Published : 24 Oct 2014 02:59 PM
Last Updated : 24 Oct 2014 02:59 PM

வண்ண வண்ண மொபைல் கூடுகள்

ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிவேகமாக அதிகரித்து வருகிறது. ஆகவே அவற்றைப் பாதுகாக்க புதுப் புது மொபைல் கூடுகள் (Case), உறைகள் (Cover) ஆகியவற்றின் வரத்தும் அதிகரித்துவிட்டன. முன்பெல்லாம் போன் கீழே விழுந்து உடைந்துவிடுமோ என்பதற்காக, அதைக் கழுத்திலே தொங்கவிட்ட காலம் இருந்தது. இப்போது போனைத் தூக்கி எறிந்தாலும் பாதிப்படையாமல் பாதுகாக்கும் கூடுகளும் உறைகளும் வந்துவிட்டன. மொபைல் கூடுகளையும் உறைகளையும் ஆன்லைனிலோ, நேரிலோ வாங்கலாம்.

போட்டோ மொபைல் கூடு

கல்லூரி மாணவர்கள் தங்களது மொபைல் கூட்டில் தங்கள் போட்டோவையோ மனதுக்குப் பிடித்த வேறொரு டிசைனையோ வைத்துக்கொள்கிறார்கள். தங்களுடைய நண்பர்களுக்கும் அவர்கள் இதைப் பரிசுப் பொருளாக ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள். இளைஞர்கள் மொபைல் உறையைவிட ஸ்கின்னையே பெரிதும் விரும்புகின்றனர். மொபைல் ஸ்கின் போனுக்குப் பெரிய பாதுகாப்பாக அமையாவிட்டாலும் கூடுதல் அழகு சேர்க்கும் வண்ணம் உள்ளது.

போன் ஸ்கின்னில் அவர்களுக்குப் பிடித்த டிசைனையோ அவர்களது போட்டோவையோ பின்புறம் அச்சிடுமாறு ஆர்டர் செய்து வாங்கிக்கொள்கிறார்கள். மொபைல் கூட்டில் பல வகைகள் உள்ளன, மொபைலில் வீடியோ பார்க்கும்போதோ வீடியோ எடுக்கும்போதோ போன் ஆடாமல் இருப்பதற்காக ஸ்டேண்ட் வைத்தும் கூடு கிடைக்கிறது. மொபைல் ஃபிலிப் கவரையும் பல விதங்களில் வெளியிடுகின்றனர், கவரைத் திறந்தால் தானாக அன்லாக்காகும், கவரை மூடினால் லாக்காகிவிடும். கவரைத் திறக்காமலே வரும் அழைப்புக்குப் பதில் தர முடியும். அச்சிடப்பட்ட இந்த போன் கேஸ்கள் ரூ. 400 முதல் ரூ. 600 வரை விற்கப்படுகின்றன.

வாட்டர் ரெஸிஸ்டண்ட் மொபைல் கூடு

தண்ணீர் பட்டாலே வீணாகிவிடும் என்று பயந்து போன்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதே முக்கியமான வேலையாக உள்ளது. அதைக் குறைக்கவே நீர்புகாத் தன்மை கொண்ட மொபைல் கூடுகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் மழைக்காலத்தில் மொபைலைப் பத்திரமாகப் பாதுகாக்கின்றன. இவை ரூ. 700 முதல் ரூ.1600 வரை விற்கப்படுகின்றன.

சோலார் பேனல் மொபைல் கூடு

சூரிய சக்தித் தகடாகச் செயல்படும் மொபைல் கூடுகளும் கிடைக்கின்றன. இந்தக் கூட்டின் மீது படும் வெயில் மூலம் மின்சக்தி கிடைக்கிறது. அப்பொழுது சின்னதாக விளக்கு ஒளிரும். நிழலுக்கு வந்தவுடன் அணைந்துவிடும். இவை முழுமையாக சார்ஜ் தராவிட்டாலும், அவசர நேரத்தில் இதன் மூலம் போன்களுக்கு சார்ஜ் செய்துகொள்ளலாம். இவை ரூ.1500 முதல் ரூ. 2500 வரையான விலையில் கிடைக்கின்றன.

முப்பரிமாண மொபைல் கூடுகள்

இந்த 3டி மொபைல் கூடுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை. ஆன்லைனில் ரூ. 350 முதல் ரூ.1500 வரை விற்கப்படும் இந்த 3டி ரக கூடுகளுக்குக் கல்லூரி மாணவரிடையே பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது. சிலிகோன் மற்றும் பாலி கார்பனேட்டால் வடிவமைக்கப்பட்டதால் இது திடமானதாக அமைந்துள்ளது. எல்லா மொபைல் வகைகளுக்கும் ஏற்ற விதத்தில் கிடைக்கும் இவற்றின் விலை ரூ. 350 முதல் ரூ. 2500 வரை.

வாலெட் போன் கூடுகள்

இந்தக் காலத்து இளைஞர்களின் பரபரப்பான வாழ்க்கைக்கு ஏற்ற போன் கேஸ் இது. பெண்களுக்கு, ஆண்களுக்கு எனத் தனித்தனி டிசைன்களில் விற்கப்படும் இந்த வகை போன் கூடுகள், மொபைல் போனைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் ஒரு வாலெடாகவும் பயன்படும் வண்ணம் பல தனி அடுக்குகளைக் கொண்டிருக்கின்றன. இதன் மற்றொரு சிறப்பு அம்சம் மாட்டிக்கொள்ள வசதியாக அமைக்கப்பட்ட கைப்பிடிதான். இவை சந்தையில் ரூ.500 முதல் ரூ. 1800 வரை விற்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x