

தமிழக அரசின் வேளாண் விரிவாக்க சார்நிலைப் பணியில் 333 உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பிளஸ் 2 படித்துவிட்டு வேளாண்மை படிப்பில் 2 ஆண்டு கால டிப்ளமா முடித்திருக்க வேண்டும்.
தேர்வு விதிகள்
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் உதவி வேளாண் அதிகாரி பணிக்கு தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் இடம்பெறும்.
ஊதியமும் பதவி உயர்வும்
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவதால் வேளாண் டிப்ளமா படிப்பை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உதவி வேளாண் அதிகாரி பணிக்கு அடிப்படைச் சம்பளம் ரூ.5200, தரஊதியம் ரூ.2800 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பளம் தோராயமாக ரூ.20 ஆயிரம் கிடைக்கும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்போது சம்பளம் கணிசமாக உயரும். உதவி வேளாண் அதிகாரிகள், வேளாண் அதிகாரி, உதவி இயக்குநர், துணை இயக்குநர் என வேளாண் துறையில் படிப்படியாக பதவி உயர்வும் பெறலாம்.
முக்கியத் தேதிகள்
எழுத்துத்தேர்வு, ஜூலை 2 அன்று சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 6 நகரங்களில் நடைபெற உள்ளது.
தகுதியுடைய நபர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி ஏப்ரல் மாதம் 7-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், பாடத் திட்டம் உள்ளிட்ட விவரங்களை டி.என்.பி.எஸ்.சி .இணையதளத்தில் விளக்கமாக தெரிந்துகொள்ளலாம்.
தேர்வுத் தாள்கள்:
1. விவசாய பாடம், 2. பொது அறிவு
விவசாய பாடம்: 300 மதிப்பெண். இதில் கேட்கப்படும் 200 வினாக்கள் டிப்ளமா தரத்தில் இருக்கும்.
பொது அறிவு தாள்: 200 மதிப்பெண். இதில் இடம்பெறும் 100 கேள்விகளும் பிளஸ் 2 கல்வித் தரத்தில் அமைந்திருக்கும்.
நேர்முகத் தேர்வு: 70 மதிப்பெண்.
வயது வரம்பு
பொதுப்பிரிவினருக்கு 30 வயது.
எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.