Published : 28 Jan 2014 12:00 AM
Last Updated : 28 Jan 2014 12:00 AM

பொறியியல் படிக்கும்போதே மேற்படிப்புக்கு தயாராகுங்கள்

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் என்னென்ன பட்டப் படிப்பு படிக்கலாம் என்று பார்த்தோம். பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு என்னென்ன பட்ட மேற்படிப்புகள் இருக்கின்றன என்று இப்போது பார்க்கலாம். ஏனெனில், பொறியியல் முடித்தவர்களுக்குமே வேலைவாய்ப்பில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, பொறியியல் படிக்கும்போதே திட்டமிடுவது அவசியம்.

பொறியியல் படித்து முடித்ததும் வேலைக்கு செல்வதா? எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்பு படிப்பதா? எம்.இ., எம்.டெக். போன்ற பட்ட மேற்படிப்புகள் படிப்பதா? GRE, TOEFL தேர்வு எழுதி வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு படிப்பதா? இந்த நான்கு விஷயங்களை நன்றாக யோசித்து, உங்களுக்கு ஏற்றது எது என்பதை பொறியியல் படிக்கும்போதே முடிவு செய்யுங்கள். எந்த பொறியியல் கல்லூரியில் படிக்கிறீர்களோ அந்த கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவுக்கு வரும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் பாடத் திட்டம், பணிக்கான வாய்ப்பு ஆகியவை குறித்து தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அந்த நிறுவனங்கள் நடத்தும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க, கணிதத் திறன் மற்றும் ஆங்கில அறிவை 2-ம் ஆண்டு படிக்கும்போதே மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புவோர் 2-ம் ஆண்டு படிக்கும்போதே CAT, MAT, XAT, CMAT ஆகிய பட்ட மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றால்தான் இந்தியாவில் எம்.பி.ஏ. படிக்க முடியும். இறுதி ஆண்டில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டால், பிரபல கல்லூரிகளில் சேர்க்கை கிடைக்காது. ஐ.ஐ.எம். போன்ற பெரிய கல்லூரிகள் நுழைவுத் தேர்வு, குழு கலந்தாய்வு, ஆங்கிலத் திறன் தேர்வு ஆகியவற்றை நடத்தியே மாணவர்களை தேர்வு செய்கின்றன.

எம்.இ., எம்.டெக். பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புவோர் GATE நுழைவுத் தேர்வுக்குத் தயாராக வேண்டும். இத்தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்கும். அதற்கான விண்ணப்பம் செப்டம்பர் அல்லது அக்டோபரில் அளிக்கப்படும். மூன்று மணி நேரம் நடக்கும் இத்தேர்வில் நான்கு ஆண்டுகள் பொறியியலில் படித்த, அனைத்து பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். எனவே, பொறியியல் 2-ம் ஆண்டு படிக்கும்போதே, இத்தேர்வுக்கு தயாராகுங்கள். இதில் சிறந்த மதிப்பெண் பெற்றால் ஐ.ஐ.டி. உள்ளிட்ட கல்லூரிகளில் எளிதில் சேரலாம்.

பட்ட மேற்படிப்பில் சிறப்பு பாடங்களைத் தேர்வு செய்து படிக்க விரும்புவோர் - உதாரணமாக மெக்கானிக் பாடப் பிரிவை தேர்வு செய்தவர்கள் ஆட்டோமொபைலில் மேற்படிப்பு படிக்க மினி புராஜெக்ட், இறுதி ஆண்டு புராஜெக்ட், ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான், அந்த பாடப் பிரிவுக்கான சேர்க்கையும் அத்துறையில் பணிவாய்ப்பும் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x