Published : 06 Jun 2016 11:55 AM
Last Updated : 06 Jun 2016 11:55 AM

ஐஐஎம் தலைவர் நியமனத்தில் அரசியலா?

இந்தியாவின் உயர் கல்வி நிறுவனமான ஐஐஎம் கடந்த சில வாரத்தில் இரண்டாவது முறையாக சர்ச்சையில் அடிபடு கிறது. பிளிப்கார்ட் நிறுவனம் கேம்பஸில் தேர்வு செய்த மாண வர்களை இன்னும் ஆறு மாதங் களுக்கு பிறகு வேலைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தது. உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஐஐஎம் கோரிக்கை வைத்தும் இப்போதைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று பிளிப்கார்ட் தெரிவித்தது.

அடுத்த சர்ச்சை ஐஐஎம் அகமதாபாத் தலைவர் குறித்து பார்ப்பதற்கு முன்பு ஒரு பின்னணி தகவல்: ஐஐஎம்(ஏ) தலைவராக எல் அண்ட் டி தலைவர் ஏ.எம். நாயக் இருந்தார். அவரது பதவிக் காலம் 2018-ம் ஆண்டு வரை இருக்கிறது. ஆனாலும் வேலைப்பளு காரண மாக ஜனவரியில் விலகுவதாக அறிவித்தார். மத்திய அரசு கொண்டு வரும் ஐஐஎம் மசோதா பிடிக்கவில்லை என்பதால் விலகு வதாக அப்போது கூறப்பட்டது.

அவருக்கு பதிலாக காடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் பங்கஜ் படேல் இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

மேலும் புதிய தலைவரை நியமனம் செய்ய ஏ.எம்.நாயக், பெப்சிகோ இந்தியா தலைவர் டி.சிவகுமார், அர்விந்த் நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் லால்பாய் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இன்ஃபோசிஸ் தலைவர் ஆர். சேஷசாயி, ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் பவன் முஞ்சால் மற்றும் ஹெச்டிஎப்சி தலைவர் தீபக் பரேக் ஆகிய மூவரை மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு பரிந்துரை செய்தது.

சர்ச்சை இங்கு தொடங்குகிறது. இந்த மூவரையும் மனிதவள மேம்பாட்டு துறை நிராகரித்து புதிய நபர்களை பரிந்துரைக்குமாறு கூறியுள்ளது.

தவிர இந்த நபர்கள் ஏன் நிராகரிக்கப்பட்டனர் என்பது குறித்து எந்த விளக்கமும் இல்லை. புதிய குழு எப்போது நியமனம் செய்யப்படும், எத்தனை நாட்களுக்குள் தங்களுடைய பரிந்துரைகளை செய்ய வேண்டும் என்ற தகவலும் இல்லை.

இது குறித்து ஐஐஎம் இயக்குநர் களோ, கல்வியாளர்களோ பதில் அளிக்க மறுத்துவிட்டனர். ஆனால் மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டிருக்கும் ஐஐஎம் மசோதாவை ஏற்றுக் கொள்ளக்கூடிய நபர்களை நியமிக்க அரசு திட்டமிடுவ தாக குற்றம் சாட்டுகின்றனர். தற்போதைய ஐஐஎம்(ஏ) இயக்குநர் ஆசிஷ் நந்தாவும் கருத்து கூற மறுத்திருக்கிறார்.

இது குறித்து பேசிய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, அவர்களை பற்றி கருத்து கூறி தலைப்பு செய்திகளுக்கு இடமளிக்க விரும்பவில்லை. தேர்வுக்குழு சரியான நபர்கள் என்று நினைப்பவர்களை பரிந்துரை செய்திருக்கிறது. அந்த பரிந்துரை சரியில்லை என்று நினைக்கும் பட்சத்தில் வேறு உறுப்பினர்களை பரிந்துரைக்குமாறு கூற அமைச் சகத்துக்கு உரிமை இருக்கிறது. தவிர இது தொடர்பாக ஐஐஎம் உடன் இணை செயலாளர் பேசி வருகிறாரே தவிர தான் அல்ல என்று பதில் அளித்திருக்கிறார்.

இரண்டாவதாக உருவாக்கப் படும் தேர்வுக்குழுவில் நாயக் இருக்க மாட்டார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஐஐஎம் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, மத்திய அரசு ஏற்கெனவே ஒருவரை `மனதில்’ வைத்திருக்கும் பட்சத்தில் எதற்காக ஒரு தேர்வுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ரிசர்வ் வங்கி, ஐஐஎம் என அனைத்து இடங்களுக்கும் தங்களுக்கு ஆதரவாக `ஆமாம் சாமி’ போடும் ஆட்களை நியமிக்க மத்திய அரசு நினைக்கிறதா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x