Published : 22 Apr 2017 10:06 AM
Last Updated : 22 Apr 2017 10:06 AM

லாரி பேக்கர்: கட்டிடங்களை நினைவுகூரும் படம்

லாரி பேக்கர் தன் வாழ்நாளில் 3,500 கட்டிடங்களைக் கட்டியுள்ளார். ஆனால் அவர் எதையுமே ஆவணப்படுத்தவில்லை. “நாங்கள் எல்லாம் இன்று ஒரு கட்டிடத்தைக் கட்டினால், அடுத்த ஆறு மாதங்கள் அதை வெவ்வேறு கோணங்களில் படம்பிடிப்பதையே வேலையாக வைத்திருப்போம். ஆனால் லாரி பேக்கரோ, புகழ்பெற்ற பல கட்டிடங்களைக் கட்டியும், புகழையோ, விளம்பரத்தையோ எதிர்பார்க்கவில்லை” என்கிறார் கவுதம் பாட்டியா.

அப்படி எந்த ஒரு ஆவணத்தையும் வைத்துக்கொள்ளாத பேக்கரைப் பற்றி, பேக்கரின் பேரன் வினித் ராதாகிருஷ்ணன் ‘அன்காமன் சென்ஸ்: தி லைஃப் அண்ட் ஒர்க் ஆஃப் லாரி பேக்கர் (Uncommon Sense: The Life and Architecture of Laurie Baker)’ எனும் தலைப்பில் சுமார் இரண்டு மணி நேர, ஆவணப் படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார்.

90 வயதான பேக்கர் இறந்துவிட்டார் என்னும் செய்தியைத் தாங்கி வந்த அன்றைய நாளிதழ்கள் திரையில் தோன்றுவதிலிருந்து தொடங்குகிறது படம். லாரி பேக்கரின் வாழ்க்கையினூடே அவரின் பணிகளையும் சொல்லிச் செல்கிறது கேமரா. சக கட்டிடக் கலைஞர்கள், பேக்கர் கட்டித் தந்த வீடுகளின் உரிமையாளர்கள், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரின் உரையாடல்களால் நிறைந்திருக்கிறது இந்த ஆவணப் படம்.

காந்தியத்தால் ஈர்க்கப்பட்ட பேக்கர், எப்போதும் கதர் ஆடைகளை அணியும் வழக்கம் கொண்டிருந்தார். அவர், எப்போதும் தன்னுடன் ஜோல்னா பை ஒன்றை வைத்திருந்தார். அதைத் தன் ‘மொபைல் ஆஃபிஸ்’ (நடமாடும் அலுவலகம்) என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவது வழக்கம். அந்தப் பைக்குள், தான் கட்டப்போகும் கட்டிடங்களுக்கான வரைபடங்கள், சில புத்தகங்கள் போன்றவை இருக்கும். தனது ஓய்வு நேரத்தில் கேலிச் சித்திரங்கள் வரைபவராகவும் இருந்தார் பேக்கர்.

அந்தக் கட்டிட வரைபடங்களும், கேலிச் சித்திரங்களும் இந்தப் படத்தில் இடம்பெறுகின்றன. அவைதான், இந்த மாபெரும் கலைஞர் விட்டுச் சென்றிருக்கும் ஆவணங்கள் என்பதை அறியும்போது, அவரின் எளிமை நம்மை வியக்க வைக்கிறது.

“நான் வெளிநாட்டில் கை நிறைய சம்பளத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். அப்போது, எனது தாத்தா கட்டிய கட்டிடங்கள் சிலவற்றை இடித்துவிட்டு, புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிந்தேன். பேக்கர், தன் படைப்புகள் எதையும் ஆவணப்படுத்தி வைப்பதில் கவனத்தைச் செலுத்தவில்லை. இந்நிலையில், அவரின் கட்டிடங்களும் அழிக்கப்பட்டுவிட்டால், அந்த மாபெரும் கலைஞனின் சிந்தனைகள் இந்த உலகத்துக்குத் தெரியாமல் போய்விடுமே என்ற அச்சத்தில், எனது வேலையை விட்டுவிட்டு அவரைப் பற்றிய ஆவணப்படம் எடுக்கத் தயாரானேன். இந்தப் படம் எடுக்கச் சுமார் நான்கு ஆண்டுகள் ஆயின. இன்று இந்தப் படம், பல நாடுகளில் திரையிடப்பட்டு வருகிறது” என்கிறார் வினித் ராதாகிருஷ்ணன்.

இந்த ஆண்டு பேக்கர் பிறந்த நூறாவது ஆண்டு. இந்த ஏப்ரல் 1-ம் தேதியுடன், பேக்கர் இறந்து பத்தாண்டுகள் ஆகின்றன. இந்தத் தருணத்தில் அவரை நினைவுகூரும் விதத்தில் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில், கட்டிடக் கலைத் துறையின் சார்பாக, இந்தப் படம் திரையிடப்பட்டது.

பேக்கருக்கு அவரது பணிகளால், தேசிய, சர்வதேச அளவில் விருதுகள், அங்கீகாரங்கள் கிடைத்திருந்தாலும் அவை எதுவும் அவரைச் சந்தோஷப்படுத்தவில்லை. அவர் விரும்பிய ஒரே அங்கீகாரம் அவருக்கு 70 வயதில்தான் கிடைத்தது. அது, இந்தியக் குடியுரிமை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x