Published : 26 May 2017 09:57 am

Updated : 28 Jun 2017 20:13 pm

 

Published : 26 May 2017 09:57 AM
Last Updated : 28 Jun 2017 08:13 PM

சவால்களும் சாகசங்களும் நிறைந்த மாணவர் படை

மாணவர்களுக்குச் சாகசம் என்றாலே தனி குஷி வந்துவிடும். அதிலும் சவால்கள் சேர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க உதவுவது தேசிய மாணவர் படை (National Cadet Corps). சாதாரண மாணவர்களுக்கு அர்ப்பணிப்பு, ஒழுக்கம், ஈடுபாடு, கட்டுப்பாடு, தேசப்பற்று போன்றவற்றைக் கற்பித்து சிறந்த குடிமகன்களையும் குடிமகள்களையும் உருவாக்குவதில் என்.சி.சி. முக்கியப் பங்காற்றுகிறது.

என்.சி.சி. தானே! மைதானத்தில் 10 முறை ஓடச்செய்வார்களே அது தானே என்று நினைப்போம். அது மட்டுமேயல்ல என்.சி.சி. வாழ்வில் எப்படிப்பட்ட சூழ்நிலையயும் எதிர்த்துப் போராடும் உடல் வலுவையும் மன வலுவையும் அளிக்க முயல்கிறது என்.சி.சி. ஆரம்பத்தில் மாணவர்களைச் சோதிக்க மைதானத்தில் ஓடுதல், குப்பைகளை அகற்றுதல், கனமான பொருட்களைத் தூக்குதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளச் செய்வார்கள். பலர் துவண்டு விழுந்துவிடுவார்கள். சிலர் மட்டுமே எந்தச் சவாலையும் சந்திக்கத் தாயாராவார்கள்.


என்.சி.சி.யில் ராணுவம், கப்பல் படை, விமானப் படை ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன. துப்பாக்கி சுடுதல், தடைகளைத் தாண்டிச் செல்லுதல், வரைபடத்தைப் படித்து வழிகண்டறிதல் போன்றவை பொதுவான அடிப்படைப் பயிற்சிகள். அனைத்திலும் சிறப்பாகச் செயல்படுபவர்கள் முகாம்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முகாம்கள் இந்தியா முழுவதும் பல இடங்களில் நடைபெறும். பிற ஊர்களுக்கு நண்பர்களுடன் பயணித்து முகாமில் பயிற்சி எடுப்பது நல்ல நினைவுகளைத் தரும்.

எந்தச் சவாலைச் சந்திக்கும்போதும் நண்பர்கள் உடன் இருப்பதால் அது ஊக்கம் தரும். எதையும் ஒற்றுமையாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். குடியரசு தின விழாவுக்கான முகாம் மிகவும் சிறப்பானது. திறமையையும் அணிவகுப்பு செய்யும் முறையையும் கொண்டு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் தமிழகம் சார்பாக புது டெல்லியில் குடியரசு தினத்தன்று அணிவகுப்பு செய்வார்கள். அந்த அணிவகுப்பில் தேர்வாகி கலந்துகொள்வதே என்.சி.சி.யில் கவுரவமாகக் கருதப்படும்.

இது மட்டுமல்லாமல் தலைமைப் பண்பு முகாம், துப்பாக்கி சுடுதலுக்கான முகாம் என மாணவர்களின் பண்புகளையும் திறனையும் மேம்படுத்துவதற்கான முகாம்கள் பிரத்யேகமாக அமைக்கப்படும். தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்த தேசிய ஒருமைப்பாடு முகாம் நடைபெறும். அதில் பிற மாநில மாணவர்கள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் பங்குபெறுவார்கள். “பயிற்சி முடிந்து டென்டுக்குள் வந்து படுத்தால் அலுப்புக்குக் கொசுத் தொல்லைகூடப் பெரிசா தெரியாது”என்றார் ஐஸ்வர்யா, என்.சி.சி முன்னாள் கேடெட் இவர்.

என்.சி.சி.யில் மற்றொரு உன்னதமான முகாம்தான் என்.சி.சி. மாணவர்கள் பரிமாற்றத் திட்டம். இதில் இந்திய தன் நட்பு நாடுகளுடன் சிறந்த மாணவர்களைப் பரிமாறிக்கொள்ளும். “இந்த முகாம் மற்ற நாட்டின் ராணுவப் பயிற்சிகளையும் இயங்கும் தன்மையையும் அறிய சிறந்த வாய்ப்பாக அமையும்” என்றார் கார்த்திக், இந்தத் திட்டம் மூலம் இலங்கை சென்று வந்த கேடெட் இவர்.

சவால்கள் நிறைந்திருக்கும் என்.சி.சி.யில் சாகசங்கள் இல்லாமல் இருக்குமா? அதற்கெனத் தனி முகாம்கள் உள்ளன. அதில் மலை ஏறுதல், பாரா ஜம்பிங், பாரா கிலைடிங், படகு செலுத்துதல் போன்ற சாகசங்கள் இடம்பெறும். இது தவிர்த்து தடகளப் போட்டிகளும் பிற விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும்.

பதக்கங்கள் வெல்வதும் தனிப் பெருமிதத்தைத் தரும். சென்னை வெள்ளத்தில் சிறப்பாக மக்களுக்கு உதவியதற்கும் அவர்களுக்குப் பாதுகாப்பாகச் செயல்பட்டதற்கும் என்.சி.சி.யின் சிறந்த ராணுவ கேடெட் பரிசு பெற்றவர்தான் சௌந்தர பாண்டியன். “எந்த நிலையிலும் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் திறனை என்.சி.சி. மேம்படுத்தும். நம்மை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும்” என்றார் சௌந்திர பாண்டியன்.

இப்படிப் பல நல்ல அனுபவங்களை அளிக்கும் என்.சி.சி. மூலம் ராவணுவத்திலோ கப்பல் படையிலோ விமானப்படையிலோ சேர முடியும். அதற்கு என்.சி.சி. ‘சி’ சான்றிதழ் மட்டும் இருந்தால் போதும்.

இனி என்.சி.சி. பற்றி மிகச் சாதாரணமாக எடைபோட மாட்டீர்கள் அல்லவா?


மாணவர் சாகசம்தேசிய மாணவர் படைஎன்.சி.சிமாணவர் ஒழுக்கம்என்சிசி பயிற்சிஎன்சிசி கேடெட்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author