Published : 09 Apr 2017 08:30 AM
Last Updated : 09 Apr 2017 08:30 AM

ஒரு நூலகர்: போரில் புத்தகம் காத்த பாஸ்ரா நூலகர்

போர் நடந்துகொண்டிருக்கும் போது பொதுவாக ஒருவர் என்ன செய்வார்? தன் உயிரையும் தன் ரத்த உறவுகளின் உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு உயிர் பிழைக்கத் தப்பி ஓடுவார். ஆனால், 2003-ல் ஈராக்கில் போர் நடைபெற்றபோது, தான் 15 ஆண்டு காலம் நேசித்த புத்தகங்களைப் பாதுகாக்க உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தார் ஒரு பெண். அவரது நூலகத்தில் இருந்த புத்தகங்கள் வெடிகுண்டுகளுக்கு இரையானபோது, அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இது கதையல்ல, நிஜம்.

சதாம் உசேனுக்காகப் புகழ்பெற்ற ஈராக் நாட்டின் பாஸ்ரா நகரத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்தது. அந்தப் பெண் பாஸ்ரா மைய நூலத்தின் தலைமை நூலகர் ஆலியா முகமது பேகர்.

நூலகம் ஏற்படுத்திய தாக்கம்

உலகின் பண்டைய நதிக்கரை நாகரிகங்களில் ஒன்றான மெசபடோமிய நாகரிகம் தழைத்த, பல்வேறு வகைகளில் வளர்ச்சியடைந்த நெடிய வரலாற்றைக் கொண்டது ஈராக். கடந்த நூற்றாண்டின் இறுதியில் கச்சா எண்ணெய் அரசியலில் சிக்கி அந்த நாடு வீழ்ந்தது. ‘பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறது’ என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில், ஜார்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு, சதாம் உசேன் ஆட்சிக்கு எதிராகப் போர் தொடுத்தது.

பாஸ்ரா, ஈராக் நாட்டில் ஒரு துறைமுக நகரம். அந்த ஊரின் மைய நூலகத்தில்தான் ஆலியா முகமது பேகர் பணிபுரிந்துவந்தார். பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள், வாசகர்கள் ஆகியோர் தினசரி தேடி வரும் இடமாக அந்த நூலகம் இருந்தது. அவர்களது வாழ்க்கையில் வாசிப்பு பெரும் தாக்கம் செலுத்திக்கொண்டிருந்தது. ஆனால், 2003-ம் ஆண்டு ஈராக்கில் அமெரிக்கா போர் தொடுக்க ஆரம்பித்த பிறகு, பாஸ்ரா நகரமும் தன் இயல்பை இழந்தது.

துப்பாக்கிச் சூடும் வெடிகுண்டுச் சத்தமும் ஈராக் மக்கள் வாடிக்கையாகக் கேட்கும், தினசரி எதிர்கொள்ளும் அம்சங்களாக மாறின. ஈராக்கின் ஒவ்வொரு நகரமாக அமெரிக்கக் கூட்டுப் படைகள் தாக்குதல் தொடுத்தன. 2003 ஏப்ரல் மாதம் பிரிட்டிஷ் படைகள் பாஸ்ரா நகருக்குள் நுழைந்தன.

ஆளுநரின் மறுப்பு

போர் ஆரம்பித்த உடனேயே பாஸ்ரா மைய நூலகத்தை, அந்த நகரத்தின் ஆளுநர் தன்னுடைய தலைமையகமாக மாற்றிக்கொண்டார். அந்தக் கட்டிடத்துக்கு ஆயுதப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. நூலகத்தின் மேற்கூரையில் துப்பாக்கிகளுடன் படை வீரர்கள் காவல் காத்தனர். அது தாக்கப்படும் ஆபத்து அதிகம் இருந்தது.

போர் தாக்குதல் தன் நூலகத்தையும் புத்தகங்களையும் அழித்துவிடுமோ என்ற அச்சம், ஆலியாவின் மனதைத் துளைத்தது. புத்தகங்களைப் போருக்கு இரையாகக் கொடுக்க அவர் விரும்பவில்லை. அவற்றை அவர் பெரிதும் மதித்தார். பல மொழிகளைச் சேர்ந்த பழமையான புத்தகங்கள் அந்த நூலகத்தில் பாதுகாக்கப் பட்டிருந்தன. பாரசீகம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானியம், கிரேக்கம், லத்தீன் மற்றும் பல தலைமுறைகளாகப் பாதுகாக்கப்பட்ட பல்வேறு நாடுகளின் பழமையான புத்தகங்கள் அங்கே இருந்தன.

இவை அனைத்தையும் பாதுகாக்க வேண்டுமென ஆலியா நினைத்தார். புத்தகங்களை வேறு பாதுகாப்பான பகுதிக்கு மாற்றிக்கொள்ள அனுமதிக்குமாறு ஆளுநரிடம் ஆலியா கேட்டார். ஆனால், ஆளுநர் அனுமதிக்கவில்லை.

அதனால் புத்தகங்களைப் பாதுகாக்கும் பணியை ஆலியா, தானாகவே எடுத்துக்கொண்டார். ரகசியமாகப் புத்தகங்களை ஒரு பையில் நிரப்பி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு புத்தகங்களைத் தினசரி தன்னுடைய காரில் வைத்து வீட்டுக்கு எடுத்துச் சென்றார். மிகவும் முக்கியமான புத்தகங்களை முதலில் எடுத்துச் செல்ல ஆரம்பித்தார்.

கைகொடுத்த உணவகர்

போர் நெருங்கிக்கொண்டு இருந் தது. போர் விமானங்களின் சத்தம் மிக அருகில் கேட்டது. வெடிகுண்டுகள் வீசப்பட்டன. பாஸ்ரா நகரம் எரியத் தொடங்கியது. எல்லோரும் நூலகத்தை விட்டு வெளியேறினர், அரசுப் படைகளும் வெளியேறின. அன்று இரவு பிரிட்டிஷ் படைகள் நூலகத்தைத் தாக்கலாம் என்று ஆலியாவுக்குத் தகவல் கிடைத்தது. இனிமேல் வேறு வழியில்லை. இரவோடு இரவாகப் புத்தகங்கள் அனைத்தையும் வேறு இடத்துக்கு மாற்றியாக வேண்டும்.

நூலகத்துக்கு அடுத்ததாக ‘ஹம்தான்’ என்ற உணவகத்தை நடத்திவந்த அனிஸ் முகமதுவிடம் புத்தகங்களைப் பாதுகாக்க ஆலியா உதவி கோரினார். நூலகத்துக்கும் அனிஸின் உணவகத்துக்கும் இடையே ஏழு அடி உயரத் தடுப்புச் சுவர் இருந்தது. அதைத் தாண்டிப் புத்தகங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அனிஸ், அவருடைய தம்பி, அன்றைக்கு அப்பகுதியில் இருந்த வேறு சில நண்பர்கள் சேர்ந்து திரைச்சீலைகள், சாக்குப் பைகள் எனக் கிடைத்த பொருட்களைக் கொண்டு உணவகக் கிடங்குக்கு புத்தகங்களைக் கொண்டுபோய் சேர்த்தனர்.

இரவோடு இரவாக நூலகத்தில் இருந்து 30,000 புத்தகங்கள் இடம் மாற்றப்பட்டன. அதற்கு மேல் புத்தகங்களை வைக்க இடமோ, நேரமோ இல்லை. அவர்கள் காப்பாற்றிய புத்தகங்களில் கி.பி.1300-ல் எழுதப்பட்ட முகமது நபியின் சரிதை, 700 ஆண்டுகள் பழமையான ஸ்பானிய மொழி குரான் மொழிபெயர்ப்பு, அரிதான கையெழுத்துப் பிரதிகள், ஆங்கில, அரபி மொழிப் புத்தகங்கள் உள்ளிட்டவை அடக்கம்.

கிடைத்தது புத்துயிர்

போர் தீவிரமடைந்தது. பிரிட்டிஷ் படைகள் பாஸ்ராவில் காலடி எடுத்து வைத்த ஒன்பது நாட்களுக்குள் ஆலியாவின் நூலகமும் தாக்கப் பட்டது. நூலகம் முழுமையாக எரிந்துபோனது. அங்கே எஞ்சியிருந்த 50,000 புத்தகங்கள் எரிந்து நாசமாகிவிட்டன. முன்னதாக நகர ஆளுநர் நூலகத்தில் தஞ்சமடைந்திருந்ததே, பாஸ்ரா மைய நூலகம் தாக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம்.

நூலகம் எரிக்கப்பட்டதால் கடும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்த ஆலியா, பல மணி நேரத்துக்கு அழுதார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு அவர் குணமடைந்த நேரத்தில், பாஸ்ராவில் போர் ஓயந்திருந்தது. உணவகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த 30,000 புத்தகங்களையும் நூலக ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று பாதுகாத்தனர். ஆலியாவின் வீடெங்கும் புத்தகங்கள் குவிந்து கிடந்தன.

போர் முடியும்வரை அவர் காத்தி ருந்தார். புதிய நூலகத்தைத் தொடங்கு வது தொடர்பாக அவர் கனவு கண்டார். போர் முழுமையாக ஓய்ந்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு பாஸ்ரா மைய நூலகம் மீண்டும் செயல்பட ஆரம்பித்தது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு 2004 அக்டோபர் 1-ம் தேதி நூலகம் மீண்டும் திறக்கப்பட்டது. ஆலியா மீண்டும் தலைமை நூலகராக நியமிக்கப்பட்டார்.

ஆலியா உள்ளிட்ட நூலக ஊழியர்கள் தங்கள் வீடுகளிலிருந்து நூலகத்துக்குப் புத்தகங்களைக் கொண்டுவந்து சேர்த்தார்கள். பல வெளிநாட்டு நூலகங்கள் புத்தகங்களை நன்கொடையாக வழங்கின. குழந்தைகளும்கூடப் புத்தகங்களை நன்கொடையாக அளித்தார்கள், அதை வைத்து குழந்தைகளுக்கான தனிப் பிரிவு தொடங்கப்பட்டது.

பாஸ்ராவின் நூலகர்

இப்போதும்கூடப் புத்தகங்களுக்கும் நூலகக் கருவிகளுக்கும் பற்றாக்குறை நிலவுவதாக ஆலியா பேகர் தெரிவித்தாலும், இளைஞர்களும் குழந்தைகளும் பாஸ்ரா மைய நூலகத்தை மீண்டும் உற்சாகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஆலியாவின் புதிய நூலகம் பாஸ்ரா மக்களுக்கு அறிவுக் களஞ்சியமாகத் திகழ்கிறது.

உலகில் சமாதானம் நிலவுவதற்குக் கல்வியும் அறிவுப் பரவலும் மிகவும் முக்கியம் என்று ஆலியா நம்புகிறார். ஈராக்கின் எதிர்காலக் குழந்தைகளுக்குக் கல்வி, வாசிப்பின் முக்கியத்துவத்தை தன் நூலகத்தால் உறுதிப்படுத்த முடியும் என்று அவர் நினைக்கிறார். அதன் காரணமாகவே உயிருக்கு ஆபத்து விளைவித்த போருக்கு இடையிலும் மக்களின் அறிவுச் செல்வத்தை ஆலியா பாதுகாத்தார். தற்போது ஈராக் நாட்டு பண்பாட்டு அடையாளங்களில் ஒருவராக மதிக்கப்படும் ஆலியா, ‘பாஸ்ராவின் நூலகர்’ என்று அழைக்கப்படுவதையே பெருமையாகக் கருதுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x