

‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்னும் குறள் எனக்குப் பிடித்தமான ஒன்று. எத்தனையோ கருத்துக்கள் நமக்குச் சரி என்று தோன்றினாலும் பிடித்திருந்தாலும் அவற்றை நடைமுறையில் பின்பற்றுகிறோமா என்பது ஐயம்தான்.
வழிநடத்தும் உள் உணர்வு
1999-ல் என்று நினைக்கிறேன். கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. தமிழ்த் துறைக்கு நான்தான் பொறுப்பு. அந்த வருடம் தமிழ்த் துறைத் தலைவராகவும் இருந்தேன். கல்லூரிப் பேரவைத் தேர்தல் தீவிரமாக இருந்த காலம் அது. மாணவர்கள் ஏதாவது பிரச்சினை செய்வார்கள், முதல்வர் அழைப்பார், அங்கே போய் நின்று பதில் சொல்ல வேண்டும், மாணவர்களைக் காப்பாற்றவும் வேண்டும்.
கற்பிப்பதில்தான் எனக்குப் பெரிய ஈடுபாடு. நிர்வாகத்தில் ஆர்வம் இல்லை. அதுவும் மாணவர்களைக் குற்றவாளியாகவே கருதி அணுகும் நிர்வாகத்தில் என் பங்கு என்ன என்னும் கேள்வி எனக்கு இருந்தது. ஆகவே மாணவர்களைச் சேர்க்கும்போதே பார்த்துச் சேர்த்துவிட்டால் பிரச்சினை வராதல்லவா? எப்படிப் பார்த்துச் சேர்ப்பது? அதற்கு எந்த வரையறையும் வைக்க முடியாது. உள்ளுணர்வு கொண்டுதான் செயல்பட வேண்டும்.
- ராசு
அடங்காதவன் என்று பொருள்!
ஒரு மாணவர் சேர்க்கைக்கு வந்தார். ஆளைப் பார்த்தேன். தமிழ்த் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் அடியாள் படையாக நடிப்பதற்கு என்றே சில முகங்களை வைத்திருப்பார்கள். நிறம் கருப்பாக இருக்க வேண்டும். முகம் கரடுமுரடாகத் தோன்ற வேண்டும். உடல் பலம் பொருந்தித் தெரிய வேண்டும். அந்த மாணவரைப் பார்க்க அப்படித்தான் இருந்தார். மேலும், தலை முடி பின்னால் கழுத்துக்குக் கீழே புரண்டிருந்தது. அப்போது ‘பங்க்’ என்று சொல்வார்கள் அந்த வகை முடி வளர்ப்பை. அப்படி முடி வைத்திருந்தால் அவன் அடங்காதவன் என்று பொருள்.
உயரம் மட்டும்தான் கொஞ்சம் குறைவு. எப்படியும் அந்த மாணவரின் தோற்றத்தைப் பார்த்ததும் ‘அடங்காதவன்’ என்று மனத்தில் தோன்றிவிட்டது. ஆனால் சேர்க்கைக்கான அட்டையோடு வந்திருக்கிறார். அட்டையைக் கேட்டேன். அறியாத மாணவர், தன்னிடமிருந்த இரண்டு அட்டைகளையும் என்னிடம் கொடுத்தார். தமிழ்த் துறைக்கு ஒன்று, வரலாற்றுத் துறைக்கு ஒன்று. இரண்டு துறையிலிருந்தும் அழைப்பைப் பெற்றிருந்தார் அவர்.
சொன்னதை ஏற்றார்
தமிழ்த் துறையில் சேர வரும் மாணவர்களையும் சேர்ந்த மாணவர்களையும் எப்படியாவது தக்க வைக்கும் முயற்சியில் இறங்குவதுதான் என் வழக்கம். சேர்ந்த பின் வேறு துறைகளுக்குச் செல்ல விரும்பும் பலரை என் தர்க்கப் பேச்சால் தமிழிலேயே நிலைக்கச் செய்திருக்கிறேன். ஆனால் அவரின் தோற்றம் எனக்கு உவப்பாக இல்லை. ஆகவே அவரை ‘வரலாற்றுத் துறையில் சேர்ந்துகொள்’ என்று சொன்னேன்.
கிராமத்து மாணவர்களுக்கு இந்தப் படிப்புத்தான் படிக்க வேண்டும் என்னும் தேர்வு இருக்காது, ஏதாவது கிடைத்ததில் சேர்வார்கள் அல்லது யாராவது ஆசிரியர் வழிகாட்டினால் அதை அப்படியே ஏற்பார்கள். அந்த மாணவரும் நான் சொன்னதை அப்படியே ஏற்று வரலாற்றுத் துறையில் சேர்ந்தார்.
என் எதிர்பார்ப்புக்கு மாறாக அந்த மாணவரின் நடத்தை இருந்தது. கல்லூரிக்கு வந்து என்னைத்தான் முதலில் சந்தித்ததாலோ என்னவோ தினமும் தமிழ்த் துறைக்கு வந்துவிடுவார். எங்கள் துறை ஆசிரியர்கள் எல்லாரோடும் பழகிவிட்டார். எங்களிடம் ஆசிரியர் என்னும் மரியாதையுடனும் நட்புடனும் பழகினார். அந்தச் சமயத்தில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகக் காசிமாரியப்பன் பொறுப்பு எடுத்திருந்தார். அவருடன் தமிழ்த் துறையே பணியாற்றியது.
பெரிய தவறு செய்துவிட்டேன்
கல்லூரியின் பரப்பளவு நூற்றியிருபது ஏக்கர். அதில் முடிந்தவரைக்கும் மரம் வளர்க்கலாம் என்று முடிவுசெய்தோம். முதல் கட்டமாக இரண்டாயிரம் மரக் கன்றுகள் நட்டோம். ஏராளமான மாணவர்கள் ஒத்துழைப்புக்கொடுத்தனர். அதில் அந்த மாணவருக்கும் முக்கியமான பங்களிப்பு இருந்தது. கன்றுகளைக் காப்பாற்றும் பணியில் அவரது ஈடுபாடு எங்களுடைதற்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல.
அடுத்த கல்வியாண்டில் ஆசிரியர்களாகிய நாங்கள் எல்லாம் அக்கல்லூரியில் இருந்து இடமாறுதல் பெற்று வெளியேற வேண்டிய சூழல் நேர்ந்தது. அப்போது மரக்கன்றுகள் பற்றியே எங்கள் கவலை இருந்தது. பொறுப்பான சிலரிடம் ஒப்படைத்து வந்தோம். அவர்களில் அந்த மாணவரும் ஒருவர்.
அவரைத் தமிழ்த் துறையில் சேர்த்து என் வழிகாட்டுதலில் வைத்திருந்திருக்க வேண்டும். அவரது உருவம் பற்றி எனக்குள் தோன்றிய ஒவ்வாமையின் காரணமாகப் பெரிய தவறு செய்துவிட்டேன் என்னும் குற்றவுணர்வு எனக்கு இன்று வரை இருக்கிறது. தமிழ்த் துறை மாணவர்களே பெரிதும் என்னுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள். பிற துறை மாணவர்கள் நினைவு வைத்திருப்பார்களே தவிரக் கல்லூரிக் காலத்தோடு பெரிதும் தொடர்பை அறுத்துவிடுவார்கள்.
பெரும் பாடம் கற்றேன்!
என் குற்றவுணர்வின் காரணமோ என்னவோ அந்த மாணவரோடு தொடர்பு தொடர்ந்தது. இளங்கலை முடிக்கும் தறுவாயிலேயே திருமணம் செய்துகொண்டார் அவர். கிராமத்து மாணவர்கள் பலரின் படிப்பும் நின்று போக இந்த இள வயதுத் திருமணம் முக்கியமான காரணம். அவர் குழந்தைக்கு ‘நச்செள்ளை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
இள வயதுத் திருமணம் என்பதால் தமிழ்ப் படித்திருந்தாலும் அவர் நிலை இதுவாகவே இருந்திருக்கும் என்று நான் சமாதானம் கொண்டேன். எனினும் ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தபோது பதிப்பக வேலை ஒன்றில் அவரைச் சேர்த்துவிட்டேன். அது ஒரு பரிகாரம் போலத்தான். பின் அவர் வரலாற்றில் முதுகலை, கல்வியியல் ஆகிய பட்டங்களையும் பெற்றுவிட்டார்.
எனினும் அவர் தோற்றத்தை வைத்து அன்றைக்கு நான் எடுத்த முடிவு எனக்குப் பெரும் பாடத்தைக் கற்பித்திருக்கிறது. இப்போது சூழலியல் பாதுகாப்பு தொடர்பான பணிகளை முன்னெடுக்கும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் அன்பான அந்த மாணவர் ஆத்தூர், தலைவாசல் அருகில் உள்ள வேப்பநத்தம் என்னும் ஊரைச் சேர்ந்த ராசு.
பெருமாள் முருகன்,எழுத்தாளர், தமிழ்ப் பேராசிரியர் தொடர்புக்கு: murugutcd@gmail.com