கேள்வி மூலை 32: உலகின் மிக வெப்பமான ஆண்டு 2017?

கேள்வி மூலை 32: உலகின் மிக வெப்பமான ஆண்டு 2017?
Updated on
1 min read

வெப்பநிலைப் பதிவுகளின்படி வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டு 2016. இந்த ஆண்டு (2017) அந்தச் சாதனையை முறியடித்துவிடுவதற்கான எல்லாச் சாத்தியங்களும் இருக்கின்றன. ஏனென்றால், தமிழகத்திலேயே அதிகமாக 114 (45 டிகிரி செல்சியஸ்) டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் திருத்தணியில் இந்தக் கோடையில் பதிவாகியிருக்கிறதே! தார் பாலைவனத்தில் இந்த வெப்பநிலை மிகச் சாதாரணம்.

கடந்த மூன்று ஆண்டுகளும் ‘வரலாற்றிலேயே வெப்பமான ஆண்டு’ என்ற மோசமான சாதனையை அடுத்தடுத்து முறியடித்துவருகின்றன. உலகில் இதுவரை பதிவான 17 மிகவும் வெப்பமான ஆண்டுகளில் 16 ஆண்டுகள் 2000-க்குப் பிறகு வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ம் ஆண்டு வெப்பநிலை அதிகரித்து இருந்ததற்கான முக்கியக் காரணம், பசிஃபிக் பெருங்கடலில் ‘எல் நினோ விளைவு’ அந்த ஆண்டு ஏற்பட்டதே. எல் நினோ விளைவு பெரும் வெப்ப எழுச்சியை வளி மண்டலத்துக்குள் அனுப்புகிறது. இந்த விளைவு இரண்டு அல்லது ஏழு ஆண்டுகள் இடைவெளியில் நிகழ்கிறது.

வெப்பநிலை பதிவு

19-ம் நூற்றாண்டில்தான் பூமியில் வெப்பநிலையைப் பதிவு செய்யும் முறை உருவானது. இப்படிப் பதிவு செய்யப்பட்டதில் 1980-களுக்குப் பிறகு உலகின் வெப்பநிலை தாறுமாறாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

நாசாவும், அமெரிக்க தேசியக் கடல், வளி மண்டல நிர்வாக அமைப்பும் (NOAA) உலக வெப்பநிலை சார்ந்த வரலாற்றுப் பதிவுகளை மேற்கொள்கின்றன. வானிலை மையங்கள், கப்பல்கள், கடல் மிதவைகள் மூலம் ஆயிரக்கணக்கான ஆதாரங்களிலிருந்து உலக வெப்பநிலை தொகுக்கப்படுகிறது.

அண்டார்ட்டிகா, ஆர்க்டிக் போன்ற துருவப் பகுதி வெப்பநிலைகளைப் பதிவு செய்வதில் நாசாவின் வசதிகள் மேம்பட்டவை. 2016-ம் ஆண்டில் உலகின் கடல் பனிப்பாறைகள் வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலைக்குச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறைய வாய்ப்பில்லை

“மனிதச் செயல்பாடுகளால் பருவநிலை மாற்றம் தூண்டப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம். இன்றைய வெப்பநிலை அதிகரிப்புக்கு 75 சதவீதம் மனிதச் செயல்பாடுகளே காரணம்,” என்கிறார் பென்சில்வேனியா மாகாணப் பல்கலைக்கழகத்தின் பருவநிலை ஆராய்ச்சியாளர் மைக்கேல் மான்.

எதிர்காலத்திலும் பூமியின் வெப்பநிலை குறைய வாய்ப்பில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். எல்லாப் பகுதிகளுமே சஹாரா பாலைவனமாகிவிடுமோ என்பதை நினைத்தால் பயங்கரமாகத்தான் இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in