருணாநிதியின் மணமகள் வெற்றி கண்டது. அவரின் பராசக்தி (1952) மூட நம்பிக்கைகளைச் சாடி வரலாறு படைத்தது. தனக்குப் பின் தன் மனைவியின் மறுமணத்தைக் கணவனே ஏற்பாடு செய்யும் துணிச்சலான படமாக ரத்தக்கண்ணீர் (1954) புரட்சியையே உண்டு பண்ணியது.

விவசாயிகளின் வாழ்க்கை வெற்றி பெறத் தேவைப்படும் மாற்றங்களை வலியுறுத்தி 1956இல் வந்த காலம் மாறிப் போச்சு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

கே. பாலச்சந்தரின் பல திரைப்படங்கள் சமுதாய மாற்றங்களை முன்வைத்தன. அவற்றில் குறிப்பிடும்படியானவை, குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தைப் பற்றி சொன்ன அரங்கேற்றம் (1972), தாழ்ந்தவர்களாகக் கருதப்படுபவர்களின் வாழ்க்கையைப் பற்றிய சொன்ன தப்புத் தாளங்கள் (1978), வேலையில்லா பட்டதாரிகளைப் பற்றிய வறுமையின் நிறம் சிவப்பு (1980), தண்ணீர்ப் பஞ்சத்தைப் பற்றி பேசிய தண்ணீர் தண்ணீர் (1981), அரசியல்வாதிகளைச் சாடிய அச்சமில்லை அச்சமில்லை (1984) போன்ற பல திரைப்படங்களைக் குறிப்பிடலாம்.

பாரதிராஜாவின் பல படைப்புகளும் அவ்வாறு சமுதாய மாற்றங்களைக் குறி வைத்தன. குறிப்பிடும்படியாக, 1978இல் கிழக்கே போகும் ரெயில், 1979இல் புதிய வார்ப்புகள், 1981-ல் மத வேற்றுமைகளைச் சாடும் அலைகள் ஒய்வதில்லை, 1984இல் புதுமைப் பெண், 1987இல் சாதிகளைச் சாடும் வேதம் புதிது மற்றும் 1994இல் பெண் சிசுக் கொலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய கருத்தம்மா போன்ற படங்களைச் சொல்லலாம்.

தமிழ் சினிமாவின் தாக்கம் சமுதாயத்தில் எண்ணற்ற மாற்றங்களை உண்டாக்கியுள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டம் வந்ததிற்கும், பெண் சிசுக் கொலைகளைத் தடுக்கும் விதத்தில், கருவில் சிசுக்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் அறிவியல் முறையைத் தடை செய்ததற்கும் மேலே குறிப்பிட்ட படங்களையும் ஒரு காரணமாகச் சொல்ல முடியும்.

இவை மட்டுமல்ல: சமகால வாழ்க்கையில் நாம் கேட்ட, படித்த செய்திகளின் அடிப்படை யில் வெளியான மணிரத்தினத்தின் படங்களான ரோஜா (1992), பாம்பே (1995) இருவர் (1997) கன்னத்தில் முத்தமிட்டால் (2002) போன்றவை அதில் சொன்ன செய்திகள் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தின.

சேரனின் பாரதி கண்ணம்மா (1997) சாதியைச் சாடியது. வெற்றி கொடிகட்டு (2000) வெளிநாட்டில் வேலை தேடுவதை விமர்சித்து நாம் நாட்டின் பெருமைகளை உணர்த்தியது.

மக்கள் மனதில் ஊழலைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய ஷங்கரின் ஜெண்டில்மேன் (1993), இந்தியன் (1996) முதல்வன் (1999) அந்நியன் (2005) சிவாஜி (2007) போன்ற படங்கள் குறிப்பிடப்பட வேண்டியவை. அதனுடன் முருகதாஸின் ரமணா (2002), துப்பாக்கி (2012) போன்ற படங்களும் தாக்கத்தை ஏற்படுத்தியவை.

மேலே குறிப்பிட்டவை சில எடுத்துக்காட்டு கள் மட்டுமே. தமிழ் சினிமா தொடர்ந்து பல சமுதாய மாற்றங்களுக்கு வித்திட்டுவருகிறது என்பது என் அழுத்தமான எண்ணம்.

(கோ. தனஞ்செயன், ஸ்டூடியோஸ் ஆஃ டிஸ்னி-யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் நிறுவ னத்தின் தென்னக வணிகப் பிரிவின் தலைவர். இந்தக் கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகள், அவரது தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே.) தொடர்புக்கு: dhananjayang@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x