Published : 23 Feb 2014 03:06 PM
Last Updated : 23 Feb 2014 03:06 PM

13-ம் நம்பரும், கமலாவும் !!!: ஃப்ளாஷ்பேக் - இயக்குநர் பாண்டிராஜ்

உங்கள் ஊர் நந்தவனத்தேரில், கிராமத்து குயிலில் போன பயணங்களின், நினைவுத் தடங்களில், மீண்டும் ஒரு பயணம் போகலாமா?

நான் பார்த்த முதல் பேருந்தான நந்தவனத் தேரில் மனிதர்களைத்தான் ஏற்றவேண்டுமென, கட்டுப்பாடெல்லாம் கிடையாது. கடைசி சீட்டுக்கு, முன்னதாக இரண்டு இருக்கைகளை கழற்றி, சரக்கு ஏற்றவென்றே ஒதுக்கப்பட்டிருக்கும். வாழைத்தார், ஆட்டுக்குட்டி, கோழி, கீரைக் கட்டு, நெல்லு மூட்டை, கருவாட்டு கூடை என எல்லாம் ஏற்றப்பட்ட பஸ்சில், எனக்கு தெரிந்து மாடு மட்டும்தான் ஏற்றப்பட்டது இல்லை.

எங்கள் ஊரில் எல்லா இடமுமே பஸ் ஸ்டாப் தான், எங்கிருந்து கை காட்டினாலும், நிறுத்துவார் கள். ஒரு வீட்டில் இருந்து நாலு பேரு போகப் போறாங்கன்னா, யாராவது ஒருத்தர் கிளம்பி வந்து பஸ்ஸை நிறுத்திவிடுவார்கள். ‘இதோ கிளம்பிட் டாங்கப்பா, மாங்கல்யம் எடுக்கப்போறோம், நல்ல காரியம் தடங்கிட கூடாது, அஞ்சே அஞ்சு நிமிஷம்தான்’ என்று அரை மணி நேரம் காக்க வைப்பதெல்லாம், சகஜம். மேலும் பேருந்துக்குள் எல்லோரும் சத்தமாகத்தான் பேசுவார்கள். ஏனென் றால் நம்மை விட சத்தமாக நட்டு, போல்ட் எல்லாம் லூசாகி கடகடனு பேசிக்கொண்டே வரும்.

இப்படிப்பட்ட சிறப்புகள் வாய்ந்த, நந்தவனத்தேருக்கு இருந்த ஒரே ஒரு போட்டியாளர், கிராமத்து குயில் ‘கமலா’தான். 13-ம் நம்பர் பஸ், நந்தவனத்தேரோ அரசுப் பேருந்து. கிராமத்து குயில், 13-A கமலாவோ தனியார் பேருந்து. தனியாரில் இருபத்தைந்து பைசா டிக்கெட் அதிகம். அதில் பயணிப்பதே ஒரு கௌரவ குறியீடாக பார்க்கப்படும்.

பதிமூன்றாம் நம்பர் பஸ்சுக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபிள் இருந்தது. வண்டி எங்காவது நின்றுவிட்டால், அவ்வளவுதான். ஏலேலோ ஐலசா, அழுத்தி தள்ளு ஐலசா, இறங்கி தள்ளு ஐலசானு ராகம் போட்டபடி பசங்க எல்லோரும் தள்ளியே அடுத்த பஸ்ஸ்டாப் வரை கொண்டு வந்துவிடுவோம்.

கமலா பஸ்ஸில்தான் முதலில் டேப் ரெக்கார்டர் வைத்தார்கள். அவ்வளவு ரசனையான பாடல்களை, போடுவார் அந்த டிரைவர். பாடல்களுக்கு நடுவில், “உங்கள் விருப்பமான பாடல்களை பதிவு செய்ய கீதாஞ்சலி ஒலிப்பதிவு கூடம், புதுக்கோட்டை” என்று கரகர வாய்சில் விளம்பரம் வேறு வரும்.

ஒரு பேருந்துக்கு எப்படியும் ஒரு கிராமத்து தேவதை இருப்பாள். அவளை சுமக்கும் பல்லக்கு போலதான் அந்த பேருந்தே மற்றவர்களுக்கு தோன்றும். பல வேப்பெண்ணெய் கிராக்கிகளுக்கு மத்தியில் ராசாத்தி அப்படி ஒரு அழகி. ஒருநாள், பஸ் ஸ்டாப்பில் இருந்த மீனாட்சி மெடிக்கலில், ராசாத்தி அஸ்வினி எண்ணெய், லக்ஸ் சோப்பு, ஃபேர் அண்ட் லவ்லி வாங்குவதை பார்த்ததில் இருந்து இதுதான் இவளின் அழகின் ரகசியம் என்று தெரியவர சவுக்காரக்கட்டி தேய்த்துக் கொண்டிருந்த எல்லா பசங்களும் அந்த பொருட்களுக்கு ரெகுலர் கஸ்டமர்கள் ஆகிவிட்டனர்.

“ராசாத்தி உன்னை எண்ணி ராப்பகலா கண் விழிச்சேன்”

“ஏ.. ராசாத்தி.. ரோசாப்பூ வா வா வா”

என்று வரிசைகட்டி ராசாத்தி பாட்டாகவே எப்போதும் பஸ்சில் ஒலிக்க, பின்புதான் தெரிய வந்தது, கேசட் உபயம் எல்.ஐ.சி. ஏஜெண்ட் ரவி அண்ணன். அனைவரும் பாடலில் கிறங்கிக்கிடக்க ரவி அண்ணணும், ராசாத்தியும் காதலில் லயித்திருப்பார்கள். கண்களால் பேசுவதில், படிக்கும்போதே ராசாத்தி பி.ஹெச்.டி முடித்திருந்தது. ஆனால் அண்ணனோட கெட்ட நேரம், ராசாத்தியின் அப்பாவுக்கு இது தெரிய வர,

“ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போல் ஆடுது”

“ராசாத்தி நீ வாழணும்” என சோககீதங்களை ஒலிபரப்பி, ஒரு காதலை சிச்சுவேஷன் பாடல்கள் மூலமாகவே கடந்து வந்த நினைவுகளை எப்படி மறக்க முடியும் !!! இப்படி ஆரம்பித்த டிரெண்ட், சாந்தி பாடல்கள், செண்பகம் பாடல்கள், ரோஜா பாடல்களென தொடர்ந்தது.

இப்படி நேயர் விருப்பங்களை நிறைவேற்றும் டிரைவர் அண்ணன்கள்,

“பொதுவாக எம்மனசு தங்கம், போட்டியினு வந்துவிட்டா சிங்கம்”

“போக்கிரிக்கு போக்கிரி ராஜா, பக்கத்துல பட்டுல ரோஜா, என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி” என அலறவிட்டு, சட்டை பட்டன்களை அவிழ்த்தபடியே, அருகில் இருக்கும் பெண்களை பார்த்து அவர்கள் ‘கியர்’ போடுவதே, ‘டியர்’ போடுவது போலத்தான் இருக்கும்.

குழிபிறை, நற்சாந்துபட்டி, பனையபட்டி, விராச்சிலை என எல்லா ஊர் பெண்களும், டிரைவர் சீட்டுக்கு அருகில்தான் சென்று மண்டுவார்கள். டிரைவர் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் இருக்கும். ஆனால் பசங்க அங்க நிற்க போனால் மட்டும் பின்னாடி போ, ‘ஏய்..அங்கிட்டு உட்கார்ந்தா சைடு மறைக்கும்’ என்றெல்லாம் விரட்டுவார்கள்.

ஒரு நேரம் சைக்கிள் வைத்திருந்த பலரும், பஸ் ஸ்டாப்பில் இருக்கும் சலூன் கடைகளில் அதை போட்டுவிட்டு பஸ்ஸில் போக ஆரம்பித்தோம். பஸ் வரும்வரை, பல்லு போன சீப்பால் பத்து முறை சீவுவது, தகர டப்பாவில் இருக்கும் பவுடரை எடுத்து சுண்ணாம்பு அடிப்பது போல பூசுவது, பஸ் சத்தம் கேட்டதும், சீப்பை தூக்கி சலூன்காரர் முகத்தில் வீசிவிட்டு ஓடி வந்து ஏறுவதென, தினசரி நடக்கும். படிக்கட்டில் தொங்கியபடியே, தலைமுடியை கோதிக்கொண்டே உள்ளே நம்ம ஆளு இருக்கானு கண்களால் தேட, உள்ளிருந்து ஜோடி கண்கள் நம்மைத் தேட என, அந்த நாட்களின் இனிமையை, இனி என்றுமே, எங்குமே உணரமுடியாது.

இன்றும் நந்தவனத்தேரும், கமலாவும் எங்கள் ஊர் சாலைகளில் தங்கள் நினைவுத் தடங்களை பதித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால், நான் பார்த்த கமலாவும், நந்தவனந்தேரும் வேறு, இன்று ஓடுவது வேறு. உருவமும், உடலும் மாறியிருக்கிறது, டேப் ரெக்கார்டருக்கு பதில் சிடி, ராசாத்திக்கு பதில் அஞ்சனா, என பாடல்கள் மாறியிருக்கிறது, அவ்வளவுதான்.

இப்படி சந்தோஷங்களின் சுவடுகளை மட்டுமே பரிசாகக் கொடுத்த பேருந்து பயணங்கள், எனக்கு வலியான நினைவுகளையும் கொடுத்துள்ளன. சென்னைக்கு வந்து உதவி இயக்குநராக இருந்த காலங்களில் பலமுறை வெள்ளை போர்டு, எல்.எஸ்.எஸ்., எம்.சர்வீஸ் என நம்பர் பிளேட்களின் வித்தியாசம் தெரியாமல், ஐம்பது பைசா அதிகம் கேட்கும் கண்டக்டர்களிடம் வாக்குவாதம் செய்திருக்கிறேன். அரசாங்கம் டிக்கெட் கட்டணத்தை வெளிப்படையாக ஏற்றாமல், போர்டை மட்டும் கலர் கலராய் மாற்றி கட்டணத்தை கூட்டிக்கொள்கிறது என வித்தியாசம் தெரிந்தபின்பு ஐம்பது பைசா மிச்சம் பிடிக்க, ஒரு மணிநேரம் எல்லாம் ஒயிட் போர்ட் வண்டிக்காக காத்திருந்திருக்கிறேன். காலியாக வந்தாலும் எல்.எஸ்.எஸ்.சில் ஏறமாட்டேன், ஏன்னா நாலு ஐம்பது பைசா மிச்சம் பிடிச்சா, நடந்து போகாம இன்னொரு ட்ரிப் பஸ்ஸில் போகலாம், ஒரு டீ குடிக்கலாம் என நூறு கணக்குகள் மனசில் ஓடும்.

இன்றும் கூட, சென்னையின் பேருந்து நிறுத்தங்களில் காத்திருப்போரின் முகங்களில், ஒரு கமலா பஸ்சின், நந்தவனத்தேரின் நினைவு ரேகைகளும், ஒயிட் போர்டில் பயணித்து ஐம்பது காசு மிச்சம் பிடிக்க ஏங்கும் கவலை ரேகைகளும் கலந்தே தென்படுகின்றன !!!

(வரும் ஞாயிறு சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x