Last Updated : 10 Sep, 2016 01:10 PM

 

Published : 10 Sep 2016 01:10 PM
Last Updated : 10 Sep 2016 01:10 PM

மழை என்னும் மிகப் பெரிய ஷவர்

தனியான குளியலறை என்ற முறையைப் பண்டைய எகிப்தியர்கள்தான் முதன்முதலில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், ஷவர் என்று சொல்லக்கூடிய குளியலறைச் சாதனம் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது 1767-ம் ஆண்டு லண்டனில்தான். வில்லியம் ஃபீத்தம் என்பவர்தான் அதைக் கண்டுபிடித்தது. ஆனால் அவர் கண்டுபிடித்தது இன்றைக்குள்ள ஷவர் போல் மேலிலிருந்து நீர் விழும்படியான ஷவர் அல்ல. கையில் பிடித்துப் பயன்படுத்துவது போன்ற ஷவர்தான்.

ஒரு காலத்தில் ராஜ குடும்பத்தினரும் பிரபுக்களும் மட்டுமே ஷவர் உபயோகித்து வந்தனர். அவர்களது வீடுகளில் மட்டுமே குளிப்பதற்கெனப் பிரத்யேகமான அறைகளும் இருந்தன. அறிவியல் வளர்ச்சி வளர வளர இந்தக் குளியல் ஷவர் பயன்பாடு சற்றே பரவலானது. மேல் நடுத்தர மக்களும் தங்கள் வீடுகளில் குளியல் ஷவர் பயன்படுத்தத் தொடங்கினார்கள். பிறகு தங்கும் விடுதிகளில் இந்தக் குளியல் ஷவர் பயன்பாடு அதிகரித்தது. இந்தியாவிலும் இப்போது பெரும்பாலான நடுத்தர வர்க்கத்து வீடுகளில் ஷவர் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

ஷவர் பயன்படுத்துவதில் சில நன்மைகள் இருக்கின்றன. நீர் குறைந்த அளவுதான் செலவாகும். மேலும் அருவியில் குளிப்பது போன்ற புத்துணர்வு கிடைக்கும். ஷவர்களில் அதன் பயன்பாடு, அமைப்பு குறித்துப் பல வகைகள் உள்ளன.

சுவர் ஷவர்

இந்த மாதிரியான ஷவர் மரபானதும் பரவலாகப் பயன்படுத்தப்படுவதும் ஆகும். நிரந்தரமாகச் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றிலும் பல வகைகள் உள்ளன. இதன் கழுத்தைத் திருப்பும் வசதியுடனும் இப்போது இந்த வகை ஷவர் கிடைக்கிறது. இதனால் உயரமானவர்களும் குள்ளமானவர்களும் பயன்படுத்த முடியும். மேலும் நீரின் அழுத்தத்தை அதிகரிக்கவும் குறைக்கவும் முடியும்.

கைப்பிடி ஷவர்

இந்த வகை ஷவர் சமீ்பகாலமாக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கையாள்வதற்கு எளிது. உடலின் பாகத்துக்கு ஏற்ப இந்த வகை ஷவரைப் பயன்படுத்த முடியும் என்பது அனுகூலமானது. இதிலும் நீரின் அழுத்தத்தை அதிகரிக்கவும் குறைக்கவும் முடியும்.

முழு உடல் ஷவர்

இந்த வகை ஷவர் மேலே இருந்து நீர் தெறிப்பது மட்டுமில்லாமல் இடப்பக்கமும் வலப்பக்கமும் தெறிப்பதற்கான ஷவர் துளைகளைக் கொண்டது. இதனால் முழு உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

மழை ஷவர்

இந்த வகை நவீன வடிவ ஷவர்களில் ஒன்று. சுவரில் பொருத்தப்படும் மரபான ஷவரில் இருந்து சற்றே மாறுபட்டது. இது குளியலறையின் உத்திரத்தில் தொங்கு விளக்கு போல் அமைக்கப்பட்டிருக்கும். மழை இயற்கையின் மிகப் பெரிய ஷவர். அதைப் போல் இந்த ஷவரிலிருந்து நீர் மழைபோல் விழும். இதனால் இந்த வகை ஷவர் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x