Published : 06 Oct 2014 16:31 pm

Updated : 06 Oct 2014 16:31 pm

 

Published : 06 Oct 2014 04:31 PM
Last Updated : 06 Oct 2014 04:31 PM

எண்ணித் துணிக ஆங்கிலம்

எண்களும் ஆங்கிலமும்

எண்கள் என்பவை கணிதம் தொடர்பானவை மட்டுமல்ல. ஆங்கில வாக்கியங்களை உருவாக்குவதிலும் அவற்றிற்குப் பங்கு உண்டு.

வாக்கியத்தின் தொடக்கம் எண்ணாக இருக்கக் கூடாது.

6 Persons were travelling in a bus என்று எழுதக் கூடாது. Six Persons were travelling in a bus என்றுதான் எழுத வேண்டும்.

வாக்கியத்தின் நடுவில் இடம் பெறும் எண்களை எண்ணால் எழுத வேண்டுமா? அல்லது எழுத்துகளால் எழுத வேண்டுமா?

அதிக மதிப்புள்ள எண்கள் என்றால் எண்ணிக்கையிலேயே குறிப்பிடலாம். பத்துக்கு உட்பட்ட எண் என்றால் அதை வார்த்தையாகக் குறிப்பிடலாம்.

He is the father of three children.

On an average 3522 accidents happened in this road last year.

அதே சமயம் பத்துக்குக் குறைவான எண் என்றாலும் அதைப் பயன்படுத்தும் விதத்தைக் குறிப்பாகச் சுட்டிக்காட்ட விரும்பினால், எண்ணையே பயன்படுத்தலாம்.

He walked all the 8 Kilometres.

He is the father of 7 children in his married life of 4 years.

நீளம், எடை, நாணய மதிப்பு போன்றவற்றைக் குறிக்கும் அளவைக்கான பெயர்ச் சொற்களுக்கு முன்னால் எண் இடம்பெறுவது சகஜம். இந்த எண்ணின் காரணமாக அந்தப் பெயர்ச் சொற்கள் பன்மையாக மாற்றம் பெறுவதில்லை.

I have three dozen bags என்கிறோம். I have three dozens bags என்பதில்லை.

It is a four year degree course என்கிறோம். Four years degree course அல்ல.

எப்போதுமே ஒருமை

இந்த இடத்தில் எப்போதுமே ஒருமையில் குறிக்கப்படும் சில nouns குறித்து அறிந்து கொள்வோம்.

ஒருவர் என்னதான் உபதேச மழை பொழிந்தாலும், He has given advice என்றுதான் கூற வேண்டுமே தவிர, He has given advices என்று கூறக் கூடாது. “அதெப்படி, அவர் அளவுக்கு மீறி உபதேசங்களைப் பொழிந்து தள்ளினாரே?’’ என்று நொந்து குமுறினால் அதை வெளிப்படுத்த வேறொரு வழி உண்டு. He has given lots of advice என்று கூறிச் சமாதானம் அடையுங்கள்.

அ​தேபோல் Innings என்பது படிப்பதற்குப் பன்மைபோலத் தென்பட்டாலும் ஒருமைதான். Inning என்ற வார்த்தை கிடையாது. அதனால்தான் ‘’The Pakistan Cricket Team was defeated by an innings’’ என்கிறோம். (Innings என்பதை ஒருமையாகக் கருதுவதால்தான் அதற்கு முன் an என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்).

“இமாச்சலப் பிரதேசத்துக்குப் போயிட்டு வந்தீங்களே எப்படி இருந்தது?’’ என்று நண்பர் கேட்க இப்படி ஒரு ​விடையைத் தந்தாராம் ஒருவர். “Sceneries நிறைய இருக்குன்னு சொன்னாங்க. ஆனால் அதையெல்லாம் சரியாப் பார்க்க முடியாமல் இமயமலை குறுக்கே குறுக்கே வந்து தடுத்துடுச்சு!’’.

இமாச்சலப் பிரதேசத்துக்குச் சென்று வந்தவர் இரண்டு விதங்களில் தன் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அவற்றில் ஒன்று ஆங்கிலம் தொடர்பானது. Sceneries என்று வார்த்தை கிடையாது. Scenery என்பது ஒருமை. எல்லா இயற்கைக் காட்சிகளைச் சேர்த்துக் குறி​ப்பிட்டாலும் அது ஒருமைதான். The scenery of Simla என்பதுபோல. (ஆனால் scene என்பதன் பன்மை scenes).

Information, Furniture போன்றவை ஒருமை, பன்மை ஆகிய இரண்டிற்கும் பயன்படும் வார்த்தைகள்.

இறுதியில் ‘s’ சேர்க்கப்பட்டிருப்பதால் பன்மைபோலத் தெ​ரிந்தாலும், singular ஆகவே கரு​தி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகள் -

Economics, Athletics, Classics, Mathematics, News, Physics.

CONTACT – CONTRACT – CONTRAST - CATARACT

CONTACT என்றால் தொடர்பு. இந்த வார்த்தையை verb ஆகப் பயன்படுத்தும்போது தொடர்பு கொள்க என்ற அர்த்தம் வரும்.

CONTRACT என்பது noun ஆகப் பயன்படுத்தப்படும் போது அது ஒப்பந்தம் என்ற பொருளில் வரும். (சட்டப்படி All agreements are not contracts. But all contracts are agreements. அதாவது contracts மட்டுமே சட்ட அங்கீகாரம் பெற்ற ஒப்பந்தங்கள்).

Contract என்பது verb ஆகப் பயன்படுத்தப்படும்போது “சுருக்குதல்’’ என்ற அர்த்தம் தரும். அதாவது Expand என்பதன் எதிர்ச்சொல்.

Contrast என்பது பளிச்சென்ற மாறுபாட்டைக் குறிக்கும். Both of them studied together. But his failure contrasted with his friend’s grand success.

Cataract தெரியும் அல்லவா? கண்பார்வை கோளாறுதானே என்கிறீர்களா? சரிதான். ஆனால் அகலமான அருவியையும் cataract என்பதுண்டு.

மொ​ட்டைத் தலை - முழங்கால் அல்ல. இந்த இரண்டு பயன்பாடுகளுக்கும் தொடர்பு உண்டு. Cataract என்பது லத்தீன் மொழியிலிருந்து கையாளப்பட்டது. அந்த மொழியில் Cataracta என்றால் அருவி என்று அர்த்தம். தெளிவான நீர் அருவிலியிருந்து கொட்டும்போது பார்ப்பதற்கு வெண்மையாகக் காட்சியளிக்கும். கண் பார்வை மங்கும்போதும் தெளிவில்லாமல் வெண்மைப் படலம்போலத் தோற்றமளிக்க வாய்ப்பு உண்டு. அதனால்தான் இதற்கும் அதே பெயர்.

தொடர்புக்கு:
aruncharanya@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ஆங்கிலம் அரிவோம்ஆங்கிலம் பயிலஎண்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author