Last Updated : 16 Feb, 2014 12:00 AM

 

Published : 16 Feb 2014 12:00 AM
Last Updated : 16 Feb 2014 12:00 AM

ஒரு கை இசை- கிருஷ்ணபிரியா

ஒரு கை ஓசை சாத்தியமா? சாத்தியம்தான். விரல்கள் ஒத்துழைத்து நீங்கள் கஞ்சிரா வாசிப்பவராக இருந்தால். அரிய உயிரினமான உடும்பின் தோலால் செய்யப்படுவது கஞ்சிரா என்னும் வாத்தியம். ஸ்ருதி சேர்க்க முடியாத வாத்தியம். பேஸ், ஷார்ப் இரண்டு நிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய வாத்தியம்.

பிரபலமாக இல்லாத இந்த வாத்தியத்தை வாசிக்க ஆண்களே யோசிக்கும்போது பெண்கள் வாசிக்காததில் ஆச்சரியமில்லை. ஆனால் இந்த வாத்தியத்தைத் தன்னுடைய விருப்ப வாத்தியமாகத் தேர்ந்தெடுத்து, கர்நாடக இசை மேடைகளில் பக்கவாத்தியம் வாசித்துவருபவர் கிருஷ்ணபிரியா. அதிலும் இடக் கையால் இவர் வாசிப்பது இன்னும் விசேஷம்.

மறைந்த கிளாரினெட் மேதை கிருஷ்ண பகவான், இவரின் பாட்டனார். இவருடைய தந்தை ரமேஷ்பாபு வயலின் வித்வான். இவருடைய அக்கா விஜயவாஹினியும் இளைய சகோதரர் திலீப் கிருஷ்ணாவும் கீ போர்ட் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள்.

புகழ்பெற்ற கஞ்சிரா வித்வான் மாயவரம் சோமசுந்தரத்திடம் கஞ்சிரா வாசிக்கக் கற்றுக்கொண்டார். ஆறு ஆண்டு பயிற்சிக்குப் பின், தமிழ்நாடு இசைக் கல்லூரியில் சேர்ந்து, கஞ்சிரா வாத்தியக் கலைமணி என்னும் பட்டயத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது திருவல்லிக்கேணி சேகரிடம் பயிற்சியைத் தொடர்ந்துவருகிறார்.

கர்நாடக இசை மேடைகளில் வீணை வித்வாம்சினி பானுமதி, மாண்டலின் கலைஞர் அரவிந்த் பார்கவ், காஷ்யப் மகேஷ், சைந்தவி, சாருலதா, ஸ்மிதா ஆகியோருடன் இணைந்து கஞ்சிரா வாசித்திருக்கிறார். பெண் தபேலாக் கலைஞரான அனுராதா பால் அவர்களுடன் இணைந்து ஜூகல்பந்தியும் வாசித்திருக்கிறார்.

சென்னையின் முக்கிய சபாக்களிலும், திருவையாறு, செம்பை விழாக்களிலும், மும்பையின் பிரபல சபாக்களிலும் இசை நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார்.

அது மட்டுமில்லாமல், முன்னணி தொலைக்காட்சிகளிலும் பிரபல நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஆடியோ ஆல்பங்களிலும் இவருடைய கஞ்சிரா ஒலித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x