Published : 17 Mar 2017 10:13 AM
Last Updated : 17 Mar 2017 10:13 AM

நான்கு ஆண்டுகளை எடுத்துக்கொண்ட கதை! - இயக்குநர் விஜய் பேட்டி

ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் ‘பேராண்மை’. அந்தப் படத்தைப்போலவே ஜெயம் ரவி காட்டின் காவலனாக மீண்டும் அவதாரம் எடுத்திருக்கும் படம் ‘வனமகன்’. அதை இயக்கிவரும் இயக்குநர் விஜய்யுடன் பேசியதிலிருந்து...

‘பேராண்மை'யில் சிறப்பாக நடித்திருந்ததால்தான் ஜெயம் ரவியை இந்தக் கதைக்குத் தேர்வு செய்தீர்களா?

‘பேராண்மை' படத்துக்கும் இதற்குச் சம்பந்தமில்லை. ஜெயம் ரவி நடித்த படங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து நடித்த படமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி. எத்தனை மரம் ஏறியிருப்பார், எவ்வளவு அடி வாங்கியிருப்பார் என்பதற்குக் கணக்கே இல்லை. அத்தனை கஷ்டங்களுக்கும் மருந்தாக இந்த 'வனமகன்' இருக்கும். முதலில் சூர்யாவிடம்தான் பேசினோம். கால்ஷீட் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியாமல் போனது.

வனம்தான் கதையின் களமா?

காதல்தான் கதையின் களம். பழங்குடியின மக்கள் சிறந்தவர்களா, அனைத்து வசதிகளும் கொண்ட நாம் நல்லவர்களா என்பது கதையின் கரு. பணம், இணையம், வாட்ஸ்- அப் என எதுவுமே தெரியாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள். அனைத்து வசதிகளும் இருந்தும் நாம் ஏன் சந்தோஷமாக இல்லை என்பதைப் படத்தில் சொல்லியுள்ளேன். வாழ்க்கை தொடர்பான இரண்டு விஷயங்களைக் கையாண்டுள்ளேன். அதை நாயகி எப்படி உணர்கிறார் என்பதுதான் திரைக்கதை.

படத்தில் இடம் பெற்றிருக்கும் புலி சண்டைக் காட்சிக்கு அதிக சிரத்தை எடுத்தீர்கள் என்று செய்திகள் வெளியானதே?

அந்தக் காட்சியையும் சேர்த்து 45 நாட்களில் படத்தை முடித்துவிட்டேன். குறைந்த நாட்களில் படத்தை முடிக்க எனது அணி மட்டுமே காரணம். இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள்.

படத்தின் பொருட்செலவைத் தீர்மானிப்பது கதையா, நாயகனின் சந்தை மதிப்பா?

கதை மட்டுமே படத்தின் பொருட்செலவைத் தீர்மானிக்கிறது. அந்தப் பொருட்செலவை எடுப்பதற்கான நடிகர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது எல்லாம் இரண்டாம் பட்சம்தான். பொருட்செலவு பெரியது, சிறியது என்பதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்.

விஜய்யை வைத்து ‘தலைவா' செய்துவிட்டுக் குறைந்த முதலீட்டில் ‘சைவம்' செய்ய வேண்டிய காரணம் என்ன?

நல்ல கதைகளை மட்டுமே யோசிக்க வேண்டும், பொருட்செலவைப் பற்றி யோசிக்கக் கூடாது என்றுதான். அதற்கான முயற்சிகளில் எங்களுடைய பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. நல்ல கதையம்சம் உள்ள படங்களைக் கமர்ஷியல் பாணியில் செய்வதே எங்கள் நோக்கம். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'சில சமயங்களில்' திரைப்படம் 'கோல்டன் க்ளோப்' விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அதுதான் எங்களுக்குக் கிடைத்த மரியாதை.

அதிகமாக விளம்பரப் படங்களை இயக்கியுள்ளீர்கள். அந்த அனுபவம் திரைக்கு உதவுகிறதா?

விளம்பரத்தில் ஒரு கதையை 30 விநாடிகளில் சொல்ல வேண்டும். படத்துக்கு இரண்டரை மணி நேரத்தில் கதை சொல்ல வேண்டும். உங்களுக்கு எந்த ஷாட்டில் கதை சொல்ல வேண்டும் என்பது சரியாகத் தெரிய வேண்டும். என் படங்கள் மிகவும் ஒழுங்காக இருக்கின்றன என்றால் அதற்கு நான் இயக்கிய விளம்பரப் படங்கள்தான் காரணம்.

- ஏ.எல்.விஜய்

உங்களுடைய கனவுப் படமான ‘குமரிகண்டம்' பற்றி...

4 வருடங்களாக அக்கதையை எழுதிவருகிறேன். அதற்கான ஆராய்ச்சிக்கு மட்டும் நிறையப் புத்தகங்களைப் படித்துள்ளேன். கதையை எழுதி முடித்துவிட்டேன். படத்தைச் சரியான நேரத்தில் தொடங்குவேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x