Published : 22 Dec 2013 11:40 am

Updated : 06 Jun 2017 16:38 pm

 

Published : 22 Dec 2013 11:40 AM
Last Updated : 06 Jun 2017 04:38 PM

பிரியாணி - தி இந்து விமர்சனம்

‘ப்ளேபாய்’ சுகனும் அவன் நண்பன் பரசுவும் பிரியாணி சாப்பிடும்போது ஒரு பெண்ணின் காம வலையில் விழுவதால் விளையும் விபரீதங்கள்தான் ‘பிரியாணி’.

போலீஸ் துரத்த, சுகனும் (கார்த்தி) பரசுவும் (பிரேம்ஜி) காரில் பறக்கும் காட்சியில் தொடங்குகிறது கதை. இருவரும் இங்கே வந்த கதையை விவரிக்கிறார் பரசு. சுகன் பிரியங்காவைக் (ஹன்ஸிகா) காதலித்தாலும் பார்க்கிற பெண்களிடமெல்லாம் ஜொள்ளு விடுகிறான். பரசுவோ பெண்களைக் கவர முடியாமல் தோற்றுப்போகிறான். இருவரும் பணி நிமித்தமாக ஆம்பூர் போகிறார்கள். அங்கே இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான வரதராஜனைப் (நாசர்) பேட்டி எடுக்கும் வாய்ப்பு சுகனுக்கு அமைகிறது. சுகனை வரதராஜ னுக்குப் பிடித்துப்போகிறது.


இதற்கிடையில், வரதராஜ னுக்கு கிரானைட் மோசடியில் இருக்கும் தொடர்பைப் புலனாய்வு செய்ய சி.பி.ஐ. அதிகாரி சென்னைக்கு வருகிறார். அதே நேரத்தில் வரதராஜன் காணவில்லை என்ற தகவல் வருகிறது. வரதராஜனின் மருமகன் விஜய் கிருஷ்ணா (ராம்கி) போலீஸார் உதவியுடன் அவரைத் தேடத் தொடங்குகிறார். சி.பி.ஐ அதிகாரியும் சென்னையின் உள்ள தன் நண்பன் காவல்துறை அதிகாரி விக்ரமுடன் (பிரேம்) சேர்ந்து வரதராஜனைத் தேடுகிறார்.

சுகனும் பரசுவும் திரும்பிவரும் வழியில் ‘பிரியாணி’ சாப்பிடும் இடத்தில் மாயா (மாண்டி தக்கர்) என்னும் பெண்னால் கவரப்பட்டு அவள் பின்னால் போகிறார்கள். அது அவர்களை வரதராஜன் கொலையில் சிக்கவைக்கிறது. சதி வலை அவர்களைச் சுற்றி இறுக்குகிறது. அதிலிருந்து எப்படித் தப்பினார்கள் என்பதே கதை.

இடைவேளைக்கு 15 நிமிடங்களுக்கு முன்தான் கதை சூடுபிடிக்கிறது. அதுவரை சுகனும் பரசுவும் அடிக்கும் ஜொள்ளு லூட்டிகள் எரிச்சலும் அலுப்பும் ஊட்டுகின்றன. கிரைம் கதையில் பல ஓட்டைகள். பிணத்தைப் பல நாட்கள் வைத்துக்கொண்டு அலைவது படு அபத்தம். மெமரி சிப் ஒன்றை சி.பி.ஐ அதிகாரியிடம் கொடுத்தனுப்புகிறான் சுகன். அவர்தான் தன்னைத் தேடுகிறார் என்பது அவனுக்கு எப்படித் தெரிந்தது என்ற விளக்கம் இல்லை. இரண்டாம் பகுதியில் பல திருப்பங்கள். பெரும்பாலானவை நம்பும்படி இல்லை. போலீஸாக வந்து வில்லியாக மாறும் உமா ரியாஸ்கான் திருப்பம் மட்டும் தேறுகிறது. பெண்களைக் காரோடும், பிரியாணி லெக் பீஸோடும் ஒப்பிட்டு கார்த்தியும் பிரேம்ஜியும் பேசுவது ரசிக்கவில்லை.

நண்பனுக்கு ஒரு பிரச்சினை என்றதும் விட்டுவிட்டுப் போக மாட்டோம் என்று நண்பர்கள் சேர்ந்துகொள்ளும் காட்சி பல படங்களை நினைவுபடுத்தினாலும், நெகிழ்ச்சி. தன்னுடைய அக்காவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று தவிக்கும் காட்சிகளில் கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார். பிரேம்ஜி நகைச்சுவை என்ற பெயரில் ரசிகர்களை அழவைக்கிறார். அழகுப் பதுமை ஹன்ஸிகாவுக்கு இரண்டாம் பகுதியில் கொஞ்சம் சீரியசான பாத்திரம். குறை வைக்காமல் செய்திருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னனி இசை படத்திற்கு இதம் சேர்த்திருக்கிறது. எடிட்டர்கள் பிரவின், ஸ்ரீகாந்த் இருவரையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

முதல் பாதி அலுப்பு, இரண்டாம் பாதி ஓட்டைகளை மீறி விறுவிறுப்பு.

இதுதான் வெங்கட் பிரபு பரிமாறிய பிரியாணியின் கலவை.


பிரியாணிவெங்கட் பிரபுயுவன் சங்கர் ராஜா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

sufi-stories

சூபி தரிசனம்

இணைப்பிதழ்கள்

More From this Author

x