Published : 03 Sep 2016 01:35 PM
Last Updated : 03 Sep 2016 01:35 PM

ரியல் எஸ்டேட் வழிகாட்டி: பத்திரப்பதிவில் வழிகாட்டும் மாநிலம்!

இந்திய அளவில் பதிவுத் துறை யில் முன்னிலை வகிக்கும் மாநிலம், மகாராஷ்டிரா. நாள் ஒன்றுக்கு 9000க்கும் அதிகமான பத்திரங்கள் அந்த மாநிலத்தில் பதியப்படுகின்றன. 2013 2014-ம் நிதிநிலை ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலம் பத்திரப்பதிவுத் துறை மூலமாக மட்டும் சுமார் 18,666 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் (2015 2016) மற்ற மாநிலங்களைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாக சுமார் 21,000 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் அதிகரித்து உள்ளது என்பது குறிபிடத்தக்கது.

ஆன்லைன் மூலமாகப் பத்திரப்பதிவு செய்யும் ஒரே மாநிலமாகவும் மகாராஷ்டிரா திகழ்கிறது. புதிய அடுக்குமாடிக் குடியிருப்புப் பதிவுசெய்யும்போது ஆன்லைன் மூலமாகவே பதிவுசெய்ய முடியும். அதாவது வாங்குபவர் மற்றும் விற்பவர் தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ மேற்படி பத்திரப்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதற்காக அவர்களின் புகைப்படம் மற்றும் கைரேகைப்பதிவு (Biometric) கட்டாயமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவேண்டும். மேலும் பதிவுக்கான முத்திரை வரி மற்றும் பதிவுக் கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்தவேண்டும். இந்தச் சேவை 1½ வருடத்துக்கு மேலாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது.

இந்தச் சேவை குத்தகை பத்திரத்துக்கும் பொருந்தும். ஆன்லைன் மூலம் பத்திரப் பதிவு செய்பவர்களுக்கு 11 இலக்கம் கொண்ட அடையாள எண் உருவாக்கபடுகிறது. இதைத் தொடர்ந்து சார்பதிவாளர் (sub-registrar) ஆவணங்களைச் சரி பார்த்து அனுமதி வழங்கிய பின்னர் பத்திரப் பதிவுசெய்யப்படும் (இண்டக்ஸ் II குறியிடு மாற்றம் செய்யப்படும்). மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்திரப்பதிவு தொடர்பான பதிவுகளைப் பெறத் தகவல் சேவை மையம் பத்திரப் பதிவுத் துறைக்காகவே பிரத்யேகமாகச் செயல்படுகிறது. தற்போது மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளாவிலும் இச்சேவை மையம் உள்ளது. மக்களின் உபயோகத்துக்கு ஏற்றவாறு மகாராஷ்டிரா மாநிலத்தின் பத்திரப்பதிவு துறை அலுவலகங்களின் வேலை நேரம் காலை 7 முதல் மதியம் 2 வரையிலும் பிறகு பிற்பகல் 2 முதல் இரவு 9 வரையிலும் செயல்படுகிறது. மக்களின் வசதிக்காக மும்பை மற்றும் பன்வேல் நகரங்களில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக் கிழமைகளிலும் அலுவலகம் செயல்படுகிறது. இதற்குப் பதிலாக அனைத்து வியாழக் கிழமைகளிலும் இரண்டாவது மற்றும் நான்காவது புதன் கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

பொது மக்களின் வசதிக்கேற்ப ஆன்லைன் டோக்கன் பத்திரப்பதிவிற்காக 30 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1985-ம் ஆண்டு முதல் பதிவு சார் தகவல்கள் (certified copy Documents) ஆன்லைனில் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சேவையைப் பெற்றுகொள்ள ஆன்லைன் கட்டணம் செலுத்திப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். மேலும் பொதுமக்களின் பதிவு சார் தகவல்களை அவர்களே பதிவுசெய்யும் முறை போன்ற வசதிகளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைமுறையில் உள்ளன.

கட்டுரையாளர், கேரள அரசு ஆலோசகர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x