Last Updated : 15 Mar, 2017 10:07 AM

 

Published : 15 Mar 2017 10:07 AM
Last Updated : 15 Mar 2017 10:07 AM

வாங்க, நிலவுக்குப் போகலாம்: குரங்குப் பாறை, டைனோசர் பாறை

விண்கலத்தின் தாழ்ப்பாளைத் திறந்தாச்சு. ஆக்ஸிஜன் டாங்க் அடங்கின விண்வெளி உடையோடு அமைதிக்கடல் பகுதியில் குதியுங்கள்.

‘என்னது, நிலவில் குதிப்பதா? கரடுமுரடான பாறைகள் இருக்கும், பள்ளங்கள் இருக்கும்னு சொன்னீங்களே’என்று பதறாதீர்கள்.

கவலை இல்லாமல் குதியுங்கள். நம்ம பூமியிலே குதிக்கிற மாதிரி நீங்க டக்குன்னு குதிக்க முடியாது. மெல்ல மெல்லதான் நிலவில் உங்க கால் படும். தவிர ஏற்கெனவே மனிதர்கள் இறங்கிய பகுதி இது. பாதுகாப்பானதுதான்.

அப்படித்தான். குதிச்சிட்டீங்களா? நீங்க நினைச்சதைவிட மெதுவாகத்தான் உங்கப் பாதங்கள் நிலவிலே பட்டது இல்லையா? புவிஈர்ப்பு விசை என்பது பூமியில் இருப்பதைப்போல ஆறில் ஒரு பங்குதான் நிலவில் இருக்கும். அது உங்களுக்குத் தெரியும்தானே. இருந்தாலும் அனுபவிக்கும் போது அது ரொம்ப ரொம்ப வித்தியாசமாக இருக்குது இல்லையா?

சின்னச் சின்னப் பாறைகளையும், பள்ளங் களையும் தாண்டி காலை வையுங்கள். நீங்கள் நடப்பது உங்களுக்கே ரொம்ப வேடிக்கையாக இருக்கிறதா? பாருங்களேன், நீங்க கங்காரு மாதிரி நடக்குறீங்க. தாவித் தாவிக் குதிக்கிற மாதிரி இருக்கு.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், காலின்ஸ்னு மூணு பேர் 1969 ஜூலை 20 அன்று ‘நிலவில் முதலில் கால் வைத்த’ பயணத்தில் கலந்துக்கிட்டவங்க. அதிலே காலின்ஸுக்குக் கிடைக்காத அதிஷ்டம் உங்களுக்குக் கிடைச்சிருக்கு. எப்படி என்று கேட்கிறீர்களா?

ஏன்னா, ஆம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும்தான் நிலவிலே நடந்தாங்க. இரண்டரை மணி நேரம் அங்கே இருந்தாங்க. அப்போது கட்டளைக் கூண்டுன்னு சொல்லப்பட்ட அப்போலோவில் இருந்தபடியே தொடர்ந்து நிலவைச் சுத்தி சுத்தி வந்துக்கிட்டே இருந்தாரு காலின்ஸ். அப்புறமா மீதி ரெண்டு பேரும் அதிலே ஏறிக்கிட்டாங்க.

‘அங்கே இருக்கும் கற்கள் மீது காலை வைக்கும்போது சத்தமே வரக் காணோமே! ஒருவேளை இந்த விண்வெளி உடை அந்தச் சத்தத்தைக் கேட்க முடியாமல் தடுக்குதோ?’ இப்படி ஒரு சந்தேகம் வருதா? அந்த உடையைக் கழற்றினாலும்கூட உங்களுக்கு அந்தச் சத்தம் கேட்காது. பக்கத்திலே இருக்கும் பாறையைச் சுத்தியல் கொண்டு உடைச்சுப் பாருங்களேன். அப்பவும் எந்தச் சத்தமும் கேட்காது. ஏன் தெரியுமா?

நிலவிலே காற்று கிடையாது. காற்று இருந்தால்தானே ஒலியை அது கடத்தும். அப்புறம் எப்படி உங்கள் காதுகளை ஒலி அடையும்?

இப்ப ஒரு கேள்வி கேட்கப் போறேன். பதில் சொல்லுங்க பார்க்கலாம். நிலவுன்ற ஒண்ணே இல்லேன்னா என்னவாகி இருக்கும்? ‘நீல் ஆம்ஸ்ட்ராங்குக்குப் புகழ் கிடைச்சிருக்காது. ராத்திரி இன்னும் கொஞ்சம் இருட்டா இருக்கும்’. இதுதான் உங்க பதிலா?

ஒரு பிரபல வானியல் நிபுணர், “நிலவு இல்லேன்னா அலைகள் உயரமாக எழும்பாது. பகல் பொழுது குறைவாக இருக்கும். வெப்பநிலை மாறுபடும்”னு சொல்றார்.

சரி சரி, அதைப்பத்தி ஏன் இப்பக் கவலை. நிலவுதான் இருக்கே. அதுவும் நாம் அந்த நிலவிலேயே காலை வச்சிட்டோமே. அதனாலே இப்ப நிலவில் இருப்பதைப் பார்த்து அனுபவிப்போம்.

நிலவிலே நிறைய பாறைகள் இருக்குது இல்லையா? அவற்றில் சில வடிவங்களைப் பார்த்தால் உங்களுக்குக் கொஞ்சம் சிரிப்பு வரலாம். சில பாறைகள் குரங்குகள் வடிவத்தில் இருக்கும். சில பாறைகளைப் பார்த்தால் பெரிய ஆமை மாதிரி இருக்குதுல்ல? அடடா, டைனோசர் மாதிரிகூட ஒரு பாறை இருக்கே. ஏதோ கனவு காண்கிற மாதிரியோ தேவதைகள் கதையைப் படிக்கிற மாதிரியோ இருக்குதுல்ல?

நிலவில் ஒரு சின்னக் குன்று இருக்குதே. அதைத் தாண்டிப் போனால் என்ன வரும்? யாராவது உயிரோடு இருப்பாங்களா? அங்கே புல் தளம் இருக்குமா? இப்படியெல்லாம் எதிர்பார்த்தா ஏமார்ந்து போவீங்க. அந்தக் குன்றிலே ஏறினாலும் விண்வெளிதான் அதற்கு அப்பால் இருக்கும்.

பக்கத்திலே இருக்கிற பைனாகுலரை எடுத்து எதைப் பார்க்கறீங்க? ‘ஆம்ஸ்ட்ராங் இங்கே வந்தபோது ஒரு வட்டைப் புதைச்சாரே, அது எங்கே?’ன்னு தேடறீங்களா? அதிலே நான்கு அமெரிக்க ஜனாதிபதிகளின் (ஐஸன் ஹோவர், ஜான் கென்னடி, ஜான்ஸன், நிக்ஸன்) அறிக்கைகள் இருந்தன. போப்பாண்டவரின் செய்தியும் அதில் இருந்தது. ஆம்ஸ்ட்ராங் நட்டு வச்சிருந்த கொடி தூரத்தில் தரையில் தெரியுதே அதைப் பார்க்க முடியுதா?

என்ன கேட்கறீங்க? “நிலவிலே அமெரிக்கக் கொடியை ஒரு கொடிக் கம்பத்திலேதானே ஆம்ஸ்ட்ராங் பறக்க விட்டார். அந்தக் கொடி இப்போ ஏன் கீழே விழுந்து கிடக்கு?’’. அதைத்தானே கேட்கறீங்க?

(பயணம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x