Last Updated : 08 Jun, 2016 12:55 PM

 

Published : 08 Jun 2016 12:55 PM
Last Updated : 08 Jun 2016 12:55 PM

வண்ணத்துப்பூச்சிகளின் மாய உலகம்

உங்களுக்கு ரொம்பப் பிடித்த பூச்சி எது? பெரும்பாலும் வண்ணத்துப்பூச்சியின் பெயரைத் தான் சொல்வீர்கள். வீட்டுத் தோட்டங்களில் உள்ள பூக்களில் வண்ணத்துப்பூச்சி உட்கார்ந்து பூந்தேனை உறிஞ்சும் காட்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஒரே இடத்தில் லட்சக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்க முடியுமா? பெடலூதிஸ் பள்ளத்தாக்குக்குச் சென்றால் பார்க்கலாம்.

கிரீஸ் நாட்டுத் தீவுகளில் ஒன்று ரோடஸ். அங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது வண்ணத்துப்பூச்சிகளின் பள்ளத்தாக்கு. எங்கு பார்த்தாலும் கம்பளம் விரித்தது போல வண்ணத்துப்பூச்சிகள் கும்பல் கும்பலாக உட்கார்ந்திருக்கின்றன! இங்கே உள்ள வண்ணத்துப்பூச்சிகளில் ஜெர்சி டைகர் இனம் மட்டுமே மிக அதிகம் உள்ளன.

ஜெர்சி டைகர் இறக்கையை விரித்தால் முக்கோண வடிவில் இருக்கும். கறுப்பு இறக்கைகளில் வெள்ளைக் கோடுகள் பார்ப்பவர்களைக் கவர்ந்துவிடும். தலையிலிருந்து உடல் வரை சிவப்பாக இருக்கும்.

மழைக் காலங்களில் மத்திய தரைக்கடல் பகுதியில் கம்பளிப்பூச்சிப் பருவத்தில் இலைகளைத் தின்று இவை வளர்கின்றன. நன்றாக வளர்ந்த பிறகு கூட்டுப் புழு பருவத்தை அடைகின்றன. மழைக்காலம் முடிவடையும்போது கூட்டை உடைத்துக்கொண்டு அழகான முழு வண்ணத்துப்பூச்சிகளாக வெளியே வருகின்றன.

வறண்ட வானிலை நிலவுவதால், ஈரம் நிறைந்த பகுதியை நோக்கி இவை இடம்பெயர்கின்றன. 25 கி.மீ. தூரத்துக்குள் இருக்கும் பள்ளத்தாக்கை நோக்கி, ஒரே இரவில் வந்து சேர்ந்துவிடுகின்றன. பள்ளத்தாக்கில் ஓரியண்டல் இனிப்பு பசை மரங்கள் அதிகம் உள்ளன. இவற்றின் வாசனையால் ஈர்க்கப்படுகின்றன.

பள்ளத்தாக்கில் நிறைந்திருக்கும் மரங்களின் அடி மரம், கிளைகள், குச்சிகள், பாறைகள், செடிகள், கொடிகள் என எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ, அங்கே சென்று தங்கிவிடுகின்றன. கொஞ்சம் இடைவெளிகூட இல்லாமல் நெருக்கிக்கொண்டு உட்காந்திருக்கும் வண்ணத்துப்பூச்சிகளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்!

கோடைக்காலம் முடியும் வரை வண்ணத்துப்பூச்சிகள் பள்ளத்தாக்கில் ஓய்வெடுக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் வண்ணத்துப்பூச்சிகள் சாப்பிடுவதில்லை. கம்பளிப்பூச்சிப் பருவத்தில் சேமித்து வைத்துள்ள கொழுப்பில் இருந்து சக்தியை எடுத்துக்கொள்கின்றன. ஆகஸ்ட் கடைசி வாரத்திலிருந்து செப்டம்பர் முதல் வாரம் வரை ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பம் நடத்துகின்றன.

பிறகு பெரும்பாலான பெண் வண்ணத்துப்பூச்சிகள் முட்டை இடுவதற் காகப் பள்ளத்தாக்கை விட்டுத் திரும்பவும் 25 கி.மீ. தூரம் போகின்றன.

அடர்ந்த மரங்கள் கொண்ட இருளான பகுதிகளில் முட்டைகளை இடுகின்றன. இனப்பெருக்கம் செய்த பிறகு பெண் வண்ணத்துப்பூச்சிகள் இறந்துவிடுகின்றன. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு முட்டைகளில் இருந்து புழுக்கள் வெளிவருகின்றன. புழுக்கள் வேகமாக இலைகளைத் தின்று கம்பளிப்பூச்சிகளாக மாறுகின்றன.

கம்பளிப்பூச்சிகள் கூட்டுப்புழு நிலையை அடைந்து, பிறகு முழு வண்ணத்துப்பூச்சிகளாக மாறி, மீண்டும் பள்ளத்தாக்கை நோக்கிக் கிளம்புகின்றன. ஓரியண்டல் மரங்களின் வாசனையை வைத்து, சரியாகப் பள்ளத்தாக்கை அடைந்துவிடுகின்றன. இங்கே வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை காலங்காலமாக இப்படித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வண்ணத்துப்பூச்சிகள் பள்ளத்தாக்கைப் பொதுமக்கள் பார்ப்பதற்குக் குறிப்பிட்ட காலம் அனுமதி வழங்குகிறார்கள். வண்ணத்துப்பூச்சிகள் பள்ளத்தாக்கில் சிறிய அருவிகளும் ஓடைகளும் அடர்ந்த மரங்களும் குளிர்ச்சியைத் தருவதால் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கின்றன. இங்கே வண்ணத்துப்பூச்சிகள் தவிர, அரிய வகை பறவைகள், நண்டுகள், பல்லிகளும் வாழ்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x