அமெரிக்காவில் நடக்கும் போட்டிக்கு சென்னை ஐஐடி மாணவர் குழு தேர்வு- தானிங்கி நீர்மூழ்கி வடிவமைத்து சாதனை

அமெரிக்காவில் நடக்கும் போட்டிக்கு சென்னை ஐஐடி மாணவர் குழு தேர்வு- தானிங்கி நீர்மூழ்கி வடிவமைத்து சாதனை
Updated on
1 min read

அமெரிக்காவில் நடக்கவுள்ள சர்வதேச தானியங்கி நீர்மூழ்கி வாகனம் வடிவமைக்கும் போட் டிக்கு சென்னை ஐஐடி மாணவர்கள் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடல்வளம் பற்றிய தொழில் நுட்பங்களை பொறியியல் துறை மாணவர்கள் தெரிந்துகொள்ளவும் இத்துறை குறித்த அறிவை மேம்படுத்தும் நோக்கிலும் இப்போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. வெற்றி பெறும் அணியினர் அமெரிக்காவில் ஜூலையில் நடக்கவுள்ள சர்வதேச போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படுவார்கள். இதற்கான முழு செலவையும் இந்திய அரசே ஏற்கிறது.

அந்த வகையில், சென்னையில் உள்ள தேசிய கடல்வள தொழில் நுட்பக் கழகம் சார்பில் பொறியியல் மாணவர்களுக்கான தேசிய அளவிலான போட்டிகள் கடந்த 3-ம் தேதி கிண்டியில் நடந்தது. இதில் தமிழகம் மட்டுமின்றி டெல்லி, மேற்குவங்கத்தைச் சேர்ந்த பல்வேறு பொறியியல் துறை மாணவர்களும் பங்கேற்றனர்.

இந்த ஆண்டுக்கான சிறந்த படைப்பாக சென்னை ஐஐடி மாணவர்களின் படைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவில் வினீத் உபாத்யா, கிஷோர் நடராஜன், ராகேஷ் கொண்டா, ரவிகிரண் போபா, விக்னேஷ் கிருஷ்ணாகுமார் ஆகிய மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு அமெரிக்காவில் நடக்கும் சர்வதேச போட்டியில் கலந்துகொள்கிறது.

சிறந்த அணியினரை தேர்வு செய்யும் நிகழ்ச்சியில், கிழக்கு கடற்படை மண்டல உயர் அதிகாரி மகாதேவன், தேசிய கடல்வள தொழில்நுட்ப மைய இயக்குநர் ஆத்மானந்த், முதுநிலை விஞ்ஞானி வெங்கடேசன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரி வித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in