Last Updated : 14 Apr, 2017 12:35 PM

 

Published : 14 Apr 2017 12:35 PM
Last Updated : 14 Apr 2017 12:35 PM

குதித்த பின் பறவையானேன்..!

ரிஷிகேஷ்! இமய‌மலைத் தொடர்கள், கோயில்கள், வளைந்து நெளியும் கங்கை நதி, அந்த நதியில் பக்தர்கள் செய்யும் ஆரத்தி, புனித நீராடல்... இந்த நகரத்தின் பெயரைச் சொன்ன உடனே, பலரின் மனதில் தோன்றும் காட்சிகள் இவைதான்.

‘யோகாவின் தலைநகரம்’ என்று போற்றப்படும் இந்த நகரம், ஹரித்துவார் நகரத்துடன் சேர்ந்து, ‘இந்தியாவின் முதல் இரட்டை பாரம்பரிய நகரங்கள்’ என்று கருதப்படுகிறது. புராதனக் கோயில்கள் நிறைந்து, அசைவ உணவு மற்றும் மதுபானங்கள் தடைசெய்யப்பட்ட இந்த நகரம், ஆன்மிகத் தலமாக மட்டுமே இவ்வளவு காலம் பார்க்கப்பட்டு வந்தது.

ஆனால் இப்போது ரிஷிகேஷ், சாகச விளையாட்டுக்களுக்கான இடம். கங்கை நதியில் ‘ஒயிட் ரிவர் ராஃப்ட்டிங்’ எனும் படகுச் சவாரி மிகவும் பிரசித்தி பெற்றது. தவிர, சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட பங்கீ ஜம்பிங், இந்த இடத்துக்குக் கூடுதல் அடையாளத்தை வழங்கிவருகிறது. இந்தியாவின் உயரமான பங்கீ ஜம்பிங் மேடை ரிஷிகேஷில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அங்கு சென்ற நான், பங்கீ ஜம்பிங்கும் மேற்கொண்டேன். மேலே இருந்து கீழே குதிக்கும்போது, வாழ்வின் பல உன்னதங்களை அறிந்துகொள்ள முடிந்தது.

சண்டையில் பிறந்த சாகசம்

பங்கீ ஜூம்பிங்கின் வரலாறு மிகவும் சுவாரசியமானது. பசிபிக் பெருங்கடலைச் சார்ந்த ஒரு தீவு, வேனுவாட்டு. நெடுங்காலத்துக்கு முன்பு அந்தத் தீவில் ஒரு தம்பதியினர் வாழ்ந்துவந்தனர். கணவன் செய்த சித்திரவதை தாளாமல் மனைவி, அங்கு உள்ள மிகப் பெரிய ஆலமரத்தின் மீது ஏறினாள். அங்கிருந்து, கீழே வர முடியாது என்று கூறினாள்.

இதனால் ஆத்திரமடைந்த கணவனோ அவளைப் பின் தொடர்ந்து மரத்தின் மேல் ஏறினான். அவனிடமிருந்து தப்பிக்க, காலில் கெட்டியான காட்டுக் கொடிகளைக் கட்டிக்கொண்டு குதித்தாள் மனைவி. ஆனால் அவசரப்பட்ட கணவனோ, அது தெரியாமல் அப்படியே கீழே குதித்து மாண்டான். அப்படி வந்ததுதான் பங்கீ ஜம்பிங் என்று ஒரு கதை மரபு உண்டு.

இன்னொரு கதை, வேறு மாதிரியாக இருக்கிறது. அந்தத் தீவில் நெடுங்காலமாக, அறுவடைக் காலத்தின்போது, `லேண்ட் டைவிங்' எனும் விளையாட்டு பின்பற்றப்பட்டு வந்தது. அந்த விளையாட்டைப் பழங்குடிகள் 'நகோல்' என்று அழைக்கின்றனர். மரப் பலகையின் மீதேறி, கால்களில் கொடிகளைக் கட்டிக்கொண்டு சுமார் 30 மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதிக்கும் இந்த விளையாட்டுதான் பின்னாளில், பங்கீ ஜம்பிங் ஆக மாறியது என்று சிலர் கருதுகின்றனர்.

ஆரம்பத்தில் ஒரு ஆண் மகனின் துணிவையும் ஆண்மையையும் எடுத்துக்காட்டும் நிகழ்வாக இருந்த இந்த விளையாட்டில், சமீப காலமாகப் பெண்களும் அதிக அளவில் கலந்துகொள்கின்றனர்.

நவீன பங்கீ ஜம்பிங்

எழுபதுகளில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள 'டேஞ்சரஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்' பல தீவிர விளையாட்டுகளில் முன்னோடியாக இருந்தது. அவர்கள் பங்கீ ஜம்பிங் செய்வதைப் பார்த்து ஆச்சரியமடைந்த‌ நியூஸிலாந்தைச் சேர்ந்த ஹேக்கெட் என்பவர், தன் நண்பர் ஹென்றி வான் ஆஷ் என்பவருடன் இணைந்து, `லாடெக்ஸ்' ரப்பர் வடங்களை வைத்து பங்கீ ஜம்பிங்குக்கான கயிற்றை உருவாக்கினர்.

பிறகு அந்தக் கயிற்றைத் தங்கள் கால்களில் கட்டிக்கொண்டு, ஈபிள் டவர் போன்ற உயரமான கட்டிடங்கள் மற்றும் உயரமான இடங்களிலிருந்து கீழே குதித்து பங்கீ ஜம்பிங்கைப் பிரபலப்படுத்தினர். பின்னர், 43 மீட்டர் உயர கவராவ் பாலத்தில் உலகில் முதன்முறையாக வணிக ரீதியிலான பங்கீ ஜம்பிங்கை அறிமுகப்படுத்தினர். இப்படியான தொடக்கம் கொண்ட பங்கீ ஜம்பிங் இன்று இந்தியாவிலும் நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது.

குதிப்பது நம் ‘காலில்’...

ரிஷிகேஷில் 83 மீட்டர் (சுமார் 20 அடுக்கு மாடிக்குச் சமமான) உயரத்தில் பங்கீ ஜம்பிங் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இது, ரிஷிகேஷிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோகன்செட்டி என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. இங்கு பங்கீ ஜம்பிங், பறக்கும் ஊஞ்சல், ஃப்ளையிங் ஃபாக்ஸ் என 3 விதமான விளையாட்டுக்கள் உள்ளன‌.

இந்த விளையாட்டில் நாம் கலந்துகொள்வதற்குச் சில‌ வரையறைகள் உள்ளன‌. 12 வயதிற்கு மேற்பட்ட, ஆரோக்கியமான, 120 கிலோவுக்குக் குறைவான உடல் எடை கொண்டவர்கள் யாரும் இந்த விளையாட்டில் தாராளமாகக் கலந்துகொள்ளலாம். நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு பயிற்சியாளர்களும் அவர்களின் குழுவினரும் கீழே குதிப்பதற்கு நம்மைத் தயார் செய்கின்றனர். உற்சாகமான அவர்களின் பேச்சு மனதைரியத்தைக் கூட்டுகிறது. சிலர் குதிப்பதற்குச் சில விநாடிகள் முன்னர் பயந்து விலகிச் சென்றால் அவர்களை இக்குழுவினர் பேசி ஊக்குவிக்கின்றனர்.

அப்படி ஒருவருக்கு 2 முறை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மேடையிலிருந்து நாமாகவே குதிக்க முற்பட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். இதற்காக இக்குழுவினர் நம் பயத்தைப் போக்க நம்மிடம் நிறையப் பேசுகின்றனர். நாம் தயார் என்று தெரிந்ததும் குதிக்கும் உத்திகளைக் கூறி, அனைத்து இணைப்புகளையும் சரி பார்க்கின்றனர். பின்பு, மேடையின் விளிம்புவரை வந்து ஊக்கம் அளிக்கின்றனர். அப்புறமென்ன... நாம் குதிக்க வேண்டியதுதான்.

குதித்த பின் அடுத்த 30 விநாடிகள் பறவையைப் போலப் பறக்கும் அனுபவத்தை இப்போது நினைத்தாலும் எனக்குச் சிலிர்ப்பூட்டுகிறது! மேலிருந்து குதிக்கும்போது, நாம் நம்மை அவ்வளவு இலகுவாக உணர்வோம். இந்தப் பரந்து விரிந்த உலகில், நாம் ஒரு சின்னத் துரும்பு எனும் எளிமையான உணர்வு நம்மை ஆட்கொள்கிறது. நம் கர்வம், ஆணவம், பயம் உள்ளிட்ட அனைத்தும் தகர்ந்து போகின்றன. நான் பெரியவன், நீ சிறியவன் என்கின்ற பாகுபாடுகள் எல்லாம் காணாமல் போகின்றன.

உயரங்களைக் கண்டு பயப்படுவோருக்கு இது ஒரு எல்லை கடக்கும் நிகழ்வு. பெரிய உயரங்களை அளவிட முயற்சி செய்வோருக்கு இது முதல் படி. உலகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் இதைப் போன்ற இன்னும் உயரமான பங்கீ ஜம்பிங் மேடைகள் உருவாகியுள்ளன. அவை எல்லாமே மனித எல்லைகளுக்கு ஒரு சவால்தான். என்னுடைய இந்த முதல் பங்கீ ஜம்பிங், என்றுமே என் முதல் அனுபவமாகவே இருக்கும், கடைசி அல்ல!

கட்டுரையாளர், புவியியல் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் தொடர்புக்கு: archana4890@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x