Published : 03 Jan 2017 10:22 AM
Last Updated : 03 Jan 2017 10:22 AM

வாசகர் பக்கம்: நீங்களும் உங்களுடைய கிறுக்கலும்?

ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போதும் மற்றவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதும் நம்மை மறந்து காகிதத்தில் கிறுக்குவோம் இல்லையா! அப்படிக் கிறுக்குவது ஆங்கிலத்தில் டூடில் (doodle) எனப் படுகிறது. அதாவது, வேறு நினைப்புடன் பொருளற்ற தன்மையில் கிறுக்கி எழுதுவது. ஆனால் அதை வைத்து ஒருவருடைய குணாதிசயங்களைக் கண்டுபிடிக்க முடியும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். உங்களுடைய கிறுக்கலை வைத்து நீங்கள் யார் எனக் கண்டுபிடிக்கலாம் வாங்க.

> முக்கோணம், சதுரம் போன்ற வடிவியல் வடிவங்களை வரைந்தால் தர்க்கரீதியாக யோசிப்பவர். எதையும் திட்டமிட்டுச் செய்யும் வழக்கம் கொண்டவர். அதிலும் அடிக்கடி முக்கோண வடிவம் வரைந்தால் பணிவாழ்க்கையில் முன்னேறும் துடிப்புடன் இருப்பீர்கள்.

> அம்புக் குறி, ஏணிப் படிகளை வரைந்தால் எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற முனைப்பு உடையவர்.

> கேலியான முகங்களை வரைந்தால் நல்ல நகைச்சுவை உணர்வு படைத்தவர்.

> அழகிய முகங்களை வரைந்தால் எல்லோருடனும் சகஜமாகப் பழகக்கூடியவர், நேர்மறையான சிந்தனை உடையவர்.

> அவலட்சணமான முகங்களை வரைந்தால் தன்னம்பிக்கை குறைவாக உள்ளவர், கோபம் கொப்பளிக்கக்கூடியவர்.

> நட்சத்திரங்கள் வரைந்தால் தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்பவர்.

> வளைவுகள், நெளிவுகள், சங்கிலிப் பின்னல்களை வரைந்தால் படைப்பாற்றல் மிக்கவர். சுதந்திரப் பிரியர். கட்டுப்படுத்தினாலும் விருப்பத்திற்கு எதிரான செயல்களைச் செய்யாதவர்.

> செடி, கொடி, மரம் வரைந்தால் மிகவும் மென்மையானவர், கனிவாகப் பழகக்கூடியவர்.

இன்னும் விதவிதமான கிறுக்கல்களுக்கு ஏகப்பட்ட குணங்கள் சொல்லப்படுகின்றன. ஒருவருடைய சிந்தனையின் வடிவமைப்பு அவருடைய கிறுக்கலில் பிரதிபலிப்பது ஆச்சரியம்தானே!

- சரஸ்வதி பஞ்சு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x