Last Updated : 20 Dec, 2013 10:01 AM

 

Published : 20 Dec 2013 10:01 AM
Last Updated : 20 Dec 2013 10:01 AM

எம்.ஜி.ஆர் நினைவுகள் : அழத்தெரியாத நடிகன்!

பொதுவாக அந்தக் காலத்து சினிமா ரசிகர்களிடம், குறிப்பாகப் பெண்களிடம், எம்.ஜி.ஆரைப் பற்றிய விமர்சனம் இருந்தது. “பாரேன்.. அழற சீன் வந்தா எம்ஜியார் முகத்தைப் பொத்திக்குவார். ஏன்னா அவரால சிவாஜி மாதிரி அழ முடியாது” என்று சொல்வதை நம்மில் பலர் கேட்டிருக்கிறோம். இயல்பு வாழ்க்கையில்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு மிகை நடிப்புடன், வித விதமான அழுகைகளைப் பார்த்த ரசிகக் கண்களுக்கு எம்.ஜி.ஆர். நடிப்பு ஒவ்வாதுதான். உலகில் எல்லோரும் ஒரே மாதிரியாக அழுகிறார்களா என்ன?

நாடகப் பின்புலம் கொண்டவர் என்றாலும் தனது முதல் இயக்குநர் எல்லீஸ்.ஆர்.டங்கன் என்ற அமெரிக்கராய் அமைந்ததாலோ என்னவோ எம்.ஜி.ஆரின் பெரும்பாலான திரைப்படங்களில் அவரிடம் அதீதமான முகபாவனைகளும் விசித்திரமான உடல்மொழிகளும் குறைவாகவேக் காணப்பட்டன (பாடல் காட்சிகளிலும் பிற்காலத்திய படங்களிலும் அவரது நடிப்பில் வேடிக்கையான பாவனைகள் அமைந்தது வேறு கதை). எம்.ஜி.ஆர். நடிப்பில் மிகக் குறைவான கவனம் பெற்றது அவரது அடக்கிவாசிக்கும் (under play) நடிப்பு. பல காட்சிகளை உதாரணமாகக் கூறலாம். மந்திரி குமாரி படத்தில் “எனக்காகப் பேச இங்கு யாருமே இல்லையா?” என்று குமுறும் எம்.ஜி.ஆரிடம் அதீத உடல்மொழி இருக்காது.

கேளிக்கை மன்னன்

பதற்றத்திலும் சுய இரக்கத்திலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் கட்டாயம் உள்ள ஒருவனின் உடல்மொழி அது. தன்னளவில் அதைச் சிறப்பாகக் கையாண்டிருப்பார். வேதனையை வெளிப்படுத்தும் காட்சிகளில் பெரும்பாலும் அவரது பார்வை மேல்நோக்கியே இருக்கும். எனினும், கன்னங்கள் அதிர கண்களிலிருந்து கண்ணீர் பெருகாமல் அந்த உணர்வை, ஒரு மனிதனின் சோகமாக ஏற்றுக்கொள்ள நமது ரசிகர்களால் முடியவே இல்லை. அவர்களைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர். ஒரு கேளிக்கை மன்னர். வீரதீர நாயகன். அவரிடம் உணர்ச்சிகரமான நடிப்பை எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது.

அதீத உடல்மொழிகளைத் தவிர்த்து, மேற்கத்திய பாணியில் நடித்த ஜெமினி கணேசன் போன்ற நடிகர்களின் வரிசையில் எம்.ஜி.ஆர். இணைந்திருக்க வாய்ப்பு இருந்தது. எனினும் பொதுவாகவே, காதல், குடும்பப் பாசம், சூழ்ச்சி வலையில் சிக்கி விடுபட்டு வில்லன்களை அழித்தல் என்ற கதைப் பின்னணியில் தயாரான பல படங்களில் நடித்த அவருக்கு பாந்தமான பாத்திரங்களைச் செய்யும் வாய்ப்பு மிகக் குறைவாகவே அமைந்தது. கிடைத்த சிறிய சந்தர்ப்பத்தையும் சரியாகவே பயன்படுத்திக்கொண்டார்.

எம்.ஜி.ஆர். இரு மாறுபட்ட குணங்களைக் கொண்ட இரட்டையர் வேடங்களில் அவர் நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் ஹோட்டலில் டிபன் சாப்பிடும் காட்சி ஒன்று உண்டு. துணிச்சலும் நம்பிக்கையும் கொண்ட ராமு ஆர்ப்பாட்டமாகப் பல உணவு வகைகளைச் சாப்பிட்டுவிட்டு பில்லுக்குப் பணம் கொடுக்காமல் நழுவிச் சென்ற பின்னர், அதே நாற்காலியில் எதுவுமே தெரியாத அப்பாவியாக அமரும் பாத்திரம் எம்.ஜி.ஆரின் இயல்பான நடிப்புக்கு ஒரு உதாரணம். “இதெல்லாம் ..நா சாப்புடவேயில்லயே” என்று அவர் சொல்லும்போது முகத்தில் அத்தனை வெகுளித்தனம் இருக்கும்.

அதேபோல், அன்பே வா படத்தில் முதலாளியான தன்னை யாரென்று அறியாமல் தன்னிடமே வேலைக்காரன் (நாகேஷ்) அதிகாரமாகப் பேசும்போது, பெருந்தன்மையான சிரிப்புடன் அதை வேடிக்கையாக எடுத்துக்கொள்ளும் காட்சிகளில் அவரது நடிப்பு பாந்தமாக இருக்கும். மனம் நிறைந்து கண்கள் சுருங்கப் பளிச்சிடும் அவரது சிரிப்பும் மிக இயல்பானது. ரசிகன் தன் ஆபத்பாந்தவனாக அவரைக் கருதிக்கொள்ள அந்தப் புன்னகை பெருமளவு உதவி செய்தது. நாகேஷ், சந்திரபாபு போன்ற நகைச்சுவை நடிகர்களுடனான அவரது காட்சிகளில் அவர்கள் செய்யும் சேட்டைகளை அமைதியான சிரிப்புடன் கவனித்துக்கொண்டிருப்பார்.

நுட்பமான நடிப்பு

அரச கட்டளை படத்தில் பெருங்கோபத்துடன் தன்னைத் தாக்க வரும் நம்பியாரிடம் சண்டை போடுவதற்கு முன் தனக்கே உரிய நம்பிக்கைப் புன்னகையுடன் அலட்டிக்கொள்லாமல் எம்.ஜி.ஆர். பேசும் விதம் அவரது நிதானமான, அழுத்தமான நடிப்பைப் பறைசாற்றும். நம்பியாரின் வாள் எம்.ஜி.ஆரின் மார்புக்கு அருகே நீண்டிருக்கும். “உன் உயிரைப் பறிப்பேன்” என்று கண்களை உருட்டி நம்பியார் மிரட்டுவார். அப்போதும் அதே புன்னகையுடன் “செடியில் பூத்த மலரல்ல பெரியவரே என் உயிர்...” என்று சொல்லிச் சிறிய இடைவெளி விடுவார். புன்னகை மறையும். முகம் சற்றே தீவிரம் கொள்ளும். “... நீங்கள் நினைத்தவுடன் கை நீட்டிப் பறிப்பதற்கு” என்பார். அப்போது கை உடைவாளைப் பற்றியிருக்கும். அதன் பிறகு வாய்ப்பேச்சுக்கு வேலை இருக்காது. ‘மகாதேவி’ படத்தில் தன் தளபதி வீரப்பாவின் நிஜ முகம் தெரியும் கணத்தில் எம்.ஜி.ஆர். தன் கண்களின் சலனத்தில் அந்த பிரக்ஞையை வெளிப்படுத்துவார். எம்.ஜி.ஆரின் நுட்பமான நடிப்பு வெளிப்படும் இடங்கள் இவை.

வில்லன்களைவிடக் குறைந்த பணபலம் கொண்டவர் என்றாலும் மக்களின் அன்பும், விதவைத் தாயின் ஆசீர்வாதமும் தனது பலம் என்று துணிச்சலாகச் செயல்படும் பாத்திரங்கள் பெரும்பாலும் அவருக்கு அமைந்தன. அந்தத் துணிச்சலுடன் பதற்றம் எதுவுமில்லாமல் வில்லன்களிடம் நம்பிக்கைப் புன்னகையுடன் அவர் பேசும் வசனங்கள் அவரது அரசியல் செல்வாக்குக்கே அடித்தளமாக அமைந்தன. அந்தக் காட்சிகளில் அவர் தனது எல்லையைத் தாண்டி ஆர்ப்பாட்டமாகப் பேசமாட்டார். “நாகப்பா..நல்லா கேட்டுக்க! உன் அக்கிரமங்கள நா ஒரு நாளும் பொறுத்துக்க மாட்டேன்” என்பதுதான் வில்லன்களுக்கான அவரது அதிகபட்ச எச்சரிக்கை. அதன் பின்னர் அவர் வீணாகப் பேசிக்கொண்டிருக்க மாட்டார். வீர வசனங்களை அவரது கைதான் பேசும். சண்டைக் காட்சிகளில் வேகமும் கோபமும் அற்புதமாக வெளிப்பட்டுவிடும்.

அமையாத வாய்ப்புகள்

துப்பாக்கியால் சுடப்பட்டுப் பிழைத்த பின்னர் வந்த படங்களில் அவரது வசன உச்சரிப்பு வேடிக்கையாக அமைந்தது என்றாலும் அவரது நடிப்புக்குப் பெரிய பங்கம் ஏற்படுத்திவிடவில்லை. தவிர அப்போது அவர் திரையில் தோன்றினாலே போதும் என்ற அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் அவரது பிம்பம் பிரம்மாண்டமாக வளர்ந்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவரது நடிப்பை அவரது தீவிர ரசிகர்கள் அல்லாத பொது ரசிகர்களால் அவ்வளவாக ரசிக்க முடிந்ததில்லை. துணை நடிகராக அறிமுகமாகி இறுதிவரை கதாநாயகனாகவே நடித்த நடிகர் என்பதால், தன் வயதுக்குத் தகுந்த பாத்திரங்களில் நடிக்கும் சந்தர்ப்பம் அவருக்கு வாய்க்கவே இல்லை. சக நடிகரான சிவாஜி போல தந்தை, மாற்றுத் திறனாளி போன்ற பாத்திரங்களில் அவர் நடிக்காமல் போனது துரதிருஷ்டம்தான். பெரும் வணிக மதிப்பும், ஆராதிக்கும் ரசிகர் கூட்டமும் கொண்ட நட்சத்திர நடிகர்களுக்கு நிகழும் விபத்துதான் இது.

அரசியல் வெற்றி தந்த மிகப்பெரிய பிம்பத்தின் நிழலில், முதல்வர் பதவியுடன் நடிப்பையும் கையாளும் வாய்ப்பை இழந்ததால் வேறு வழியின்றி எம்.ஜி.ஆர். ஓய்வுபெற்றுக்கொள்ள நேர்ந்தது. ஒருவேளை அப்படி நிகழாதிருந்தால், தோற்றப்பொலிவு மிக்க ஒரு துணை நடிகரை ரசிகர்கள் கண்டு ரசிக்கவும் காலம் வழி விட்டிருக்கலாம்.

எம்.ஜி.ஆர். படங்கள்: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x