Last Updated : 28 Mar, 2017 09:53 AM

 

Published : 28 Mar 2017 09:53 AM
Last Updated : 28 Mar 2017 09:53 AM

ஆங்கிலம் அறிவோமே - 153: நான் கலைஞர்களை வெறுப்பேனா?

கேட்டாரே ஒரு கேள்வி

“May be the best team win என்பதில் உள்ள அபத்தம் என்ன என்று தெரிகிறதா சார்?”

சிறிது நேரம் யோசித்த பிறகுதான் ‘கேட்டாரே ஒரு கேள்வி’க்கான விடை புரிந்தது என்பதைத் தயக்கமின்றி ஒத்துக் கொள்கிறேன்.

இரு அணிகளுக்கிடையே போட்டி நடக்கவிருக்கும்போது நடுநிலை விமர்சகர்கள் நாசூக்காக ‘May the best team win’ என்கிறார்கள். இரண்டுக்கும் மேற்பட்ட பொருள்களையோ, நபர்களையோ ஒப்பிடும்போதுதானே ‘Best’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். (இரு அணிகளுக்கிடையே என்றால் ‘May the better team win’ என்றுதான் இருக்க வேண்டும்).

அதேபோல Put your best foot forward என்கிறோம். விந்தையாகத்தான் இருக்கிறது. (ஒருவேளை செல்ல நாயைப் பார்த்து இப்படிச் சொன்னால் பரவாயில்லை. நமக்கு இருப்பது இரண்டே பாதங்கள்தானே!)



“எனக்கு இயல்பானவர்களைத்தான் பிடிக்கும் என்பதை உணர்த்த I do not like artificial persons என்று கூறலாமா? ” என்று கேட்கும் வாசகரே, அப்படிச் சொல்லக் கூடாது. ஏதோ ரோபோட்களின் (robot) மீது உங்களுக்கு வெறுப்பு என்பது போல இருக்கிறது! I do not like hypocrites எனலாம்.

தவிர, Artful என்ற வார்த்தை இங்கு பொருத்தமாக இருக்கும். I do not like artful persons என்றால் நான் கலைஞர்களை வெறுப்பவர் என்பதல்ல. பலரும் artful என்றால் கலைத்தன்மை நிரம்பிய என்று எண்ணிக் கொள்கிறார்கள் அது தவறு. அந்தப் பொருள் கொண்ட வார்த்தை artistic என்பதுதான்.

Artful என்றால் புத்திசாலித்தனமான. தந்திரமான என்ற பொருளில் எதிர்மறையாகத்தான் இது பயன்படுத்தப்படுகிறது.

Some artful cosmetics were applied to the burnt face. The artful replies by the doctors raised more questions.

A place in the Sun என்றால் என்ன?

சாதகமான ஒரு நிலையில் இருப்பதை அப்படிக் குறிப்பிடுவார்கள். சூரியன் நடுநாயகமாக விளங்குகிறது. அதில் ஓர் இடம் கிடைப்பது என்பது விரும்புவதெல்லாம் கிடைக்கும் நிலையை மறைமுகமாகக் குறிக்கிறது.

After struggling for years to become a writer, she has certainly earned her place in the Sun.

சூரியன் தொடர்பான வேறு சில idioms மற்றும் phrases-ஐயும் அறிந்து கொள்வோமே?

There is nothing new under the Sun என்றால் எதுவுமே புதிதல்ல என்று பொருள். அதாவது ஏற்கனவே பலமுறை நடந்ததுதான். He was convicted of fraud. That is not shocking. It only proves that there is nothing new under the Sun.

Make hay while the Sun shines என்றால் வாய்ப்பு கிடைக்கும்போது அதைத் தவறவிடக் கூடாது என்று பொருள்.

Never let the Sun go down on your anger என்றால் கோபத்தில் எதையாவது பேசிவிட்டாலோ, செய்துவிட்டாலோ உடனடியாக அதைச் சரி செய்துவிட வேண்டும் என்று பொருள். I know you are mad at him now; but you should never let the Sun go down on your anger.

போட்டியில் கேட்டுவிட்டால்?

________________ criticized their wrong deeds.

a) Never

b) They

c)They themselves

d) They only

e) Their

Criticize என்றால் விமர்சித்தல். Deeds என்றால் actions. அதாவது செயல்பாடுகள். வாக்கியம் உணர்த்துவது அவர்கள் தங்கள் செயல்பாடுகளைத் தாங்களே விமர்சித்துக்கொண்டார்கள்.

வாக்கியத்தில் ‘criticized’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. Never என்பது தொடக்கமானால் ‘criticize’ என்ற வார்த்தைதான் இருக்க வேண்டும்.

Their என்றால் அவர்களுடைய. இந்த வார்த்தையைப் பயன்படுத்தினால் வாக்கியம் அர்த்தமில்லாததாகிறது. (அவர்களுடைய செயல் பாடுகளை அவர்களுடைய விமர்சித்தார்கள்!).

They என்ற வார்த்தையைக் கோடிட்ட இடத்தில் நிரப்பினால் அதில் இலக்கணத் தவறு எதுவுமில்லை. ஆனால் கீழே உள்ள இரண்டு வாக்கியங்களில் எது முழுமையான அர்த்தத்தைத் தருகிறது என்பதை நீங்களே முடிவெடுங்கள்.

1) அவர்கள் செயல்பாடுகளை அவர்கள் விமர்சித்துக் கொண்டார்கள்.

2) அவர்கள் செயல்பாடுகளை அவர்களே விமர்சித்துக் கொண்டார்கள்.

இரண்டாவது வாக்கியம் மேலும் தெளிவானதாக இருப்பதால் ‘they themselves’ என்பது மேலும் பொருத்தமாக உள்ளது.

எனவே They themselves criticized their wrong deeds.

சிப்ஸ்

# Centre piece என்றால் என்ன?

ஏதோ ஒன்றின் மிக முக்கியமான அல்லது மிகக் கவர்ச்சியான பகுதி. (அது நட்டநடுவில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை). Taj Mahal forms centrepiece of Agra.

# Upfront என்றால் என்ன?

முன்னதாக. The fee must be paid up front. வெளிப்படையாக என்றும் அர்த்தம் உண்டு.

# பல விளம்பரங்களில் terms and conditions apply என்கிறார்கள். அதற்கு என்ன பொருள்?

Terms and conditions apply என்றால் வாங்கும்போது கையெழுத்திடப்படும் ஒப்பந்தத்தில் (அல்லது பொருளோடு அளிக்கப்படும் கையேட்டில்) உள்ள விவரங்கள்தான் முழுமையானவை; அவையே செல்லுபடியாகும் என்று பொருள்.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x