Published : 04 Feb 2014 06:36 PM
Last Updated : 04 Feb 2014 06:36 PM

மார்பகப் புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிப்பு: குழந்தைப் பேறு தள்ளிப்போடுவதே முக்கிய காரணம்

மார்பகப் புற்றுநோயால் பெண்கள் அதிகம் அளவில் பாதிக்கப்படுகின்றனர். காலதாமதமாக திருமணம் செய்வது, குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன என்று புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் அலெக்ஸ் பிரசாத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் சென்னையில் திங்கள்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவே, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் புற்றுநோய் பற்றிய தவறான எண்ணத்தை மாற்றுவதே இந்த ஆண்டின் கருப்பொருளாகும். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்திவிடலாம்.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். இவர்களில் 4 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 5.5 லட்சம் பேர் பெண்கள், 4.5 லட்சம் பேர் ஆண்களாகும். பாதிக்கப்பட்டவர்களில் 5 முதல் 6 லட்சம் பேர் இறக்கின்றனர். புற்றுநோயால் குறிப்பாக மார்பகப் புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு வாழ்க்கை முறை மாற்றமே முக்கிய காரணம்.

காலதாமதமாக திருமணம் செய்வது, திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது போன்றவை இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மார்பகப் பகுதியில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால், பெண்கள் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

இதே போல ஆண்கள் தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு புகைப் பிடிப்பதே முக்கிய காரணமாக உள்ளது. தொண்டை புற்றுநோய் வருவதற்கு முன்பு குரலில் மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x