

இந்தியாவின் மிகப் பெரிய மிதக்கும் சூரிய மின்நிலையம் கேரள மாநிலம் காயம்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கூட்டுச் சுழல் மின்உற்பத்தி ஆலையில் (Rajiv Gandhi Combined Cycle Power Plant) 100 கிலோ வாட் பீக் (kilowatt peak) ஆற்றல் அளவுகொண்ட சூரிய மின்தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. தேசிய அனல் மின் கழகம் (NTPC - National Thermal Power Corporation Limited) இந்தத் தகடுகளை நிறுவியுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தால் இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
தண்ணீருக்குள் சூரிய மின் நிலையம் அமைப்பதால் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் வெப்பம் குறைக்கப்படுகிறது. இதனால் மின் ஆற்றல் உற்பத்தி இழப்பும் குறையும். மேலும் இந்தத் தகடுகளை மேலே நிறுத்துவதன் மூலம் சூரிய வெப்பத்தால் நீர் ஆவியாவதும் குறையும். அதனால் மிதக்கும் சூரிய மின் நிலையம் இப்போது உலகம் முழுவதும் பரவலாகிவருகிறது. உலகின் முதல் மிதக்கும் சூரிய மின் நிலையம் தென்கொரியாவின் அன்சியோங் நகரத்தில் நிறுவப்பட்டது.
புதிய தேசிய சுகாதார கொள்கை
சில ஆண்டுகளாக ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்த தேசிய சுகாதார கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்னதான சுகாதார கொள்கைதான் இதுவரை நடைமுறையில் இருந்தது. ஆரம்ப சுகாதார நிலையங்களின் மகப்பேறு, நோய்த் தடுப்பு போன்ற சில சேவைகளை மட்டுமே இது வழங்கி வருகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் பொருட்டு ஒரு முழுமையான சேவை அளிக்கும் வகையிலான திட்டங்களும் மாவட்ட மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தும் திட்டங்களும் இந்தப் புதிய கொள்கையில் உள்ளன எனச் சொல்லப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து 2.5 சதவீதம் சுகாதாரத்துக்குச் செலவிடவும் இந்தப் புதிய கொள்கை வழிவகை செய்யும். இது கடந்த கொள்கையில் 1.4 சதவீதமாக இருந்தது.
160 கோடி ஆண்டுப் பழமையான பாசி
இந்தியாவில் 160 கோடி ஆண்டுகள் பழமையான பாசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சித்திரகூட் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் பாசிதான், பூமியின் மிகப் பழமையான தாவரமாக இருக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது 120 கோடி ஆண்டுகள் பழமையான பாசி. இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் மரங்கள் உண்டான வரலாற்றைக் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்தக் கண்டுபிடிப்பு ‘PLOS Biology’ இதழில் வெளியாகியுள்ளது.
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை
450 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கும் திறன் கொண்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக்-ஐ இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. மார்ச் 11-ம் தேதி ஒடிசாவில் உள்ள சாந்திபூர் கடல் பகுதியில் இந்தச் சோதனை நிகழ்த்தப்பட்டது. இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான ‘பிரம்மோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். 200 கிலோ வெடிப்பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம்வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது. இப்போது அதன் வேகத்தை 450 கிலோ மீட்டராக அதிகப்படுத்தியுள்ளனர். இதன் வேகத்தை 800 கிலோ மீட்டராக மாற்றும் ஆய்வு இப்போது நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பிரம்மபுத்திரா, ரஷ்யாவின் மோஸ்க்வ (Moskva) ஆகிய இரு நதிகளின் பெயரை இணைத்து இந்த ஏவுகணைக்குப் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒளிரும் தவளை
உலகின் முதல் ஒளிரும் தவளை அர்ஜெண்டினாவில் சாண்டஃபே என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலை வெளிச்சத்தில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்தத் தவளைகள் இரவில் நீலம், பச்சை நிறங்களை வெளிப்படுத்துபவையாக உள்ளன. ‘Proceedings of the National Academy of Sciences’ என்னும் இதழில் இது குறித்த ஆய்வு வெளியாகியுள்ளது. குறைந்த அலைநீளத்தில் ஒளியை கிரகித்து, நீண்ட அலை நீளத்தில் ஒளியைப் பிரதிபலிப்பதனால்தான் இந்த ஒளிரும் தன்மை ஏற்படுகிறது.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை
தமிழ்நாடு அரசின் 2017-18-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 16-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஜெயக்குமார் இதைத் தாக்கல் செய்து பேசினார். இந்த ஆண்டின் மொத்த நிதிநிலைப் பற்றாக்குறை ரூ. 41, 977 கோடியாகவும் மூலதனச் செலவு ரூ. 27, 789 கோடியாகவும் இருக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. திட்டங்களைச் செயல்படுத்த ரூ. 41,925 கோடி கடன் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறைக்கு மொத்தம் ரூ. 2192 கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ. 10158 கோடி, பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 26932 கோடி, உயர் கல்வித்துறைக்கு ரூ. 3680 கோடி, தமிழ் வளர்ச்சிக்கு ரூ. 48 கோடி, காவல்துறைக்கு ரூ. 6483 கோடி, தீயணைப்புத்துறைக்கு ரூ. 253 கோடி, சிறைத்துறைக்கு ரூ. 282 கோடி, வேளாண் துறைக்கு ரூ. 1680.73 கோடி, மீன்வளத்துறைக்கு ரூ. 768 கோடி, தொழிலாளர் நலத்துறைக்கு ரூ. 1010 கோடி, ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ. 3,009 கோடி, நீர் வளத்துறைக்கு ரூ. 4791 கோடி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ. 988 கோடி, மின்சாரம்- எரிசக்தித் துறைக்கு ரூ. 16998 கோடி, வருவாய் பற்றாக்குறை ரூ. 15931 கோடி.
மேலும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 6000 கோடி; ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.3100 கோடி; சாலை பாதுகாப்புக்கு ரூ.100 கோடி; சுற்றுலாத்துறையில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 403 கோடி; நான்கு வழிச்சாலைகள் தரம் உயர்த்த ரூ.1508 கோடி; பிரதம மந்திரி கிராமப்புற சாலைத் திட்டத்துக்கு ரூ. 758 கோடி; சென்னை புறநகர் சாலை மேம்பாடு முதற்கட்டப் பணிகளுக்கு ரூ. 232 கோடி; திறன்மிகு நகரங்கள் திட்டத்துக்கு ரூ.1200 கோடி; அடல் நகர்ப்புற புத்துணர்வுத் திட்டத்துக்கு ரூ.1400 கோடி; சமச்சீர் வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ. 282.22 கோடி; ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சியளிக்க ரூ.150 கோடி; நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.13996 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.