Published : 28 Mar 2014 12:00 AM
Last Updated : 28 Mar 2014 12:00 AM

பிரகாஷ் ராஜ் பிறந்த நாள்: மார்ச் 26 - அறுசுவைக் கலைஞன்

வில்ல நடிகர்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகர்களாவது தமிழுக்குப் புதிதல்ல. ஆனால் வில்லனாக அறிமுகமாகி குணசித்திர நடிகராகப் பரிணமித்து, நாயகனாகவும் உருவெடுத்த கலைஞர்கள் அதிகம் பேர் இல்லை. அத்தகைய அரிய நடிகர்களில் ஒருவர் பிரகாஷ் ராஜ். நடிப்பிலும் உடல் மொழியிலும் வசன உச்சரிப்பிலும் வித்தியாசம் காட்டும் இவர் தனது தொழிலைக் கையாள்வதிலும் வித்தியாசம் காட்டுகிறார். நாயகனான பிறகு வில்லனாகவோ வேறு விதமாகவோ நடிக்கத் தயங்குபவர்கள் மத்தியில் இவர் தொடர்ந்து எல்லா விதமான வேடங்களையும் ஏற்கிறார்.

எத்தனையோ திறமைசாலிகளை அறிமுகப்படுத்திய கே. பாலசந்தர்தான் பிரகாஷ் ராஜையும் அறிமுகப்படுத்தினார். டூயட் படத்தில் விறுவிறுப்பான வில்லனாக அறிமுகமான இவர், தனது தனித்துவத்தால் வசீகரித்தார். 1995-96களில் வெளியான ஆசை, கல்கி ஆகிய படங்கள் மூலமாக முன்னணிக்கு வந்தார்.

மணி ரத்னத்தின் இருவர் படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராகப் பிரகாஷ் தோன்றினார். திராவிட அரசியலில் எம்.ஜி.ஆர். - கருணாநிதி உறவின் அழுத்தமான சாயல் கொண்ட அந்தப் படத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை நினைவுபடுத்தும் வேடமேற்றிருந்தார். படம் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் பிரகாஷ் ராஜின் நடிப்புத் திறனுக்குச் சாட்சியாக இருந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் படு பிஸியான நடிகராக வலம் வந்தார் பிரகாஷ்.

சைக்கோத்தனம், நக்கல் நையாண்டி வசனம் இரண்டையும் கலந்து தனது கதாபாத்திரங்களுக்குப் புது வடிவம் கொடுத்தார் பிரகாஷ் ராஜ். கில்லி படத்தில் இவர் சொல்லும் செல்லம்… என்னும் வசனம் இன்றும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது. வஸந்தின் அப்பு திரைப்படத்தில் அரவானி வேடம் போன்ற வித்தியாசமான வேடங்களில் நடித்தாலும் இவரது நடிப்பு ஒரே பாணியில்தான் அமைந்துள்ளது என்ற விமர்சனமும் உண்டு.

நடிப்பதோடு தன் வேலை முடிந்துவிட்டதாக இவர் நினைக்கவில்லை. வித்தியாசமான படங்களைத் தரும் விருப்பத்தால் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். மொழி, வெள்ளித்திரை, அபியும் நானும் போன்ற படங்களைத் தயாரித்தார். தோனி என்னும் படத்தை இயக்கி நடித்தார்.

பூலோகம், மத கஜ ராஜா, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட பல படங்கள் இவருக்கு வெளியாக உள்ளன. ‘உன் சமையல் அறையில்’ என்ற படத்தில் நடித்துவரும் இவரது நடிப்புச் சமையலில் அறுசுவைக்கும் உத்தரவாதம் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x