Published : 03 Feb 2014 12:00 AM
Last Updated : 03 Feb 2014 12:00 AM

கணிதம், புள்ளியியல் படிப்பு: மத்திய அரசு நிறுவனம் அழைப்பு

கடும் போட்டிகள் நிறைந்த இன்றைய கல்விச் சூழலில் கல்லூரியில் இடம் கிடைப்பதற்கே மல்லுகட்ட வேண்டியிருக்கிறது. கல்லூரியில் இடமும் அளித்து மாதந்தோறும் உதவித்தொகையையும் ஒரு மத்திய அரசு கல்வி நிறுவனம் வழங்குகிறது என்றால் அது எந்த நிறுவனம், என்ன படிப்பு என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வமும் ஆவலும் எழுவது இயல்பு. இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (Indian Statistical Institute) என்ற மத்திய அரசு உயர்கல்வி நிறுவனம்தான் அது.

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்த நிறுவனம் புள்ளியியல், கணிதம் ஆகிய பாடங்களில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை உதவித்தொகையுடன் வழங்குகிறது. மேலும் பொருளாதாரம், தர மேலாண்மை, நூலக அறிவியல், கணினி அறிவி யல் ஆகிய பாடப் பிரிவுகளில் முதுநிலை படிப்புகளும் இங்கு வழங்கப்படுகின்றன. இதன் தலைமையகம் கொல்கத்தா. சென்னை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் இதன் வளாகங்கள் உள்ளன. சென்னை வளாகம், தரமணி சி.ஐ.டி. வளாகத்தில் இயங்கி வருகிறது.

இளநிலை புள்ளியியல் பட்டப் படிப்பு பி.ஸ்டாட். (ஆனர்ஸ்) என்ற பெயரில் கொல் கத்தாவிலும், இளநிலை கணிதப் பட்டப் படிப்பு பி.மேத்ஸ் (ஆனர்ஸ்) என்ற பெயரில் பெங்களூரிலும் வழங்கப்படுகிறது. இதைப் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்படுகிறது.

சென்னை, டெல்லியில் நடத்தப்படும் எம்.ஸ்டாட். (முதுகலை புள்ளியியல்) படிப்புக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை. கொல்கத்தாவில் வழங்கப்படும் எம்.மேத்ஸ் (கணிதத்தில் முதுநிலை பட்டம்) படிப்புக்கும் ரூ.5000 உதவித்தொகை பெறலாம். இளநிலை புள்ளியியல், கணிதம் ஆகிய படிப்புகளில், பிளஸ்-2 முடித்தவர்கள் சேரலாம். கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். இந்தியப் புள்ளியியல் நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் இந்தப் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி உரிய இடஒதுக்கீடு உண்டு.

2014-2015ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இந்தியப் புள்ளியியல் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. தற்போது பிளஸ்-2 படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு மே மாதம் 11ஆம் தேதி சென்னை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.

இளநிலை கணிதம், புள்ளியியல் படிப்புகளில் சேர விரும்பும் பிளஸ்-2 மாணவர்கள் www.isical.ac.in/-deanweb என்ற இணையதளத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு மின்னஞ்சல் முகவரி அக்ரோபேட் ரீடர் வசதி, டிஜிட்டல் கையெழுத்து, போட்டோ (குறிப்பிட்ட அளவு மற்றும் முறைப் படி) ஆகிய விவரங்களை இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் மார்ச் 6ஆம் தேதி.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட சலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை செலுத்தலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான அனைத்து விவரங்களையும் நுழைவுத்தேர்வு மாதிரி வினாக்களையும் மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x