Published : 05 May 2017 10:26 AM
Last Updated : 05 May 2017 10:26 AM

கோலிவுட் கிச்சடி: வீட்டைக் கொடுத்த சிவகுமார்

சென்னைத் தியாகராய நகரில் புகழ்பெற்றத் திரையரங்காக இருந்து, தற்போது பல்நோக்கு அரங்காக மாறிவிட்டது நாகேஷ் திரையரங்கம். அதன் பின்பகுதியில் இருக்கும் கிருஷ்ணா தெருவில்,பல ஆண்டுகளாக தன் குடும்பத்தோடு வசித்து வந்தார் பன்முகக் கலைஞர், நடிகர் சிவகுமார். தற்போது அவரது மகன்கள் சூரியாவும் கார்த்தியும் இணைந்து தங்கள் அம்மாவின் பெயரில் கட்டியிருக்கும் ‘லக்ஷ்மி இல்ல’த்துக்கு குடி பெயர்ந்துவிட்டார். இதனால் கிருஷ்ணா தெருவில் தன் சொந்த உழைப்பில் கட்டிய முதல் வீட்டை, ‘அகரம் ஃபவுண்டேஷன்’ அறக்கட்டளைக்குத் தானமாக வழங்கிவிட்டார் சிவகுமார்.

சாய் பல்லவிக்கு ஏற்றம்

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற `சார்லி' படத்தின் தமிழ் மறுஆக்கத்தை இயக்குநர் விஜய் இயக்க, அதில் மாதவன் நடிப்பதாக இருந்தது. அந்தப் படத்தில்அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் அந்தப் படத்துக்கு முன்பே தற்போது விஜய் வேறொரு படத்தை இயக்க இருக்கிறார். அதில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடிக்க இருக்கிறாராம் சாய் பல்லவி. `கரு' என்று தலைப்பு சூட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படும் அந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

காதலும் காலணியும்

‘புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' படங்களின் இயக்குநர் ஜெகன்நாத். டிவிடியை நம்பாமல் அசலான கதைகளைப் பிடித்து விறுவிறுப்பான திரைக்கதை எழுதுவதில் கெட்டிக்காரர் எனப் பெயர் பெற்றவர். தற்போது இவர் இயக்கிவரும் படம் ‘என் ஆளோடச் செருப்பைக் காணோம்’. கயல் ஆனந்திதான் செருப்பைத் தொலைத்த கதாநாயகி. அதைத் தேடி அலையும் காதலன் ’பசங்க’, ‘கோலிசோடா’ படங்களின் மூலம் கவனம் பெற்ற பாண்டி. இந்தப் படத்துக்காக தமிழ் என்ற பெயருடன் நாயகனாக அறிமுகமாகிறாராம். செருப்புக்குப் பின்னால் அப்படி என்ன இருந்துவிடப்போகிறது என்று கேட்டால் “அது காணாமல் போனதன் பின்னணியில் ஒரு வலுவான காரணம் இருக்கிறது. அது ரசிகர்களைக் கலங்கடிக்கும்” என்கிறார் இயக்குநர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x