

உலகிலுள்ள பொருட்கள் திடம், திரவம், வாயு, பிளாஸ்மா ஆகிய நான்கு நிலைகளில் காணப்படுகின்றன. மற்ற நிலைகளில் உள்ள பொருட்கள் ஏதாவது ஒரு நிறத்தைப் பெற்றிருக்கும்போது, ஏன் பெரும்பாலான வாயுக்கள் மட்டும் நிறமற்று இருக்கின்றன?
ஒளியை கிரகித்துக்கொள்பவை
பார்ப்பதற்கு நிறமற்றது போலத் தெரிந்தாலும், உண்மையில் வாயுக்கள் நிறமற்றவை அல்ல. பல வாயுக்கள் பிரகாசமான நிறத்தைக் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நைட்ரஜன் டைஆக்சைடு (சிரிப்பூட்டும் வாயுவான நைட்ரஸ் ஆக்சைடு அல்ல) பழுப்பும் ஆரஞ்சும் கலந்த நிறத்தைக் கொண்டது. நீரைத் தூய்மைப்படுத்துவதற்குப் பயன்படும் குளோரின் வாயு நிலையில் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தையும், ஐயோடின் வாயு கத்தரிப்பூ நிறத்தையும் கொண்டிருக்கின்றன.
வளிமண்டலத்தில் நிறைந்திருக்கக்கூடிய - நாம் சுவாசித்து வெளிவிடக்கூடிய ஆக்சிஜன், கரியமில வாயு மற்றும் நீராவி போன்றவையும் ஒளியை கிரகித்துக்கொள்கின்றன. பொதுவாக குறிப்பிட்ட அலைநீளமுள்ள ஒளிக்கற்றைகள் கிரகிக்கப்பட்டு, கிரகிக்கப்படாத அலைநீளம் கொண்ட ஒளிக்கற்றைகளே நிறமாக நமக்குத் தெரிகின்றன. ஆனால் ஆக்சிஜன், கரியமில வாயு, நீராவி போன்றவை கிரகிக்கும் ஒளிக்கற்றைகள் புறஊதா, அகச்சிவப்புக் கதிர்களின் அலைநீளங்களுக்குள் இருப்பதால் அந்த நிறங்கள் நமக்குத் தெரிவதில்லை.
கண்களுக்குத் தெரியாத ஒளிக்கற்றை
பொதுவாகவே புறஊதா, அகச்சிவப்புக் கதிர்களை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. அந்த அலைநீள ஒளிக்கற்றைகள் நமக்குத் தெரிவதில்லை. ஆக்சிஜனும் தண்ணீரும் கிரகிக்கக்கூடிய ஒளிக்கற்றைகள், பொதுவாக அதிகம் கிரகிக்கப்படும் தன்மை கொண்டவையாக இல்லை. விஷயம் என்னவென்றால் நம்மால் பார்க்க முடிந்த ஒளிக்கற்றைகளின் அளவு எல்லைக்கு உட்பட்டதுதான்.
எப்படி வௌவால், ஓங்கில், யானை போன்றவை எழுப்பும் மீயொலி அலைகளை நம் காதுகளால் உணர முடிவதில்லையோ, அதுபோல குறிப்பிட்ட அலைநீளம் கொண்ட ஒளிக்கற்றைகள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. எனவே, வாயுக்கள் நிறமற்றவை என்பது உண்மையல்ல, வாயுக்கள் நிறத்தைக் கொண்டவைதான். அதேநேரம், வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் நமக்குப் புலப்படும் நிறங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை.