Last Updated : 25 Jan, 2014 12:00 AM

 

Published : 25 Jan 2014 12:00 AM
Last Updated : 25 Jan 2014 12:00 AM

எங்கும் நிறைந்திருக்கும் கண்ணாடிகள்

மனிதனின் கண்டுபிடிப்புகளில் முக்கியமான, சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு ‘கண்ணாடி, கண்ணாடியை மென்மையான குழந்தையின் மனத்திற்கு ஒப்பாகச் சொல்கிறோம். இந்தக் கண்ணாடிக் குழந்தை 5 ஆயிரம் வருட வயது மூப்பு கொண்டது.

கண்ணாடியின் கதை

முதன்முதலில் மனிதன் பார்த்து வியந்த கண்ணாடி இயற்கையாக உருவானததாகத்தான் இருக்க முடியும். எரிமலைகள் வெடித்துச் சிதறும்போதும், மின்னல் தாக்கும்போதும் உண்டாகும் அதிக வெப்பத்தால் பாறைகள் உருகி அதற்குப் பளபளப்புத் தன்மை வந்துவிடும். இந்தப் பளபளப்புத்தன்மையுள்ள பொருளைத்தான் கண்ணாடி என்று பின்னால் அழைத்தோம். கற்கால மனிதன் இதைக் கத்தியாகப் பயன்படுத்தியிருக்கிறான்.

மனிதன் முதன்முதலாகக் கண்ணாடியைக் கண்டுபிடித்தது ஒரு சுவாரஸ்யமான தற்செயல் நிகழ்வில்தான். அது கி.மு. 5000இல் சிரியாவில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம்தான் கண்ணாடி கண்டுபிடிப்புக்கு ஆதரமாக இருந்ததாக பண்டைய ரோமனிய வரலாற்றாசிரியர் பாலினி (கி.பி. 23 – 79) சொல்கிறார். சிரியக் கடற்கரை ஓரத்தில் கட்டடக் கட்டுமானத்திற்கான கற்களை விற்கும் வியாபாரிகள் சிலர் ஓய்வெடுப்பதற்காகக் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்திருக்கிறார்கள். பசியாறுவதற்காகச் சில கற்களைக் கொண்டு அடுப்பு மூட்டியிருக்கிறார்கள். பிறகு எதோ பேச்சுச் சுவாரஸ்யத்தில் அடுப்பு மூட்டியதையே மறந்துவிட்டனர். அந்தக் கற்கள் சூடாகி உருகித் திரவமாக ஓடி, பளபளப்பாக நிலத்தில் உறைந்துவிட்டது. மிக வினோதமான அந்தப் பொருளை அவர்கள் விலகி நின்று ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறார்கள்.

செயற்கைக் கண்ணாடிகள்

செயற்கையான கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டது எப்போது என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. கி.மு.1500 ஆண்டுக் காலகட்டத்தில் மெசபடோமிய, எகிப்தில் கண்ணாடிப் பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். சிலிக்கா மணலில் செய்த பாத்திர அச்சுகளை உருகிய கண்ணாடி திரவத்திற்குள் தோய்த்துக் கண்ணாடிப் பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இம்முறை 500 வருடங்களில் மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளில் பரவி கண்ணாடி தயாரிப்புத் தொழில் வெற்றிகரமாக இருந்துள்ளது. ஆனால் கண்ணாடித் தயாரிப்புக்கு கடும் உழைப்பும், அதிகப் பணமும் தேவைப்பட்டன. அதனால் கண்ணாடி விலை உயர்வானதாக இருந்தது. அக்காலகட்டத்தில் கண்ணாடிப் பொருட்களை மன்னர்களும், பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அறிவியல் வளர்ச்சிதான் வர்க்கப் பாகுபாடுகளைக் களைந்தது எனலாம்.

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான கண்ணாடிக் குடுவைகளில் எகிப்திய மன்னன் மூன்றாம் பாரோ தாவ்ட்மோஸ் (1504-1450 BC) பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாக அகழ்வாராய்ச்சிக் குறிப்புகள் சொல்கின்றன. அவர் ஆசியாவில் இருந்து பிடித்து வந்த கைதிகள் மூலமாகத்தான் எகிப்தில் இந்தத் தொழில் நுட்பம் வந்ததாகவும் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது.

புதிய நுட்பம்

முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய முறைதான் ஆயிரம் வருஷமாகப் புழக்கத்தில் இருந்துவந்தது. பிறகு கண்ணாடித் தயாரிப்புல புதிய தொழில்நுட்பம் வந்தது. கி.மு. 27 ஆண்டுக் காலகட்டத்தில் ஊதுகுழல் கருவி (Blowpipe Tool) சிரியன் பொறியாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்படுகிறது. ஒரு நீண்ட இரும்புக்குழலின் நுனியைக் கண்ணாடி திரவத்தின் மேல் வைத்து அதோட மறுமுனையில் இருந்து காற்றை ஊதி திரவத்தை அச்சுகளுக்குள் படியவைப்பதுதான் இம்முறை. இந்த யுக்தி கண்ணாடி தயாரிப்பை ரொம்பவும் எளிமையாக்கியது. அதனால் கண்ணாடி விலையும் குறைந்து சாதாரண மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய ஆண்டுகள் வரைக்கும் கால்சியமும் இரும்புத்தாதுக்களும் கலந்த மணல் 1700 சென்டிகிரேடுக்கு மேல சூடாக்கும்போது உண்டாகுகிற பளபளப்பான திரவத்தை வைத்துதான் கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. கி.பி. 1ஆம் நூற்றாண்டில் சோடியம் கார்பனேடையும் கால்சியம் கார்பனேடையும் கலந்து உருக்கும் இரசாயன முறை கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு அதனுடன் மக்னீசியம் ஆக்ஸைடு சேர்த்ததும் கண்ணாடிக்கு ஒளிபுகும் தன்மை வந்தது. எகிப்தின் அலெக்ஸாண்டியா (Alexandria) நகரத்தில் இம்முறை கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டுமல்ல அலெக்ஸாண்டியா நகரம் கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்தே கண்ணாடி உற்பத்தியின் மையமாக இருந்திருக்கிறது.

ஒளிபுகும் தன்மை வந்த பிறகுதான் கண்ணாடிகள் ஜன்னல்களாக அதிகம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் இருந்தே இந்தியாவில் கண்ணாடி ஆபரணங்களாகப் புழக்கத்தில் இருந்திருக்கிறது.

கண்ணாடிகளின் தேவை அதிகமாக அதிகமாக அதன் மூலப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் சோடாவுக்குப் பதிலாக பொட்டாசியத்தைச் சேர்த்துக் கண்ணாடி தயாரிக்கும் புதிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தார்கள். மரங்களை எரித்து பொட்டாசியம் மூலப் பொருளைப் பெற்றார்கள்.

படிகக் கண்ணாடிகள்

கி.மு. 15ஆம் நூற்றாண்டில் வெனிசுலா நாட்டு தொழில் நுட்பவியலாளர்கள் தெளிவான படிகக் கண்ணாடிகளைக் (Clear crystal Glass) கண்டுபிடித்தார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜ் ராவென்ஸ்கராப் தெளிவான படிகக் கண்ணாடிகளின் தொழிநுட்பத்தைச் செறிவாக்கினார். கண்ணாடி தயாரிப்பிற்கு முதன்முதலாகக் காப்புரிமை பெற்றது இந்த முறைக்குத்தான். பொட்டாசியத்துக்குப் பதிலாகக் காரீய ஆக்ஸைடுகள் கலந்ததால் கண்ணாடி கடினமானது. அதனால் அதை எளிதாக வெட்டவும் செறிவாக்கவும் முடிந்தது. இதனால இவ்வகை படிகக் கண்ணாடிகள் விஞ்ஞானத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உதவின.

இத்தாலியில் கி.பி. 1284ஆம் ஆண்டு சால்வினோ டி அமர்தே (Salvino D'Armate) மூக்கு கண்ணாடியைக் கண்டுபிடித்தார். 1608இல் ஹாலந்தைச் சேர்ந்த மூக்கு கண்ணாடி செய்யும் தந்தையும் மகனுமான ஹன்ஸ் என்ஸனும் (Hans Jansen) சக்கரியாஸ் என்ஸனும் (Zacharias Jansen) முதல் தொலைநோக்கியைக் (Telescope) கண்டுபிடிக்கிறார்கள்.

மூக்கு கண்ணாடி கண்டுபிடித்ததன் உந்துதலாகக் கொண்டுதான் ஹாலந்தைச் சேர்ந்து ஆண்ட்டன் வான் லியுவென்ஹொக் 1632ஆம் ஆண்டு நுண்ணோக்கிய (Microscope) கண்டுபிடித்தார். அந்த நுண்ணோக்கி மூலமாக அவர் முதன்முதலாகப் பாக்டீரியாவைப் பார்த்தார். அது அறிவியல் துறையின் புரட்சிக்கு வித்திட்டது.

16ஆம் நூற்றாண்டில் முகம் பார்க்கும் கண்ணடித் தயாரிப்பு பிரபலமடைந்தது. கண்ணாடிச் சட்டகத்தின் மேற்பரப்பு இயந்திரங்களின் உதவியால் பளபளப்பாக்கப்பட்டு, கண்ணாடியின் ஒரு பகுதி ரசம் பூசி மறைக்கப்பட்டது. ஆனால் இத்தாலியில் ஒரு அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த முகம் பார்க்கும் கண்ணாடி கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதன் மறுபுறம் பிம்பம் தெரிவதற்காக சிவப்பு அரக்கால் பூசப்பட்டிருந்தது.

1903ஆம் ஆண்டு வருஷத்தில் அமெரிக்காவில் மைக்கெல் ஜோசப் ஓவன் என்பவர் கண்ணாடி பாட்டில் தயாரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அது மிக விரைவாக நிமிடத்திற்கு 240 பாட்டில்களைத் தயாரித்தது. இது கண்ணாடி பாட்டிகள் பயன்பாட்டை அதிகமாக்கியது. அதே ஆண்டு பிரான்ஸைச் சேர்ந்த எடாவ்ரெட் பெனடிக்ட்டஸ் (Edouard Benedictus) வாகனங்களின் உபயோகிக்கப்படும் Laminate கண்ணாடிகளைக் கண்டுபிடித்தார்.

காலையில் எழுந்ததும் முதன்முதலாகப் பார்ப்பது கண்ணாடிதான். ஒருநாளில் பலமுறை முகத்தைக் கண்ணாடியில் பாத்துக்கொள்கிறோம். கண்ணாடியைப் பூஜையறையில வைத்துப் பூஜிக்கும் வழக்கமும் இருக்கிறது. அதுமட்டுமல்ல முகம் பார்க்கும் கண்ணாடி, மூக்கு கண்ணாடி, கண்ணாடிப் பாத்திரங்கள், மின்விளக்கு, ஜன்னல் கண்ணாடிகள் என அன்றாட வாழ்க்கையில் கண்ணாடிகளின் பயன்பாடு முக்கியமானதாக இருக்கிறது. உலகமே கண்ணாடியால் உருவானதுபோல எங்கும் கண்ணாடிகளால் நிறைந்திருக்கிறது. எங்கும் நிறைந்திருக்கும் ஒரு ஸ்தூலமான கடவுளாகக் கண்ணாடிகள் இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x