Published : 20 Nov 2013 00:00 am

Updated : 06 Jun 2017 14:53 pm

 

Published : 20 Nov 2013 12:00 AM
Last Updated : 06 Jun 2017 02:53 PM

மட்டில்டா நிகழ்த்திய அற்புதங்கள்

மட்டில்டா, அஞ்சு வயசு சிறுமிதான். ஆனால் அவள் வித்தியாசமானவள். அந்த வயசிலேயே வார்த்தைகளை உச்சரிக்க, படிக்க, கணக்கு போடவெல்லாம் அவளுக்குத் தெரிந்திருந்தது. அது மட்டுமில்லை. அவ்வளவு சின்ன வயசிலேயே ஹெமிங்வே, சார்லஸ் டிக்கன்ஸ் போன்றவர்கள் எழுதிய கதைப் புத்தகங்களை படித்திருந்தாள். அத்துடன் அவளுக்கு வித்தியாசமான ஒரு திறமையும் இருந்தது. அது என்னவென்று பின்னால் பார்ப்போம்.

ஆனால், அவளது பெற்றோர்களுக்கோ இதைப் பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லை. அவளது ஸ்கூல் டீச்சர் ஹனிதான், மட்டில்டாவின் திறமைகளை நன்கு புரிந்துகொண்டார். இதைப் பற்றி அவர்களது ஸ்கூலின் ஹெட்மிஸ்ட்ரஸ் டிரெஞ்ச்புல்லிடம் சொல்லி, மட்டில்டாவின் திறமைகளைப் பட்டை தீட்ட வேண்டும் என்று ஹனி நினைத்தார். ஆனால் டிரெஞ்ச்புல்லோ, இதற்கு நேரெதிரான அம்மணி.


சாதாரணமாக தலைமையாசிரி யர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்? மாணவர்களின் விருப்பங்கள், ஆர்வங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பார்கள். கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், டிரெஞ்ச்புல்லுக்கு இந்த குணங்களில் ஒன்றுகூட இல்லை. மட்டில்டாவின் ஸ்கூலில் ஒரு நாள் நடந்த சம்பவத்தைப் பார்ப்போம்.

"ஒரு விஷயம் மட்டும் எனக்குப் புரியவேயில்லை. ஏன் இந்த பிசாசுங்க இப்படி உயிரை வாங்குதுங்க? இந்தக் குழந்தைகளைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை. இதுங்களோட கெடந்து மாரடிக்கணும்னு என் தலையெழுத்து. ஸ்பிரே அடிச்சு ஈயை விரட்டுற மாதிரி, இதுங்களையெல்லாம் துரத்திடணும்" என்று மட்டில்டாவின் கிளாஸில் உட்கார்ந்து பேசிக்கொண்டே போனார் மிஸ் டிரெஞ்ச்புல்.

அந்த கிளாஸ் டீச்சர் ஹனியும், மாணவ, மாணவிகளும் அசௌகரியத்தில் நெளிந்து கொண்டிருக்க, டிரெஞ்ச்புல்லோ பேசுவதை நிறுத்தவேயில்லை. "நிஜமாத்தான் சொல்றேன். அது என்னோட கனவு. ஒரு ஸ்கூல், அதுல குழந்தைகளே இருக்க மாட்டாங்க..." என்று சொல்லிக்கொண்டே வாட்டர் ஜக்கை எடுத்து டம்ளரில் தண்ணியை ஊற்றினார். அப்போது தண்ணியுடன் சேர்ந்து ஒரு ஜந்துவும் டம்ளருக்குள் குதித்தது. இதைப் பார்த்த டிரெஞ்ச்புல் அலறியடித்து எழுந்தார். "அது தவளை, அது தேரை" என்று மாணவ, மாணவிகளும் கத்தினார்கள். அந்த ஜந்து தண்ணீரில் நீச்சலடித்துக் கொண்டிருந்தது.

டிரெஞ்ச்புல்லுக்கு கோபம் தலைக்கேறியது. யாரோ திட்டம் போட்டு இப்படிச் செய்திருக்கிறார்கள். அவரது கர்வத்தை அந்த ஜந்து ஒரே நொடியில் அடித்து நொறுக்கிவிட்டது. சேரில் அமைதியாக உட்கார்ந்தார் டிரெஞ்ச்புல். "மட்டில்டா எழுந்திரு"

"நான் என்ன செஞ்சேன்? நான் எதுவும் பண்ணலை. நான் அதை பார்த்ததுகூட இல்லை" என்று கூறிக்கொண்டே எழுந்து நின்றாள். தவளையை ஜக்குக்குள் போட்ட அவளது தோழி லாவண்டருக்கு குற்ற உணர்வாக இருந்தது. தான் செய்த காரியத்தால் மட்டில்டா இப்படி மாட்டிக்கொண்டாளே என்று அவள் வருத்தப்பட்டாள்.

கோபத்தில் டிரெஞ்ச்புல்லின் கண்கள் சிவந்தன. மட்டில்டாவும் கோபமாகவே இருந்தாள். ஏனென்றால், தவளை ஜக்குக்குள் வந்ததற்கு அவள் காரணமில்லையே. "நான் இதைச் செய்யலை மிஸ்."

"யாராலயும் இந்த மாதிரி பண்ண முடியாது. உன் கதை முடிஞ்சுது. சூரிய வெளிச்சம்கூட வராத இருட்டு ரூம்ல உன்னை அடைச்சு வைக்கிறேன். ஒரு ஹெட்மிஸ்ட்ரஸ் குடிக்கும் தண்ணில தவளைய போட்டிருக்கே. இவ்வளவு பெரிய கிரிமினல் வேலைய செஞ்சுட்டு, ஒத்துக்க மாட்டேங்கற. நீ பேசக்கூடாது. உட்காரு"

மட்டில்டா மெதுவாக உட்கார்ந்தாள். என்ன ஒரு அராஜகம். தான் செய்யாத குற்றத்தைச் செய்ததாக, ஹெட் மிஸ்ட்ரஸ் அபாண்டமா பழி போடுறாரே.

மட்டில்டாவுக்கு கோபம் அதிகரித்தது. தலையே வெடித்துவிடும் போலிருந்தது. மட்டில்டா வெறுப்புடன் டிரெஞ்ச்புல்லைப் பார்த்தாள். நேராக ஹெட்மிஸ்ட்ரஸ் பக்கத்தில் போய், அந்த டம்ளர் தண்ணியை தலையில் கவிழ்த்துவிட வேண்டும் என்று நினைத்தாள். ஆனால், அதற்குப் பிறகு நடக்கும் விஷயங்களை நினைத்து பேசாமல் இருந்தாள்.

பிறகு மட்டில்டா வைத்த கண் வாங்காமல், அந்த கண்ணாடி டம்ளரையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு அசாதாரண உணர்வு அவளைச் சூழ்ந்தது. அவள் கண்கள் ஒளிர ஆரம்பித்தன. கண்கள் தீப்பிழம்பு போல் மாறியிருந்தன. ஏதோ ஒரு விநோத உணர்வு போலிருந்தது. டம்ளரில் பதித்த கண்களை அவள் எடுக்கவே இல்லை. உன்னிப்பாக அதைப் பார்க்கப்பார்க்க, கண்களில் ஓர் அற்புத ஆற்றல் உருவானது.

மட்டில்டா வாய்க்குள் மெதுவாக முணுமுணுத்தாள் "நகரு".

டம்ளர் லேசாக அசைந்து கொடுத்தது போலிருந்தது. "நகரு, நல்லா நகரு" மட்டில்டா மீண்டும் முணுமுணுத்தாள். மறுபடியும் டம்ளர் அசைந்தது. இந்த முறை அவள் சக்தியை வலிமையாகப் பயன்படுத்தினாள். டம்ளர் மெதுவாக நகர்ந்து நகர்ந்து டேபிளின் நுனிக்கு வந்துவிட்டது. பிறகு அப்படியே கவிழ்ந்தது. அதிலிருந்த தண்ணியும், தவளையும் உட்கார்ந்திருந்த டிரெஞ்ச்புல் மேல் விழுந்தன.

இரண்டாவது முறையாக சேரிலிருந்து அலறியபடி எழுந்தார் டிரெஞ்ச்புல். அந்தத் தவளை அவருடைய உடையில் ஒட்டிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு டிரெஞ்ச்புல் ‘வீல் வீல்’ என்று அலறினார். கடைசியாக தவளையைத் தூக்கி எறிந்தார். அது லாவெண்டர் பக்கத்தில் விழ, இந்தக் களேபரத்தில் யாரும் அதைப் பார்ப்பதற்கு முன்னால் தன் பென்சில் டப்பாவில் எடுத்து போட்டுக்கொண்டாள்.

டிரெஞ்ச்புல்லோ "யார் அதை செஞ்சது? எழுந்து உண்மையை ஒத்துக்குங்க. யார் டம்ளரை என் மேலே தள்ளிவிட்டது?" என்று உறுமினார். யாரும் பதில் சொல்லவில்லை. வகுப்பறையில் அமைதி நிலவியது.

"மட்டில்டா நீதான். நீதான் இந்தக் காரியத்தைச் செஞ்சிருக்கே."

மட்டில்டா ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். அவள் அமைதியாக இருந்தாள், அவள் மனது கம்பீரமாக உயர்ந்து நின்றது. இனிமேல் தனக்கு எதிரான எதையும் மோதி மிதித்துவிட முடியும். யாரும் அவளை பயமுறுத்த முடியாது என்று அவள் மனதுக்குள் தோன்றியது.

"கிளாஸ் ஆரம்பிச்சதுலேர்ந்து நான் என் டெஸ்க்கைவிட்டு எங்கேயும் நகரலை" என்றாள்.

உடனே அவளுக்கு ஆதரவாக கிளாஸ் மொத்தமும் "அவள் நகரலை. நீங்களேதான் தட்டிவிட்டுக்கிட்டீங்க" என்று கோரஸ் பாடியது. வகுப்பு ஆசிரியை மிஸ் ஹனியும் "நீங்களேதான் தட்டிவிட்டிருப்பீங்க மிஸ் டிரெஞ்ச்புல். இது சாதாரணமா எல்லோருக்கும் நடக்கிறதுதானே" என்றார்.

"குட்டிப் பிசாசுகளா" என்று திட்டிக்கொண்டே, வேகமாக நடந்து கிளாஸைவிட்டு வெளியேறினார் டிரெஞ்ச்புல்.குழந்தைகளுக்குப் பிரியமானவர்

மட்டில்டா என்ற இந்த புகழ்பெற்ற கதையை எழுதியவர் குழந்தைகளுக்கான ஆங்கில எழுத்தாளர் ரோல் தால் (Roald dahl).

அவருடைய கதைகள் சுவாரசியமாகவும் திடீர் திருப்பங்களையும் அதிக அளவில் கொண்டிருக்கும். குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றி, குழந்தைகளின் பார்வையில் விவரிப்பதாக அவரது பெரும்பாலான கதைகள் அமைந்திருக்கின்றன. அவரது மொழிநடை, குழந்தைகள் கஷ்டப்படாமல் புரிந்துகொள்வது போல எளிமையாக இருக்கும்.

பிரிட்டன் வேல்ஸ் பகுதியில் உள்ள லாண்டாப் பகுதியில் பிறந்த அவர் பக்கிங்ஹாம்ஷையர் கிராமத்தில் வாழ்ந்தார். அங்கே அவரது பெயரில் ஓர் அருங்காட்சியகமும் ஓர் அறக்கட்டளையும் உள்ளன. ஷெல் எண்ணெய் நிறுவனத்தின் கிழக்கு ஆப்பிரிக்கப் பிரதிநிதியாகவும், இரண்டாம் உலகப் போரில் விமானியாகவும் இருந்தவர் ரோல் தால். இவர் எழுதிய குழந்தை நாவல்களில் மட்டில்டா, சார்லியும் சாக்லேட் ஃபேக்டரியும், தி பி.எப்.ஜி. ஆகியவை குறிப்பிடத்தக்கவை.நன்றி: மட்டில்டா, தமிழில்: பாஸ்கர் சக்தி


மட்டில்டாகுழந்தைகள்கதைமாயாபஜார்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x